அழகு குறிப்புகள்

யாருக்கு தான் அழகா இருக்க வேண்டும் என்று ஆசை இருக்காது…

அழகு என்பது நிறத்தைக் குறிக்க கூடிய விஷயமல்ல நமது செயலையும் சிந்தனையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் ஆயுதம். இந்த ஆயுதத்திற்கு மேலும் வலுவூட்ட கூடிய சிறந்த உணவுகளை இயற்கை உணவுகளை அவ்வப்பொழுது நாம் எடுத்துக் கொள்ள நமது உள்ளுறுப்புகளும் நமது அக அழகும் பன்மடங்கு பெருகும்.

அழகு என்றதும் புற அழகை மட்டும் அது குறிக்காது அக அழகையும் சேர்த்தே குறிக்கும். புற அழகு என்பது வெறுமனே கவர்ச்சியை மட்டுமே குறிக்கும் ஒரு பொருளாக கூட பார்க்கலாம். ஆனால் அழகு என்பது அதிலும் தமிழில் பாரம்பரியத்தில் நமது பரத பாரம்பரியத்தில் அகமும், புறமும் சேர்ந்ததே.

அக அழகை பேணிப்பாதுகாக்க அது வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு தேஜஸை கொடுக்கும் என நம் முன்னோர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். அதேப்போல் புற அழகும் அக அழகும் ஒருசேர அமையும் பொழுது அழகு என்பது இயற்கையான ஒரு விஷயமாக இருக்கும்.

அக, புற அழகை அதிகரிக்க நமது எண்ணங்கள், சிந்தனை, செயல், சுற்றுப்புறம், உணவு, பழக்கவழக்கங்கள் போன்றவை ஒருசேர இருக்க மிக எளிமையானதாக இருக்கும். இந்த அழகு நம்மை மேலும் மெருகேற்றும் அழகாக இருக்கும். இவற்றோடு அழகை மெருகேற்ற சில எளிய வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

சருமம் பளபளக்க

சருமம் பளபளக்க நாட்டு வாழைப்பழங்களை உட்கொள்வது சிறந்தது. இந்த வாழைப்பழங்களை உட்கொண்டபின் நமக்கு கிடைக்கும் அந்த வாழைப்பழத் தோலின் உட்புறத்தை முகத்தில், சருமத்தில் தேய்த்து வர முகம், சருமம் பளபளக்கும்.

முகச்சுருக்கம் நீங்க

மன உளைச்சல், மன சோர்வு இல்லாமல் இருக்க முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். அதுமட்டுமில்லாமல் சீரான இரவு தூக்கம் முகத்தில் வரக்கூடிய சுருக்கங்களை மறையச் செய்யும். அதோடு சேர்ந்து முட்டை கோசை விழுதாக எடுத்து அவ்வப்பொழுது முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் நீங்கும். இரவு தூக்கம் அவசியமானது. அதுவும் பத்து மணிக்குள் தூங்க செல்வது மிகவும் சிறந்தது.

சருமம் மினுமினுக்க

உடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இரவு தூக்கம் உதவக்கூடியது. உறங்கச் செல்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவிவிட்டு குங்குமப்பூ, மஞ்சள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட்டு உறங்கச் செல்வது உடல் மினுமினுப்பை கூட்டும். அதுமட்டுமல்லாமல் சருமத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை சரிசெய்ய இந்த கலவை உதவும். சருமத்தை இவ்வாறு மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்வதால் சருமத்திற்கு மட்டுமல்லாமல் புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும், உடல் உள்ளுறுப்புகளில் தாக்கக்கூடிய கிருமிகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.

உடல் வனப்பு அதிகரிக்க

முருங்கை பிசின் உடல் வனப்பை பெருக்கும் சிறந்த பொருள். முருங்கை பிசினை பொடி செய்து அதனை அன்றாடம் பாலில் கலந்து உண்டு வர உடல் வனப்பு அதிகரிக்கும்.

சருமம் பளபளக்க

ஆரஞ்சு பழங்களை அன்றாடம் உண்டு வருவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். குறிப்பாக வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு முக்கியமான பழம் கமலா ஆரஞ்சு பழம். கண்கள் பிரகாசிக்கவும், சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கவும் ஆரஞ்சு பழங்கள் உதவும். ஆரஞ்சு பழங்களை உண்டபின் அந்த ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடியாக தயாரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது பால் கலந்து முகத்தில் பூசி வர சருமம் பளபளக்கும். இந்த ஆரஞ்சு பழத் தோல்களைக் கொண்டு ஒரு இயற்கை குளியல் பொடியையும் தயாரித்து குளிக்க பயன்படுத்தலாம்.

படை, தேமலுக்கு

படை, தேமல் போன்ற தொந்தரவுகளுக்கு குப்பைமேனி இலை, மஞ்சள், வேப்பம் பூ ஆகியவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பூசி வர சருமத்தில் வரக்கூடிய பாதிப்புகள் நீங்கும்.

(3 votes)