மூலிகை பூச்சி விரட்டி
பூச்சிகளை எவ்வாறு இந்த மூலிகைகளைக் கொண்டு எளிமையாக விரட்டுவது என்பதை பார்க்கலாம். பொதுவாகவே பூச்சிகளுக்கு மூலிகைச் செடிகளின் வாசம் பிடிக்காது.
பூச்சி விரட்டி… பூச்சிகளை விரட்டத்தான் போகிறோமே தவிர பூச்சிகளை கொள்ளப்போவதில்லை. பூச்சி கொல்லியல்ல, பூச்சி விரட்டி.
சரி, பூச்சியை விரட்டுவது என்றால் பூச்சிக்கு பிடிக்காத சிலவற்றை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பூச்சியை விரட்ட முடியும். இது பொதுவானது தானே, நமக்கு யாராவது இருப்பது பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்குப் பிடிக்காத சிலவற்றை செய்வோம், அதேபோலத்தான்.
பூச்சிகளுக்கு பிடிக்காத மூன்று விஷயங்கள்
இங்கு பூச்சிகளை விரட்ட பூச்சிகளுக்கு பிடிக்காத மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்.
1. பூச்சிகள் பொதுவாக வந்து அமர ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும், அந்த இடத்தை அதற்கு அளிக்காமல் இருக்க வேண்டும். அதாவது அதற்கு ஏற்ற இடத்தை, அந்த சூழலை ஏற்படுத்த கூடாது.
2. அடுத்ததாக பூச்சிகள் அமர்ந்து விட்டாலும் அவை அந்த இலை, பழம், காய் அல்லது பூவின் வாசனையை கொண்டு கவர்ந்திழுக்கப்படும். ஆக பூச்சிகள் நுகரும் பொழுது அவற்றிற்கு பிடிக்காத சில வாசனையை அளிக்க வேண்டும்.
3. மூன்றாவது, பூச்சிகள் வந்து அமர்ந்து, அதன் வாசனையை நுகர்ந்து, கவர்ந்த பின் இலை, காய், பூ, பழம் போன்றவற்றை கடிக்கத்தொடங்கும். அவ்வாறு கடிக்கத் தொடங்கும் அந்த பூச்சிகளுக்கு பிடிக்காத சுவையை அளிக்க வேண்டும். அதாவது அதற்கு பிடிக்காத சில சுவையை அளிப்பதால் அதனை சுவைக்கமுடியாமல் பூச்சிகள் ஓடிவிடும்.
இவை மூன்றையும் சரியாக கணக்கிட்டு கடைபிடித்தாலே போதும் பூச்சிகள் தன்னாலே ஓடிவிடும். இந்த சூட்சமத்தைக் கொண்டு எளிதாக பூச்சிவிரட்டியை தயாரிக்கலாம்.
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க நமக்கு பெருமளவில் உதவப்போவது மூலிகை செடிகள் மற்றும் சாதாரணமாக எல்லா இடங்களிலும் விளைந்திருக்கும் செடிகள். இவ்வகையான தாவரசாறே மூலிகை பூச்சிவிரட்டியாகும்.
இந்த பூச்சிவிரட்டி தயாரிக்க முதலில்
1. கசப்பு சுவையுடன்இருக்கும் இலைகளை தேர்வு செய்யவேண்டும். அடுத்ததாக
2. இலை, தண்டுகளை ஒடித்தால் பால் வரக்கூடிய தன்மை கொண்ட செடிகளை, இலைகளை தேர்வு செய்ய வேண்டும்.
3. மூன்றாவதாக, ஆடு, மாடு உண்ணாத இலை தலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. துர்நாற்றம் வீசும் இலைகளாக இருக்கவேண்டும்.
அதாவது பால் வரக்கூடிய செடிகள் எருக்கு, காட்டமணக்கு, சப்போட்டா, பப்பாளி போன்றவை வழுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். இதனால் பூச்சிகளுக்கு இலைகள், பழங்கள், காய்களின் மீது உட்கார பிடிமானம் இருக்காது. பிடிமானம் இல்லையானால் பூச்சிகள் முயன்று முயன்று பார்த்து ஓடிவிடும்.
அதேபோல் கசக்கும், துர்நாற்றம் வீசும், ஆடுமாடு திண்ணாத செடிகள் பூச்சிகளுக்கு பிடிக்காதவை.. உதாரணத்திற்கு நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, ஆடாதோடை, வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய், ஊமத்தை, பீச்சங்கு, சீதா, பீ நாரி போன்றவை.
இந்த மூலிகை, காட்டுச்செடிகளில் ஒவ்வொரு வகையில் (பால் வரக்கூடியது, கசப்பு, துர்நாற்றம், ஆடுமாடு திண்ணாதது) ஐந்து இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலை தழைகளை நறுக்கி, உரலில் இட்டு மைய இடித்துக்கொள்ள வேண்டும். பின் அவற்றுடன் சமஅளவு நாட்டு மாட்டின் கோமூத்திரத்தை சேர்த்து ஒருவாரம் நொதிக்க விட வேண்டும். ஒருவாரத்திற்கு பின் அவற்றை வடிகட்டி அதனுடன் பத்து பங்கு நீர் சேர்த்து செடிகளின் மேல், இலை, காய்கள் போன்றவற்றில் தெளிக்கவேண்டும். மேலும் இதனை விவரமாக தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – இயற்கை பூச்சி விரட்டி.
இந்த இயற்கை பூச்சி விரட்டி பூச்சிகளை மட்டும் விரட்டாமல் சிறந்த வளர்ச்சிஊக்கியாகவும் செயல்படும். இதனால் பூச்சிகள் ஓடுவதுமட்டுமல்ல சிறந்த செழுமையான காய்களையும், பழங்களையும், கீரைகளையும் பெறமுடியும்.