Brassica Juncea; Mustard Seed; கடுகு
ஒவ்வொரு உணவிலும் சுவைக்காகவும் மணத்துக்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் கடுகு. வடஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கடுகு தற்பொழுது தமிழ் உணவிலும் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. பொதுவாக தமிழக பாரம்பரிய சமையலில் சீரகமே தாளிப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. தமிழக தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது நமது சீரகம் தான்.
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பதைப்போல் கடுகில் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் பல மருத்துவகுணங்கள் உள்ளது. கடுகு எண்ணெய் இதற்கு பெயர்போனதும் கூட. உணவில் கடுகை பயன்படுத்துவதானால் அதனை தாளித்தே பயன்படுத்த வேண்டும். தாளிக்காமல் அதாவது எண்ணெயில் வெடிக்காமல் கடுகை உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் கவனமாக கடுகு வெடித்த பின்பே அதனை உணவாக எடுக்க வேண்டும். மேலும் இன்று கடைகளில் கிடைப்பது ஹைப்ரிட் ரக கடுகுகள். நாட்டு ரக கடுகுகள் சற்று பெரிதாகவும் உண்மையிலேயே கார சுவையையும் நல்ல மணத்தையும் அளிக்கும்.
சிறு செடி வகையைச் சேர்ந்தது இந்த கடுகு செடி. கடுகு செடியின் தண்டின் நுனியில் கொத்துகொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். இந்த செடியின் விதைகளே கடுகாகும். கார சுவைக் கொண்ட இந்த விதைகளே இந்த செடியின் பயன்படும் பகுதிகளாகும்.
ஐயவி என்று கடுகிற்கு ஒரு பெயர் உண்டு. இதில் எண்ணெய் சத்துக்கள் உள்ளது, வட மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடுகு எண்ணெய் மிக பிரபலம். வாந்தியை உண்டாக்கும் இயல்பும், சிறுநீரைப் பெருக்கும் ஆற்றலும் இந்த கடுகிற்கு உண்டு. மேலும் வாத, பித்த, கப நோய்கள், விக்கல், இருமல், குடைச்சல், தூக்கமின்மை, ஜீரண கோளாறு, வயிற்று வலி, உடல் வலி, தலைவலி போன்ற பல தொந்தரவுகளுக்கும் கடுகு நல்ல பலனை அளிக்கும். உடலில் தேங்கும் கழிவுகள், விசங்களை வெளியேற்றும், இரத்த ஓட்டத்தை சீராக்கும். அதிக ஆற்றல் கொண்ட கடுகை மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
கடுகு எண்ணெயின் பயன்கள்
- உடல் வலிகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.
- மூட்டு வலிகளுக்கு பயன்படுத்த விரைவில் தீரும்.
- உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும்.
- இருதயத்தை பாதுகாக்கும்.
- நுண்ணுயிர்கள் வளர்ச்சியை தடுக்கும். ஊறுகாயில் அதனாலேயே இதனைப் பயன்படுத்துவதுண்டு.
- புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் அல்லது குறைக்கும்.
- சரும பளபளப்பையும், கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
தலைவலி தீர
கடுகு செடியைக் கொண்டு நீரில் கொதிக்க வைத்து நீராவி பிடிக்க தலைவலி, ஒற்றை தலைவலி தீரும்.
வீக்கங்களுக்கு
கட்டிகள் வீக்கங்களில் கடுகை அரைத்து பூச மறையும்.
உடலில் ஏற்படும் வலிகளுக்கு
கடுகைக்கொண்டு மிக எளிதாக உடலில் ஏற்படும் வலிகளை போக்கலாம். கடுகைத் தூள் செய்துக் கொண்டு அதனுடன் அரிசி மாவு சம அளவு சேர்த்து நீர் விட்டு பிசைந்து அதனை ஒரு துணியில் தடவி உடலில் எங்கு வலியுள்ளதோ அங்கு பற்றிட்டு வர அந்த இடத்திலுள்ள நோய்கள், வலிகள் மறையும்.
- தூக்கமின்மை, இரத்த ஓட்டமின்மைக்கு பாதம் அல்லது அடிவயிற்று பகுதியில் பற்றிடலாம்.
- வயிற்றுவலி, வயிற்றுளைச்சல், விஷபேதி போன்ற தொந்தரவுகளுக்கு அடிவயிற்றில் பற்றிடலாம்.
- காய்ச்சல், தலைவலி, வெறி, அம்மை போன்றவற்றிற்கு பிடரி அல்லது பாதத்தில் பற்றிடலாம்.
- இரைப்பு, சுவாசம், இருமல் நீங்க தோள்பட்டை அல்லது மார்பு பகுதியில் பற்றிடலாம்.
- வாதம் மற்றும் கபத்தினால் ஏற்படும் சுரம். விஷபேதிக்கு இடது மார்பில் பற்றிடலாம்.