தீமை செய்யும் பூச்சிகள்

தீமை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம்.

தீமை செய்யும் பூச்சிகளை எவ்வாறு இனம் காணுவது என்பதனை அவற்றின் உணவு அதாவது உணவுப்பழக்கம், இனப்பெருக்கம், உடலமைப்பு போன்றவற்றைக் கொண்டு எளிதாக பிரித்து அடையாளம் கொள்ளலாம். இவ்வாறு தனித்தனியாக பிரித்து புரிந்துகொள்வதால் நமது தோட்டத்திற்கு வரும் பூச்சியை இனம் கண்டு அவற்றிற்கு பதிலடிகொடுக்கும் நன்மைசெய்யும் பூச்சிகள் உள்ளனவா என்பதனையும், அவற்றின் வீரியத்தை அறிந்துகொண்டு பூச்சிவிரட்டி தயாரித்து பயன்படுத்த வேண்டுமா என்பதனையும் தெரிந்துகொள்ளலாம்.

செடிகளை உணவாகக்கொள்ளும் பூச்சிகளின் பழக்கத்தைக் கொண்டு முதலில் பிரிக்கலாம்.

1. இலையை சாப்பிடும் புழுக்கள், பூச்சிகள்.
2. சாறு உறிஞ்சும் பூச்சிகள்.
3. தண்டு மற்றும் வேர்ப்பகுதியை தாக்கும் புழுக்கள்.

இலையை உண்ணும் பூச்சிகளை எளிதாக அவற்றின் வாயைக்கொண்டு அடையாளம் காணலாம். இவ்வகை பூச்சிகளின் வாய் வெட்டும் தன்மையுடன் இருக்கும். உதாரணத்திற்கு காய்களின் அதிகமாகப்பார்க்கப்படும் பச்சைக்காய் புழுக்கள். மேலும் வெட்டுக்கிளிகள், தரைவண்டுகள், காண்டாமிருக வண்டுகள் போன்றவைகளும் இவ்வகையை சேர்ந்தவை.

அடுத்ததாக செடிகளில் இருக்கும் சாறுகளை உறிஞ்சும் பூச்சிகள்.. இவ்வகை பூச்சிகள் இரண்டு குழல்களை வைத்திருக்கும். சாறினை உறிஞ்ச ஒரு குழலும் மற்றொன்று எச்சிலை உமிழ்வதற்கும். வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, அஸ்வினி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை இவ்வகை சாருவுறுஞ்சும் தீமை செய்யும் பூச்சிகள்.

பெரும்பாலும் தண்டுகளையும், வேர்பகுதியையும் தாக்கக்கூடியவை புழுக்கள் மற்றும் அஸ்வினி . தீமை செய்யும் பூச்சிகளில் இந்த வகைப்புழுக்களும் பெரியளவில் செடிகளை அழிக்கிறது.

இனி அடுத்ததாக இவற்றின் இனப்பெருக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

அஸ்வினி பூச்சி

சாறு உறுஞ்சும் பூச்சியான அஸ்வினி பூச்சி வெள்ளை, மஞ்சள் அல்லது இவற்றிற்கு இடைப்பட்ட நிறத்தில் இலைகளின் மேல் இருப்பவை. மாயாஜாலப்பூச்சி என்று கூட இவற்றை சொல்லலாம். எளிதாக பலவகை செடிகளை தாக்கக்கூடிய பூச்சி இது. விரைவாகவும், ஆண் பூச்சி துணையின்றியும் முட்டைக்கு பதில் குஞ்சுகளைப் போடக்கூடியது இந்த அஸ்வினி பூச்சி.

பெரும்பாலும் நமது தோட்டத்தில் பெரும் தொல்லையாக இருப்பது இவ்வகை அஸ்வினிகள் தான். தீமை செய்யும் பூச்சிகளில் முதலிடமும் இதற்கே கொடுக்கலாம்.

தண்டு துளைப்பான் என்று சொல்லக்கூடிய அந்துப்பூச்சியின் வகையை சேர்ந்த வெள்ளை அல்லது இளம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூச்சிகள் இவையும் புகையான் என்ற தத்துப்பூச்சியும் இவற்றால் பயிர்கள் கருகும்.

மேலும் அஸ்வினி ஈ சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இவ்வகைப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் பூச்சிகளை அடுத்து பார்ப்போம்.

(41 votes)