Cleome viscosa; நாய்வேளை / நாய்க்கடுகு / நைக்கடுகு
உலகில் பல இடங்களில் விளையக் கூடிய ஒரு களைச்செடி தான் இந்த நாய் வேளை என்று கூறப்படும் நாய் கடுகு செடி. பொதுவாக நாய்வேளை எனப்படும் இந்த செடியின் விதைகளை நாய்க்கடுகு என்பதுண்டு. இது ஒரு சிறுசெடி வகையை சேர்ந்தது. வயல்வரப்புகளிலும், தரிசு நிலங்களிலும், ஈரப்பதமும் வெப்பமும் இருக்கக் கூடிய இடங்களில் விரைவாக வளரக்கூடிய ஒரு களைச்செடி இது. பொதுவாக அடர்த்தியாக வளரக்கூடியது.
தானாகவே முளைத்து பரவலாக காணப்படும் இந்த நாய்க்கடுகு என்னும் நாய்வேளை செடி வெறும் களைச்செடி மட்டுமல்ல நம் கிராமங்களில் கைவைத்தியத்திற்கும், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவத்திலும் பயன்ன்படும் ஒரு மூலிகை செடியாகவும் உள்ளது. இதன் இலைகளும், விதைகளும் மருத்துவ பயன்கொண்டவை.
இந்த வேளை கீரை ஏறக்குறைய 22 சென்டிமீட்டர் உயரம் வளரக்கூடிய சிறு பூண்டு வகையை சேர்ந்தது. இது எழு எட்டு இலைகள் விட்டவுடன் பூத்து காய்த்து விடும். இதன் காய்கள் மேல்நோக்கி வளரக்கூடியது.
பண்டைய தமிழர்கள் இந்த கீரையை உணவுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்துள்ளனர். பிசுபிசுப்பான கசப்பு சுவையை கொண்ட இந்த நாய்வேளை செடியின் இலைகள் கூட்டிலைகளாக இருக்கக்கூடியது. இதன் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடியது.
இந்த நாய்க்கடுகு விதை உடலில் இருக்கும் நுண்புழுக்களை அழிக்கக் கூடியதாகவும், குடல் வாயுவை அகற்றக் கூடியதாகவும் உள்ளது. இந்த நாய்வேளை இலைகளை கீரையாகவும் மற்ற கீரைகளுடன் சமைத்து உண்ண வாயுக்கள் அகலும்.இது பசியை ஏற்படுத்தும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளை சீராக்கும்.
இந்த நாய்கடுகு விதைகளை கிராமங்களில் துவையலாகவும் செய்து உண்ணும் ஒரு பழக்கம் உள்ளது. இவ்வாறு உண்பதால் பசியின்மை, வாதம், மாதவிடாய் தொந்தரவுகளை தீர்க்கும்.
அதேபோல் இந்த நாய்க்கடுகை பக்குவமாக தயாரித்து பயன்படுத்த வாயிற்று புழுக்கள், காதில் சீழ்வடிதல் தீரும். மூலத்திற்கும் இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல பலனைத் தரும்.