Cleome Gynandra; Spider Flower; நிலவேளை; நல் வேளை; தைவேளை
தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே பார்க்கப்படும் மூலிகை வகையைச் சேர்ந்தது இந்த நல்வேளை என்ற தை வேளை. இதற்கு அசகண்டர் என்ற வேறொரு பெயரும் உண்டு. வேளை மூலிகையில் பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று இந்த நல்வேளை. இது ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் ஐந்து சிற்றிலை கொண்டு கைவடிவக் கூட்டிலைகள் மாற்று இலைகளாக அமைந்திருக்கும்.
நல் வேளை பூக்கள் வெள்ளை நிறத்திலிருக்கும். இந்த மலர்கள் மாலையில் நன்கு விரிந்திருக்கும். இந்த செடி முழுவதும் ஒருவித பிசிபிசுப்பு தன்மைக் கொண்ட ரோமங்கள் இருக்கும். ஒருவித நறுமண எண்ணெய் சத்தும் இதில் உள்ளது. இந்த எண்ணெயில் கடுகு எண்ணெய்க்கு ஒத்த சத்துக்கள் உள்ளது. கார்ப்பு சுவை கொண்ட இந்த நல் வேளை சமூலமே மருத்துவ குணம் கொண்டது.
தைவேளை மூலிகை வியர்வையைப் பெருக்கும் ஆற்றலும், உடலில் இருக்கும் புழுக்களை கொள்ளும் ஆற்றலும் நிறைந்தது. மேலும் குடைச்சல், வயிற்றுப்புழு, தலைநோய் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது.
காய்ச்சல் தீர
நல் வேளை வேரை இடித்து இரண்டு மடங்கு நீர் சேர்த்து காய்ச்சி ஒரு மடங்காக சுருக்கி அதில் கால் கப்புக்கும் குறைவான அளவு காலை, மாலை என இருவேளை பருக சுரம் குணமாகும்.
காதில் சீழ்வடிதல் நிற்க
இதன் இலைச்சாற்றில் ஓரிரு துளிகள் காதில் விட காதில் சீழ்வடிதல் நிற்கும்.
வாதநோய்கள் நீங்க
தைவேளை பூவை நெய்யிலிட்டு வதக்கி அதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் சேர்த்து துவையல் செய்து சுடு சோற்றில் கலந்துண்ண வாதநோய்கள் நீங்கும்.
புண்களுக்கு
இந்த மூலிகையின் இலைகளை அரைத்து புண்களின் மீது போட புண் சீழ் பிடிக்காது, இதனை தேள்கடித்த இடம் அல்லது பாம்பு கடித்த இடத்திலும் போடலாம் நல்ல பலன் கிடைக்கும்.