இனி செயற்கை யூரியா தேவையில்லை
காற்று.. கண்களுக்கு தெரியாமல் வாழ்வு கொடுக்கும் ஒரு கொடையாளி. நம்மை சுற்றி நடக்கும் பலப்பல சுழற்சிகளுக்கு ஆதாரமாக இருப்பது காற்று. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு உடலின் தோற்றமும், சிதைத்தலும் இந்த காற்றின் உதவியுடனேயே நடக்கிறது. சற்று சிந்தித்துப்பார்த்தாலே தெளிவாகும், பிறந்த உடலுக்கும் காற்று அவசியமாகும், அந்த உடல் இறந்தபின் காற்றில்லையானால் கெட்டு அழுகி துர்நாற்றம் வீசும். காற்றுடன் சேர ஒன்று சிதைந்து போகும் அல்லது காய்ந்து சுருங்கி மக்கிப்போகும்.
சுவாசிக்கும் காற்றில் உயிர் சக்தி உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். கண்ணில் பார்க்கவில்லை என்றாலும் அதன் அவசியத்தினை ஒவ்வொரு நொடியும் நுகர்ந்துக்கொண்டே இருக்கிறோம்.
சரி, காற்றில் நாம் உயிர்வாழ தேவையான ஆக்ஸிஜன் எனப்படும் உயிர்க்காற்று மட்டுமே உள்ளதா… அதனுடன் பல பல கலவைகளும் சேர்ந்தே தான் உள்ளது. அதுவும் நைட்ரஜன் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை விட மூன்றுமடங்கு அதிகமாக உள்ளது.
உலகில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் அத்தியாவசியமானது தான் இந்த நைட்ரஜன். மனித செல்களின் செயல்பாட்டிற்கு அவசியமானதாகவும் உள்ளது நைட்ரஜன்.
தாவரங்களின் ஒளிசேர்க்கை, பச்சையம் போன்றவற்றிற்கு அத்தியாவசியமாக இருப்பது நைட்ரஜன் சத்து. பேரூட்ட சத்துக்களில் முதன்மையானதுமானதும் இந்த நைட்ரஜன் சத்து. தழைச்சத்து எனப்படும் இந்த நைட்ரஜன் சத்துக்கள் சீரான முறையில் கிடைத்தால் மட்டுமே செடி, கொடி, மரங்கள் பச்சை பசேல் என்று காணப்படுவதுடன் செழிப்பாக வளர்ந்து பூ, காய் என்று தனது அடுத்த நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். செடிகள் செழிப்பாக பச்சை பசேல் என்று இல்லாது இருந்தால் அதற்கு போதுமான தழைசத்துக்கள் இல்லை என்பதுடன், அதில் பூஉதிர்தல், காய்ப்பு குறைதல் போன்றவைகளும் காணப்படும்.
பல இடங்களில் ஏன் நமது வீட்டில் இருக்கும் சிறு தோட்டத்திலும் இலைகள் சத்தற்று மஞ்சள் நிறமாகவும், பழுப்பு நிறத்திலும் காணப்படுவதனைப் பார்த்திருப்போம், இதற்கு காரணம் தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்துக்குறைபாடு தான் காரணம். இலைகள் மஞ்சளாகவும், பழுதும் உதிர்ந்தால் எங்கிருந்து ஒளிசேர்க்கை நடக்கும், காய்களை எவ்வாறு பெறமுடியும்.
உலக உயிரினங்களின் வாழ்வாதாரம் தாவரங்களை சார்ந்தே இருக்க, தாவரங்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை ஒளிசேர்க்கை (photosynthesis) மூலமும், அதனால் ஏற்படும் பச்சையம் (chlorophyll) மூலமுமே சார்ந்திருக்கிறது. இதற்கு துணையாக இருப்பது தான் நைட்ரஜன் சத்துக்கள். இந்த சத்தினை செடிகள் பெறவே இன்று பல பல இரசாயனங்களை மண்ணில் கொட்டுகின்றனர். குறிப்பாக யூரியா எனப்படும் செயற்கை நைட்ரஜன். இதனால் மண்ணிற்கு மட்டுமல்ல கேடு. மனிதர்களுக்கும், மனிதர்கள் உண்ணும் உணவிற்கும் சேர்த்து கேடு ஏற்படுகிறது.
