நன்னாரி – நம் மூலிகை அறிவோம்

Hemidesmus Indicus; Indian Sarsaparilla; Nannari

கோடை தொடங்கியதும் பலரும் தேடும் ஒரு பானம் நன்னாரி சர்பத். உடல் உஷணத்தை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல் பலவித தொந்தரவுகளுக்கும் அற்புதமான ஒரு மூலிகை நன்னாரி. இந்த நன்னாரி கொடியை சாதாரணமாகவே பரவலாக தமிழகத்தில் பார்க்க முடியும். பல பயன்களைக் கொண்ட இந்த வேரே மருத்துவத்திற்கும் பயன்படக் கூடியது. நன்னாரி வேர்கள் இனிப்பு சுவையைக் கொண்டது மேலும் நறுமணமுடையது. இந்த வேரில் ஒரு வித எண்ணெய்ப் பொருளும், பல சத்துக்கள் நிறைந்த வேதிப் பொருட்களும் உள்ளது.

பாதாள மூலி, அங்கார் மூரி, நறுநெட்டி, கோபாகு, பாற்கொடி, நீறுண்டி, கானனுசாரி, கிருஷ்ணவல்லி என பல பெயர்களும் நன்னாரிக்கு உண்டு. இது ஒரு ஏறு கொடி வகை தாவரம். இதன் இலைகள் நீளமாகவும், ஆனால் அகலத்தில் குறுகிய தனி இலைகளாக இருக்கும். இந்த எதிரிலை குறுக்கு மறுக்கு அடுக்கத்தில் அமைத்திருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இந்த நன்னாரி செடியின் சாறு பால் போல் இருக்கும்.

சிறுநீர்ரைப் பெருக்கி, வியர்வையைப் பெருக்கி, உடல் கழிவுகளை அகற்றி உடலைத் தேற்றும் ஆற்றல் கொண்டது இந்த நன்னாரி. உடலுக்கு பலமளிக்கும் அற்புத மூலிகை. உட்சூடு, நீரிழிவு, ஆண்மைக் குறைவு, நீர்வேட்கை, கிரந்தி, தலை நீரேற்றம், வண்டுக்கடி போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது நன்னாரி. ‘AIDS’ நோய்க்கு மிக சிறந்த மருந்தாக இந்த நன்னாரி உள்ளது என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை நன்னாரி வேர் பயன்கள்

ஒரு துண்டு நன்னாரியின் பச்சை வேரை எடுத்து அதனை சிதைத்து இரண்டு கப் நீரில் ஒரு நாள் ஊற வைத்து வடிகட்டி ஒரு கப் வீதம் தினமும் 3 வேளைகள் பருகிவர அஜீரணம், நீரிழிவு, உட்சூடு, நீர் வேட்கை, தோல்நோய்கள், நாட்பட்ட வாதம், சிறு நஞ்சு, அதிக பசி ஆகியன மறையும்.

ஆண்மை பெருக

நன்னாரியை நீரிலிட்டு பாதி அளவு என சுண்டக் காய்ச்சி கஷாயமாக தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளைகள் பருகிவர ஆண்மை பெருகும்.

கல்லடைப்பு நீங்க

நன்னாரியை நீரிலிட்டு பாதி அளவு என சுண்டக் காய்ச்சி கஷாயமாக தயாரித்து வைத்துக் கொண்டு இந்த கஷாயத்துடன் பசும்பால் கலந்து பருகி வர நீரடைப்பு, கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, வெள்ளை நோய் தீரும்.

பித்த தொந்தரவுகளுக்கு

நன்னாரியை மேலுள்ளவாறு கஷாயமாக தயாரித்து அதனுடன் சீரகத்தூள் கலந்து பருக பித்தத்தினால் உண்டாகும் நீர்க்கட்டு, வாய்க்கசப்பு, அஜீரணம், இருமல், அஜீரண பேதி, வெட்டை நோய் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நன்னாரி வேரை நீரில் ஊறவைத்து அந்த வேரின் ரசத்தை வடிகட்டி கண்ணில் விட கண் எரிச்சல் நீங்கி கண் குளிர்ச்சி பெறும்.

(1 vote)