Tabernaemontana Divaricata; Crepe jasmine; நந்தியா வட்டம்; நந்தியாவட்டை
பல வீடுகளில் அழகிற்காகவும், இறை வழிபாட்திற்காகவும் வளர்க்கப்படும் ஒரு மருத்துவ மூலிகை செடி நந்தியாவட்டை என்ற பெருஞ் செடி. இது பால் வரக்கூடிய செடி வகை. நந்தியா வட்டம், வலம்புரி, நந்திபத்திக், நந்தியாவர்த்தம், பட்டிடை, கயோதனன் மாலை என பல பெயர்கள் இந்த நந்தியாவட்டைக்கு உள்ளது. கைப்பு சுவை கொண்ட நந்தியாவட்டையின் பால், பூ, வேர் ஆகியவை மருத்துவத்திற்கு பயன்படும்.
இந்த செடியின் இலைகள் எதிரடுக்கில் பளபளப்பாக ஈட்டி போன்ற அமைப்புடன் இருக்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளை நிற மலர்கள் ஐந்து இதழ்களுடன் விரிந்து நுனியில் சற்று திருகு இதழ் வடிவத்தில் இருக்கும். இந்த நந்தியாவட்டையில் ஒற்றை அடுக்கு பூ உடைய நந்தியாவட்டை, அடுக்கு இதழுடன் இருக்கும் நந்தியாவட்டை உள்ளது. அவற்றில் ஒற்றை அடுக்கு 5 இதழ் பூ உடைய நந்தியாவட்டையே மருத்துவத்திற்கு பயன்படுவது. அடுக்கிதழ் மலர்கள் மருத்துவத்தில் பயன்படாது.
மூளைக்கு புத்துணர்வையும், கல்லீரலுக்கு பலத்தையும், புண்கள் ஆற்றும் தன்மையும், உடலிலிருக்கும் புழுக்களையும் கொல்லும் ஆற்றல் கொண்டது. மேலும் மண்டைக் குத்தல், கண் காசம், படலம், கரும்பாவை ஆகியவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும். புற்று நோய் தாக்காமலும் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாகவும் நந்தியாவட்டை உள்ளது. இந்த ஓரடுக்கு நந்தியா வட்டைப் பூவினை பறித்து கண்களில் ஒற்றடமிட கண் எரிச்சல் நீங்கும்.
கண் சிவப்பு / கண் வலி
வெள்ளை நிற ஓரடுக்கு நந்தியா வட்டைப் பூவின் இதழ்களிலிருந்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தாய்ப்பால் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண்களில் ஏற்படும் சிவப்பு நீங்கும்.
மேலும் இச்செடியின் பாலுடன் எண்ணெய் விட்டு நன்கு கலந்து நெற்றியில் தேய்க்க கண்வலி விரைவில் தீரும்.
பல்வலி, வயிற்று புழுக்கள் நீங்க
நந்தியா வட்டை வேரினை ஒரு துண்டு எடுத்து வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மென்று பிறகு உமிழ்ந்துவிட பல்வலி குணமாகும்.
அதேப்போல் இதன் ஒரு துண்டு இதன் வேரை எடுத்து நன்கு இடித்து ஒரு டம்ளர் நீரில் அரைப்பங்காக சுண்டக் காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
வெட்டுக்காயங்களுக்கு
வெட்டுக்காயங்களின் மீது நந்தியா வட்டை செடியின் பாலை பூச சீழ் ஏற்படாது. புண் விரைவில் ஆறும்.
மெட்ராஸ் ஐ
மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்களுக்கு மிக சிறந்த பலனை அளிக்கும். நந்தியாவட்டை பூவை ஒரு துணியில் வைத்து அதனால் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்களில் வைத்து துணியைக் கொண்டு கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் விரைவாக அதன் தீவிரத்திலிருந்து வெளிவர முடியும்.