ஆடம்பரம், அலங்காரம், அணிகலன்கள், அந்தஸ்து, ஆஸ்தி என்று நமது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் பார்க்காத ஒரு வாழ்வினை வாழ்வதுடன் அவர்கள் இவற்றையெல்லாம் பார்க்கவில்லையே என்ற ஏக்கமும் நம்முள் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் நேர்த்தியான ஆரோக்கிய வாழ்வு இவற்றிற்கு முன் காணாமல் போய்விட்டது.
ஆனால் வரும் காலமும் இவ்வாறு இருக்குமா என்ன?
நமது முன்னவர்கள் எவ்வாறு நமது நவீன வாழ்வை பார்க்க வில்லையோ அவ்வாறு நாமும் நமது அடுத்த தலைமுறைகளான நமது குழந்தைகள், பேரன் பேத்திகளின் வாழ்வை பார்க்கப் போவதில்லை. பார்க்கவேண்டாம் என்று நாம் ஒவ்வொருவரும் இந்த இயற்கையை வேண்டுவதே சிறந்தது. காரணம் அவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு அளித்த ஆரோக்கியமான உலகை நாம் அளிக்கப்போவதில்லை.
இயற்கை வளங்களை அழிப்பதும், உலகை அசுத்தம் செய்வது மட்டுமல்ல உலக வெப்பமயமாக்கல், தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் என்று சில பெரிய குறைகளுடன் இந்த உலகை நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் அளிக்கப்போகிறோம். இவைமட்டுமல்ல மற்றுமொரு அதிபயங்கரமான ஒரு நிலையையும் சேர்த்துதான் அளித்துக்கொண்டிருக்கிறோம்…. நாளைய நமது பிள்ளைகள் ஆரோக்கியத்தை அடமானம் வைத்துவிட்டு தரமற்ற உணவுக்காக பிறநாடுகளிடம் பிச்சையெடுக்கும் சூழலும் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நமது பணம், சொத்து, ஆடம்பரம் இவைகளையெல்லாம் கண்டாலே அவர்கள் விரக்தியின் உச்சத்தில் செல்வார்கள் என்பது தான் நிதர்சனம்.
ஏன் நமது தலைமுறையினருக்கு இப்படி ஒரு சூழல் என்கிறீர்களா? அல்லது இது என்ன பிதற்றல் என்கிறீர்களா? இணையதளமும், கைபேசியில் ஒருசில செயலியும் இருந்தாலே போதுமே, வீடு தேடி அனைத்தும் வந்து விடுமே, பின் எதற்காக இந்த நிலை என்கிறீர்களா?
உணவையும், உணவிற்கான வித்துகளை தொலைத்துவிட்ட பின் பணமா சோறுபோடும். பணத்தினையும், சொத்துக்களையுமா உண்ண முடியும்.
உணவையும், உணவிற்கான வித்துகளை தொலைத்துவிட்ட பின் பணமா சோறுபோடும். பணத்தினையும், சொத்துக்களையுமா உண்ண முடியும்.
இன்றைய நிலையே பணம்கொடுத்தால் கூட ஆரோக்கியமான, தரமான உணவு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. நமது முன்னோர்கள் உண்ட நாட்டுக்கோழி முட்டையும், நாட்டுப்பசுவின் பால் கூட பணம் கொடுத்தாலும் இன்று கிடைப்பதில்லை என்பதை மறந்து / மறுத்து விடமுடியாது. மானாவாரியாக விளைந்த நாட்டுக்கம்பும், சோளமும் கூட இன்று அவற்றின் நிஜத் தன்மையில் கிடைப்பதில்லை. இன்று கம்பு கிடைக்கிறது, ஆனால் அது உண்மையான சத்தான நமது நாட்டுக்கம்பா என்றால் இல்லை.. இல்லவே இல்லை.
இவற்றிற்கு காரணம் நாம் நமது உணவுகளின் வித்துக்களை தொலைத்தது தான். வித்துக்கள், விதைகள் என்றதும் ஏதோ விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே தொடர்புடைய ஒன்று என்று நினைக்கவேண்டாம். அதுதான் நமது உணவிற்கு ஆதாரம்.
