விதைகளும் வகைகளும்

இன்று நமது வீட்டில் ஒரு சிறு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்றவுடன் முதலில் தேவைப்படுவது விதைகள் தான். முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு விதைகள் இருந்தது. சுண்டைக்காய் முதல் பூசணிக்காய் வரை அனைத்தையும் வீட்டிலிருக்கும் விதைகளைக் கொண்டு விதைத்து பயனடைந்தனர். தூரப்போட்ட குப்பையில் தக்காளியும், பாகற்காயும் செழித்து வளர்ந்த காலம் அது.

இன்று நிலைமை அப்படியில்லை. கடையில் வாங்கிய தக்காளியை மண்ணில் பிழிந்தாலும் அதன் விதைகள் முளைக்கும் திறனற்றது. வீட்டிலிருக்கும் மிளகாய் விதை கூட இன்று முளைப்பதில்லை. காரணம் விதைகளில் இருக்கும் வேறுபாடுகளும், விதைகளின் தன்மையும். 

விதை… மண்ணில் சிறு ஈரப்பதத்துடன் சேர முளைக்கும் திறனைப் பெற்று அனைவருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் ஒரு அற்புத வித்து.

விதை… மண்ணில் சிறு ஈரப்பதத்துடன் சேர முளைக்கும் திறனைப் பெற்று அனைவருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் ஒரு அற்புத வித்து. உண்மையில் விதை என்பது ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொரு சூழல், மண், தட்பவெப்பம், நீர் என பலவற்றின் தன்மைகளுடன் ஒவ்வொரு விதைகளும் இருக்கும். 

இன்று நவீனம் வளர வளர.. ஒவ்வொருவரும் உண்ணும் உணவு முதல் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைப்போல் விதைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. 

சேமித்த விதைகளை விதைப்பது, செடி கொடி வளர்வது, பூத்து காய்த்து தேவையானவற்றை அறுவடை செய்து உணவாக்குவது மற்றதை மீண்டும் விதையாக பெற்று சேமிப்பது என்ற சுழற்சியால் நமக்கு மட்டுமே லாபம். மற்றவருக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்க விதைப்பவருக்கு மட்டுமே லாபம். 

உலகமயமாக்கல், வணிகமயமாக்கல் போன்றவையெல்லாம் விதைகளையும் விட்டுவைக்கவில்லை. சந்தைக்கு வராத விதைகளினால் ஒரு லாபமும் இல்லை, அதுவே விதைகளை சந்தைப்படுத்தினால் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் விதைகளை சந்தைப்படுத்தியது.

சரி.. விதைகளை சந்தை படுத்தினால் மட்டும் போதுமா? விவசாயி இதனையும் ஒருமுறை பெற்று மீண்டும் மீண்டும் தனக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்து செய்து கொள்வர்களே? இதனாலும் எந்த லாபமும் இல்லை என்பதால் மலட்டு விதைகளை சந்தைப்படுத்தினர். மலட்டு விதைகளை வீரிய ஒட்டு விதைகள் என்று பிரபலப்படுத்தினர். இந்த விதைகளால் விளைச்சல் அதிகமாகும் என்று நமது விவசாயிகளை நம்ப வைத்தனர். அன்றிலிருந்து விதைகள் பலவகையானது. 

பாரம்பரிய விதைகள்,  ஒட்டு ரக விதைகள் (Hybrid), வீரிய ஒட்டு ரக விதை (High yield  variety), மரபணு மாற்று விதை (GMO) என பலவகை விதைகள் இன்று உள்ளது.

பாரம்பரிய விதைகள்,  ஒட்டு ரக விதைகள் (Hybrid), வீரிய ஒட்டு ரக விதை (High yield  variety), மரபணு மாற்று விதை (GMO) என பலவகை விதைகள் இன்று உள்ளது.

பாரம்பரிய விதைகள் / Native Seeds

நாட்டு விதைகள் / மரபு விதைகள் / பாரம்பரிய விதைகள்

நமது  பாட்டனும், முப்பாட்டனும் எந்த விதைகளை பயன்படுத்தி தனக்கு தேவையான உணவினையும், மீண்டும் விதைக்க விதைகளையும் பெற்றனரோ அதுவே பாரம்பரிய விதைகள் / நாட்டு விதைகள் / மரபு விதைகள். பல்லாயிரம் ஆண்டுகளாக விதைகளை பெருக்கி மீண்டும் மீண்டும் விதைத்து உணவினைப் பெற்றனர். இன்று இந்த நிலை மறைந்ததால் நமது மரபிலிருந்து தொன்றுதொட்டு வந்த உண்மையான விதைகளுக்கு பெயராக பாரம்பரிய விதைகள் என்றாயிற்று. இந்த விதைகளை ஒருமுறை நட அதிலிருந்து தேவையான உணவினையும் மீண்டும் விதைக்க தரமான விதைகளையும் பெறலாம். இதனால் எந்த செலவும் இல்லை லாபம் மட்டுமே. ஒரு விதையிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளைப் பெறலாம். இயற்கை நமக்கு கொடுத்த கொடை மட்டுமல்ல, ஒன்றை எவ்வாறு ஆயிரமாக பெருக்குவது என்ற சூட்சுமத்தையும் இதன் மூலம் கற்றுத்தருகிறது. 

