கிராமங்களில் நாட்டு விதைகள்

விதைகள் உணவிற்கு மட்டும் ஆதாரமில்லை. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படை ஆதாரமாகும். இந்த உலகம் தோன்றிய காலம் தொடங்கி உணவிற்கு வாழ்வாதாரமாக விளங்கிய பச்சை தாவரங்களுக்கும் அடிப்படை விதைகளே..

காலம் காலமாக பல்கிப்பெருகிய விதைகள் தனது சுழற்சியான விதைப்பு, செடி, பூ, காய் மீண்டும் விதை என சுழன்று சுழன்று காலம், சூழல், சுற்றுப்புறம் போன்றவற்றிற்கு ஏற்ப மாற்றத்தையும் பெற்று அனைத்து உயிரினத்திற்கும் உணவினையும் அளித்து ஆரோக்கியத்தையும் காக்க உதவியது. 

இன்று இந்த விதைகளில் ஏற்பட்ட நவீன மாற்றத்தின் தாக்கமே பல வகைகளில் காரணம் தெரியாத நோய்கள் தொடங்கி வாழ்வியல் நோய்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது இன்றைய இளைய சமுதாயமும், வரவிருக்கும் அடுத்த தலைமுறையினரும் தான்.

அடிப்படை உணவிலேயே ஆயிரமாயிரம் தீமைகளுடன் பிறப்பிலிருந்து வலம் வருகிறது. இன்றைய அறிவியல் பல தொழில்நுட்பத்தை உலகிற்கு அளித்திருக்கலாம், ஆனால் தரமான மனித வாழ்க்கைத்தரத்தினை அளிக்கத் தவறிவிட்டது. பணம், பொருள், ஆடம்பரத்திற்கு இன்று குறைவில்லை ஆனால் உடல் ஆரோக்கியம், உண்மையான உணவு இவை எவ்வளவு பணம் கொடுத்தாலும் பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது. 

‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்று நமது வழக்கு மொழியில் கூறுவதுண்டு. இன்று உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உணவின் வித்துக்களையும் மறந்துவிட்டோம், அந்த உணவினை நேர்த்தியாக தனது உயிரைகொடுத்து விளைவித்த விவசாயியையும் தொலைத்து விட்டோம். இன்று படித்த பல இளைஞர்கள் தங்களின் இந்த நிலையினை உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு உண்மையான உணவினை அளிக்க நினைக்கின்றனர். ஆனால் அதில் பலரின் கேள்விகள் பாரம்பரிய விதைகள் எங்கு கிடைக்கும்? என்பது தான். 
இன்னும் வெளிச்சத்திற்கும், வெளிச்சந்தைக்கும் வராத பல விவசாயிகள் இந்த விதைகளை பாதுகாத்தும் அதில் கிடைக்கும் காய்களையும் கிராமங்களில் விற்றுத்தான் வருகின்றார். நாம் ஒவ்வொருவரும் நமது கிராமங்களில் நமது கரங்களை நீட்ட நிச்சயம் பலன்கிடைக்கும் அல்லது அவர்களிடம் கிடைக்கும் விதைகளை மட்டுமாவதும் பெற்று விதைத்து மீண்டும் விதைகளை பெருக்கலாம்.  

மேலும் பல ஊர்கள் அல்லது கிராமங்களில் நடக்கும் சந்தைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும் விதைகள் பெரும்பாலும் நமது நாட்டு விதைகள் தான். ஒருமுறை விதைத்து அதிலிருந்து மீண்டும் விதைகளைப்பெற்று மறுவிதைப்பும் செய்ய காய்கள் சீராக வருமேயானால் நிச்சயம் அது நமது பரமப்பரிய நாட்டு விதைகளே என்று சோதித்து உறுதி செய்யலாம். 

ஆராய்ச்சி கூடங்களிலிருந்து வெளிவரும் மாற்று விதைகள் பெரும்பாலும் அதிக விலையில் விற்கப்படுகிறது.. ஆனால் இதனை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. சில நேரங்களில் உலக அரசியல் சூழல் அவற்றையும் மலிவாக அல்லது விலையில்லாது (இலவசமாக) அளிப்பதும் நடைமுறையில் உள்ளது. 

இன்று கிடைக்கும் நவீன விதைகளிலிருந்து விதைகளை பெறமுடியாது. அந்த விதைகளால் உணவுக்கான காய்களை மட்டுமே அளிக்க முடியும் அவற்றிலிருந்து விதைகளைப்பெற முடியாது. அப்படியே விதைகள் என்று நாம் அந்த காய்களிலிருந்து வித்துக்களை எடுத்தாலும் அவை பெரும்பாலும் முளைப்புத்திறன் அற்றவைகளாக இருக்கும் அல்லது முளைத்தாலும் காய்ப்புத்திறன் அற்றவைகளாக இருக்கும். ஒருமுறை விதைத்து காய்களை அறுவடை செய்த பின் அந்த செடிகள் வீணானது. இவ்வாறான செடிகளிலிருந்து பெறும் காய்களே பலவகைகளில் ஆரோக்கியக்கேட்டிற்கும் காரணமாகிறது.

கிராமங்களிலிருந்து கிடைக்கும் நாட்டு விதைகளைக் கொண்டு நமது பாரம்பரிய விதைகளை பேணிப்பாதுக்காகவும் பல்கிப்பெருக்கவும் முடியும். வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் முடியும். 

கிராமங்களில் அல்லது சந்தைகளில் கிடைக்கும் விதைகளின் தன்மையை இயற்கையாகவே தரமானதாக மாற்ற அதற்கான தகுந்த காலத்தில், பட்டத்தில் விதைத்து நல்விதைகளைப் பெருக்கலாம். 

ஒவ்வொரு விதைகளுக்கும் ஒவ்வொரு பட்டம் உள்ளது அதற்கேற்ப அந்த காய்கள் விளையும் பொழுது பலவிதங்களில் கண்ணிற்கு தெரியாத சத்துக்களும் அந்த காய்களுடன் சேர்ந்து வருகிறது. அந்தந்த பட்டத்தில் சந்தைகளில் கிடைக்கும் விதைகளை விதைத்து சீராக பாதுகாத்து வளர்க்க அந்த விதைகளிருந்தும் நேர்த்தியான விதைகளை எளிதாக பெற முடியும். மீண்டும் மீண்டும் அந்த விதைகளை குறைந்தது ஏழுமுறை அந்தந்த பட்டத்தில் விதைத்து விளைச்சலையும், விதைகளையும் எடுத்து மறுவிதைப்பு செய்ய நமது மண், சூழல், தட்பவெப்பம், காலநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற பாரம்பரிய விதைகளை நாமே நமது தோட்டத்தில் பெறமுடியும். இவ்வாறு செய்வதால் நோய்த்தாக்குதல் ஏற்படாது. 

இனி விதைகளுக்கு ஏற்ற பட்டத்தினை பார்க்கலாம். ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பல பட்டங்கள் நமது தமிழகத்தில் உள்ளது. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் ஆடிப்பபட்டத்திற்கு ஏற்றது. மேலும் ஒவ்வொரு காயும் பூத்து பிஞ்சு விட்டு விளைச்சலை அளிக்கும் சராசரி காலத்தினையும், அவை மொத்தமாக காய்ப்பு கொடுக்கும் காலத்தினையும் பார்க்கலாம். 

(1 vote)