Spermacose Hispida; Shaggy Button Weed; Nathai Soori
நத்தை சூரி ஏதோ ஊரும் உயிரினத்தின் பெயர்போல தோன்றலாம் ஆனால் பெயரிலேயே சற்று வித்தியாசமான பெயர் கொண்ட மூலிகை வகையைச் சேர்ந்தது இந்த சிறு செடி. பல நோய்களையும் தீர்க்கும் அற்புதமான மூலிகை இந்த அரியவகை நத்தை சூரி மூலிகை. இதனை சித்தர்கள் மாக மூலிகை என்றும் அழைத்தனர். எலும்புகளுக்கு பலத்தையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் உடலுக்கு வலுவையும் அள்ளிக் கொடுக்கும் சிறந்த மூலிகை.
சூரி, கடுகம், குழி மீட்டான், தாருணி, நத்தைச் சுண்டி என பல பெயர்கள் இந்த நத்தை சூரிக்கு உண்டு. இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட இந்த நத்தை சூரியின் இலைகள் தனி இலைகளாக எதிரிலைக் குறுக்கு மறுக்கு அடுக்கத்தில் இருக்கும். தண்டின் கணுக்களில் காம்பில்லாத ரோஜா நிறமுடைய சிறு சிறு மலர்கள் காணப்படும். இதன் விதை, வேர் மருத்துவ பயன் கொண்டது. நத்தை சூரியின் இலைகளும் பயன்படக் கூடியது.
உடலைத் தேற்றி, உட்சூட்டைத் தணித்து குளிர்ச்சியுண்டாக்கும் சிறந்த தன்மைக் கொண்டது இந்த நத்தை சூரி. காய்ச்சல், பெருங்கழிச்சல், சீத பேதி, வாத, பித்த, கப நோய்களுக்கு மிக சிறந்த பலனளிக்கும்.
பல நோய்கள் மறைய
இதன் பசுமையான வேரைச் சிதைத்து அதன் எடைக்கு பத்து மடங்கு கொதி நீரில் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறியதும் அதனை வடித்து கால் கப் அளவு அதாவது ஐந்து ஸ்பூன் வீதம் தினம் 2 – 3 வேளைகள் குடித்துவர உடம்பில் தோன்றிய அனைத்து நோய்களும் படிப்படியாகக் குறையும்.
உடல் சூடு தணிய
சூடு தணிய நத்தை சூரி விதை சிறந்த பலனை அளிக்கும். நத்தைச் சூரியின் விதையை சேகரித்து அதனை வறுத்துப் பொடி செய்து நீரிலிட்டுக் காய்ச்சி பின் அதனை வடித்து அதனுடன் பால், கற்கண்டு சேர்த்து தினமும் 2 வேளைகள் பருகிவர உடல் சூடு தணியும். மேலும் வெட்டை, வெள்ளை, சதையடிப்பு, கல்லடைப்பு நீங்கும்.
வீக்கங்களுக்கு
உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு நத்தை சூரியின் இலையை அரைத்துக்கட்ட வீக்கம், கட்டி ஆகியவை கரையும்.
உடல் பலப்பட
நத்தை சூரியின் வேரை பசுமையாக அரைத்து பசும்பால் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேலை பருகிவர உடல் வலு பெறும். ஆண்மை பெருகும். உடல்பருமன் குறையும். கழிச்சல், இரத்தப் போக்கு, இரத்த மூலத்திற்கு சிறந்த பலனை அளிக்கும்.
தாய்ப்பால் பெருக
முக்கால் ஸ்பூன் அளவு வேரை பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி இரண்டு வேளை பருக தாய்ப்பால் பெருகும்.