இந்த விதைகள் விதை பெருக்கத்தையும் உணவையும் மட்டும் நமக்கு அளிக்கவில்லை.. அதனுடன் சேர்ந்து மனதிற்கும் உடலுக்குமான ஆரோக்கியத்தையும் சேர்த்தே தருகிறது. அதாவது நமது மரபணுவுக்கு பரிச்சயமான உணவாகவும் இந்த பாரம்பரிய விதைகளிலிருந்து கிடைக்கும் உணவுகள் உள்ளது.

ஒட்டு ரக விதைகள் (Hybrid Seeds)

அடுத்ததாக இன்று பிரசித்தியாக இருக்கும் ஒருவகை விதைகள் ஹைபிரிட் எனப்படும் ஒட்டு விதைகள், வீரிய ஒட்டு விதைகள். நமது கிராமங்களில் நீளமாக ஆனால் சுவை குறைவாக வளரும் முருங்கையையும், சுவை மற்றும் சதைப்பற்று அதிகமிருக்கும் முருங்கையையும் ஒட்டி இரண்டிலும் இருக்கும் இந்த தன்மைகள் ஒருசேர்ந்த சுவையான நீள முருங்கையை பெறுவார்கள். இதிலிருந்து விதைகள் பெறுவது என்பது ஒரு கேள்விக்குறிதான். பலநேரங்களில் இந்த விதைகள் தாயை செடியைப் போல் வளருவதுமில்லை, காய்ப்பதுமில்லை. மீண்டும் தேவைப்பட்டால் இவ்வாறு ஒட்டி பயன்படுத்தினார். இது கிராமங்களில் நடக்கும் ஓட்டு ரகங்கள்.

இதனால் இயற்கைக்கும் நமக்கும் எந்த வகையிலும் கேடில்லை. ஆனால் அதுவே இன்று ஆராய்ச்சி கூடங்களில் அதன் சிறப்புத் தன்மைகளை மட்டும் பிரித்து எடுத்து அவற்றை விதைகளில் உட்புகுத்தி வளர்ச்சியை ஊக்குவித்து, மறு விதைப்பை மலடாக்குவதால் உடலுக்கு பல கேடுகள் உருவாகிறது.

உதாரணத்திற்கு இந்த வகை விதைகள் ஒட்டு விதைகள் எளிதாக அதிக விளைச்சலைத்தரும் ஆனால் இவை நமது பாரம்பரிய விதைகளிலிருந்து பெறப்படும் உணவுகளை விட கண்ணுக்கு தெரியாத பல சத்துக்களை பெற்றிருக்காது. எளிதாக உடல் இந்த உணவுகளை சீரணிக்க கூட சிரமப்படும். 

மறுவிதைப்பிற்கு விதையைக்கூட அளிக்காத இந்தவகை விதைகளிலிருந்து பெரும் உணவுகளால் குழந்தைப்பேறு கூட அடையமுடியாத சமூகமாக நமது அடுத்த சமூகம் மாறிவருகிறது. குழந்தைப்பேறு மட்டுமல்ல சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் கூட பெரு வியாதியையும், நோய்யெதிர்ப்பு சத்தியில்லாமல் உயிர்கொல்லி நோயாகவும் பல நோய்கள் மாற இதுவே காரணமாகவும் அமைகிறது. 

அன்றாடம் அரிசி சோறு உண்ட நம்மை மூன்று நேரமும் வடநாட்டு உணவையோ அல்லது வெளிநாட்டு உணவையோ உண்ணச் சொன்னால் பத்து நாட்களில் நமது உடலும், உள்ளமும் பெரும் துயரத்திற்கு ஆளாகும். காரணம் வழிவழியாக நமது முன்னோரின் மரபில் வந்த நாம் நமது நாட்டில் விளைந்த உணவுகளுக்கே பரிச்சயமானவர்கள், அதோடு நமது மூதாதையர்களின் மரபில் வந்த நமது மரபும், மரபணுவும் இந்த உணவையே உண்டு பழக்கப்பட்டவை.

இதுதான் இன்று வேறுவிதமாக நடக்கிறது. பார்க்க நம் நாட்டு உணவுகள் ஆனால் வேற்று விதைகளில் (hybrid, GMO)… பார்க்க நமக்கு நமது வெண்டைக்காய், தக்காளி, சுரைக்காய், புடலங்காய் போல் இருக்கும் ஆனால் அவற்றினை உடல் சீரணிக்க துன்புறுவது மட்டுமல்ல காரணமே தெரியாமல் பலவகை நோய்களும், மனநோயும், மனஅழுத்தமும் ஏற்படுகிறது. அதுவே நமது பாரம்பரிய விதைகளில் கிடைக்கும் உணவுகள் நோய்க்கு மருந்தாகவும், மனஅமைதிக்கு வித்தாகவும் இருக்கும்.

மேலும் மரபணு மாற்று விதைகள் / உணவுகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள – மரபணு மாற்று உணவுகள்.

(5 votes)