சமீபத்தில் பல ஆராய்ச்சிகள் உலக வெப்பமயமாக்கல், அதனுடன் நிலத்தடி நீர் குறைபாடு, காற்று மாசு போன்ற பலவற்றிற்கும் இந்த செயற்கை நைட்ரஜன் காரணமாக உள்ளதாக அறியப்படுகிறது. இதனால் பலப்பல உயிர்கொல்லி நோய்களும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் மண்ணில் கொட்டப்படும் செயற்கை நைட்ரஜனை செடிகள் முழுவதுமாக எடுத்துக்கொள்வதும் இல்லை, சொற்பளவு எடுத்துக்கொள்ள பன்மடங்கு அளவு கொட்டப்படுகிறது. மீதமிருக்கும் இந்த இரசாயனம் காற்றிலும், நீரிலும் தான் கலக்கிறது. அதனாலேயே பாதிப்புகள் இந்த இரசாயனத்தைக் கொண்டு விளைந்த உணவை உட்கொள்ளும் சாமானியர்களுக்கும் சாதாரணமாக காற்றை சுவாசிக்கும் நீரினை பருகும் பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது.
சரி, காற்றில் 78 சதவீதத்திற்கும் மேல் அதாவது ஆக்ஸிஜனை விட மூன்றுமடங்கு அதிகம் நைட்ரஜன் உள்ளது என்று பார்த்தோம், பின் ஏன் செயற்கை நைட்ரஜன்?
நைட்ரஜன் நேரடியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அவற்றை அவ்வாறே உயிரினங்களாலும், தாவரங்களினாலும் கிரகித்துக்கொள்ள முடியாது. அவை நைட்ரேட்டாகவும் அல்லது நைட்ரைட்டாகவும் உருமாறினால் மட்டுமே செடிகள் கூட உட்கிரகிக்க முடியும்.
நமது விவசாயிகள் இந்த நைட்ரஜனை காற்றிலிருந்து மண்ணில் நிறுத்த ஒரு எளிய முறையை மேற்கொண்டு பல பல ஆண்டுகாலமாக செழிப்பாகவும் சுலபமாகவும் விவசாயம் செய்தனர். அதுதான் பயிர் சுழற்சி….
பயிர் சுழற்சி
பள்ளி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.. இன்று நிஜத்தில் இந்த முறை காணாமல் போனதே பல இழப்புகளுக்கு காரணமாகிறது. சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு போன்றவை எட்டாக்கனியாக இன்று இருப்பதற்கும் இந்த பயிர் சுழற்சி முறை காணாமல் போனதே காரணம்.
நெல், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்கள் என்று பன்முகத்தமையுடன் இருந்த நிலங்கள் இன்று ஒரு பயிர் சாகுபடிமுறையை மட்டுமே மேற்கொள்வதால் இயற்கையான செழிப்பான மண், காற்று, நீர், உணவு என அனைத்தும் காணாமல் போனதற்கும் மாசடைந்ததற்கும் காரணம்.
பயிர் சுழற்சியில் என்ன கிடைக்கிறது..
காற்றில் இருக்கும் நைட்ரஜனை பயிறுவகைப் பயிர்கள் காற்றிலிருந்து பிரித்து மண்ணிற்கும், செடிகளுக்கும் தேவையான முறையில் அளிக்கிறது. இதனை பயிறுவகைப் பயிர்கள் தங்களின் வேர்களில் உள்ள வேர்முடிச்சுகளில் இருக்கும் சிலவகை நுண்ணுயிர்களால் உருவாக்குகிறது. இந்த நுண்ணுயிர்கள் இந்த நைட்ரஜனை செடிகள் உட்கிரகிக்கும் வகையில் மாற்றி மண்ணிற்கு இந்த நைட்ரஜனை கொண்டுவந்து நிலைநிறுத்துகிறது. இவற்றாலேயே பயிர்கள் செழிப்பாகவும் இருந்தது.
அதனால் பயிர்களை சுழற்சி முறையில் ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றி பயிரிடுவதால் மண்ணும் வளமாக இருந்தது, பயிர்களும் தங்களுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை மண்ணில் மற்ற பயிர்களுக்கு அளித்தது.