நமது தட்டில் இருக்கும் இட்டலி, தோசை, சாதம், முருங்கை, கத்திரி போன்ற உணவுகள் அனைத்திற்கும் அஸ்திவாரம் இந்த வித்துக்கள்தான். விவசாயத்திற்கு மட்டுமல்ல நமது உணவினையும் தரமானதாகவும், சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றப்போவது இந்த வித்துக்கள்தான்.
வித்து
நமது தட்டில் இருக்கும் இட்டலி, தோசை, சாதம், முருங்கை, கத்திரி போன்ற உணவுகள் அனைத்திற்கும் அஸ்திவாரம் இந்த வித்துக்கள்தான். விவசாயத்திற்கு மட்டுமல்ல நமது உணவினையும் தரமானதாகவும், சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றப்போவது இந்த வித்துக்கள்தான்.
மனிதனையே குளோனிங் மூலம் பெருக்கக்கூடிய இந்த நவீன காலத்தில் உணவினை பெருக்குவது என்ன கடினமா? இதற்கென்று பல பல நவீன கூடங்களும், ஆராய்ச்சிகளும் பெருகிய நிலையில் நோய்களும், பிணிகளும் கூடவே அதிகரித்துள்ளது என்பதனையும் மறந்துவிடக்கூடாது. அப்படியிருக்க வரவிற்கும் காலம் எவ்வாறு இருக்கும்? கம்பு மற்றும் நாட்டுக்கம்பு என்று இரண்டு இருந்தது என்பதை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என்று இரண்டு தலைமுறையினரும் இருக்கும் காலமே இவ்வாறு இருக்கிறது, அடுத்த தலைமுறையினரின் நிலைமை….?
வரவிருக்கும் தலைமுறையினருக்கு இவையெல்லாம் எவ்வாறு தெரியும்? பிறந்த சிலமாதங்களிலேயே மழலையர் பள்ளி, தொடர்ந்து பள்ளி, மதிப்பெண், இலக்கு, புதுப்புது வகுப்புகள், கல்லூரி, மேல்படிப்பு, வேலை என்று சுழலும் இவர்களுக்கு உணவு என்பது அன்றாடம் மூன்று நேரம் உண்பது.. அல்லது பள்ளி பாடப்புத்தகத்தில் வருவது என்பது மட்டும் தான் தெரியும். மண்.. மரம்.. செடிகள்… விதை இவையெல்லாம் ஒருகாட்சிப் பொருட்களாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள். இவ்வாறே நிலைமை போனால் இழப்பு நமக்குத்தான்.
நமது உணவினையும், அதற்கான அஸ்திவாரமான விதைகளைப் பற்றியும் நமது குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சாதாரணமாக தெருக்களில் வளரும் கீரை முதல் கடுகளவு இருக்கும் ஆலமரத்தின் விதைகளைப் பற்றி நமது குழந்தைகள் தெரிந்து கொள்வது அவசியம்.
“கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே….”
மண்… சாதாரண மண் தன்மேல் விழும் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் (உயிரற்ற மனிதனின் உடலும் கடைசியில் மண்ணுக்குள் தான்), ஆனால் விதைகளை மட்டும் இந்த உலகையும், இயற்கையையும் காக்க மேல்நோக்கி வெளித்தள்ளும் என்பது தான் விதி. இதற்கு மேல் என்ன அதிசயம் உள்ளது.
விதைகளை மட்டும் இந்த உலகையும், இயற்கையையும் காக்க மேல்நோக்கி வெளித்தள்ளும் என்பது தான் விதி. இதற்கு மேல் என்ன அதிசயம் உள்ளது.
விதைகளும்… பாறைகள், சுவர்கள் என்றில்லாமல் அனைத்தையும் தகர்த்து தனது கொடையை விரிக்கிறது. சின்னஞ்சிறிய விதைகள் பெரிய ஆலமரத்தையே தனக்குள் வைத்திருக்கிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தைப்பாருங்கள்.
இந்த பாரம்பரிய விதைகளை நாம் இழந்து விட்டால் நமது உணவை நாம் இழப்போம், நமது ஆரோக்கியத்தை நாம் இழப்போம்.
- விதைகளும் நமது முன்னோர்களின் அறிவியலையும் தெரிந்துக்கொள்ள – விதைகளும் விழாக்களும்….
- நாட்டு விதைகள் / மரபு விதைகள் – காய்கறி விதைகள், கீரை விதைகள்
- இனி விதைகளே பேராயுதம்…