மேலும் இடி, மின்னல் போன்றவற்றால் காற்றிலிருக்கும் நைட்ரஜன் கரைந்து மழையுடன் செடிகளுக்கு தேவையான வகையில் எளிதாக கிடைக்கும். இதனாலேயே இடி மின்னல் மழை பொழிவிற்கு பின் செடிகளும், மரங்களும் பச்சை போர்வை போர்த்தியது போல் செழிப்பாக காணப்படுவதும். இதுமட்டுமல்லாமல் காய்கறி உரம், கால்நடை கழிவுகளின் மக்குஉரம் போன்றவை மூலமும் செடிகள் உட்கிரகிக்கும் வகையில் நைட்ரஜன் சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கும்.
யூரியா போன்ற செயற்கை நைட்ரஜனால் உடலுக்கும், சுற்றுசூழலுக்கு பேராபத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றை தவிர்த்து நமது வீடுகளில் இருக்கும் தோட்டத்திற்கும், விவசாய நிலத்திற்கும் எளிமையாக இந்த முறைகளைக்கொண்டும், கோமூத்திரம் (நீருடன் கலந்து) கொண்டும் தழை சத்துக்களை – பச்சையத்தையும், செழிப்பையும் பெறலாம்.
மேலும் அவ்வப்பொழுது சீராக காய்கறி கழிவுகளை இயற்கையுரமாக மாற்றி செடிகளுக்கு இடுவதும் செடிகளுக்கு தேவையான நைட்ரஜனை சிறு அளவில் பெற உதவும்.
விவசாய நிலங்களில் ஆங்காங்கே அல்லது ஓரங்களில் வேர்முடிச்சுகள் கொண்ட பயிர் வகைப் பயிர்களை வளர்ப்பதால் இயற்கையாக பயிர்களுக்கு தழைச்சத்தினை பெறலாம்.
வீடுகளில் நிலத்தில் செடிகளை வளர்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பயிறுவகைப் பயிர்களை செடிகளுக்கு நடுவில் அங்கங்கே வளர்க்கலாம்.
உதாரணத்திற்கு அகத்தி, தட்டப்பயிறு, நிலக்கடலை, துவரை, உளுந்து போன்றவற்றை வளர்க்கலாம். இந்த பயிருவகைப் செடிகள் மற்ற செடிகளுக்கும் தேவையான தழைச்சத்தினை இந்த செடிகள் காற்றிலிருந்து மண்ணில் நிலைநிறுத்தும்.
தொட்டிகளில் செடிகளை வளர்ப்பவர்கள் பயறுவகை பயிர்களை வளர்ந்த மண்ணை அடுத்த முறை தொட்டியை மண்ணால் நிரப்பும் நேரத்தில் சேர்த்து நிரப்பலாம்.
பயிறுவகைப் பயிர்களை வளர்ப்பதால் தழைச் சத்துக்கள் மட்டுமல்ல பூச்சி கட்டுப்பாடு, மண்வளம் அதிகரிக்கும் என பலவகைகளில் நமது தோட்டத்திற்கு நன்மை ஏற்படும். எளிதாக அகத்தி கீரைச்செடிகளை வளர்க்கலாம்.
காற்றை கரைத்து உணவாக மாற்றும் மந்திரம் இந்த பயிறுவகைப் பயிர்களிடம் உள்ளது. இனி செயற்கை யூரியா தேவையில்லை இயற்கையாக தழைச்சத்தினை நமது மண்ணிற்கு அளிப்போம்.
காற்றை கரைத்து உணவாக மாற்றும் மந்திரம் இந்த பயிறுவகைப் பயிர்களிடம் உள்ளது. இதனைக்கொண்டு எளிதாக இயற்கை முறையில் உணவினை பெறலாம். மண்ணிற்கும், நமக்கும் இதனால் பலப்பல நன்மைகளும் ஆரோக்கியமும் பெருகும். இதை விட்டுவிட்டு இரசாயனங்களைக் கொண்டு இழந்ததை ஈடுகட்டலாம் என்று இரசாயனங்களை மண்ணில் கொட்டுவதால் மண் மலடாவது மட்டுமல்ல மனிதனும் ஆரோக்கியக்கேட்டிற்கு ஆளாகிறான்.