முருங்கை செடி – பூச்சி, நோய் தாக்குதல்

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் விளையக்கூடியது முருங்கை மரம். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த முருங்கைமரம் தமிழகத்தில்  பெரும்பாலும் பல வீடுகளில் காணப்படுகிறது. நவீன கால கட்டமும் நவீன வாழ்க்கை முறையும் பெரு நகரங்களில் முருங்கையை வளர்க்க இன்று தடையாக உள்ளது. அந்த தடையைப் போக்க வீட்டின் மாடியிலும்  இன்று முருங்கையை எளிதாக வளர்க்கலாம். 

இலை பூ காய் என ஒவ்வொன்றிலும் பல  மருத்துவ குணங்களை அடக்கிவைத்திருக்கும் முருங்கை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு செடி. அதிலும் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கும் இந்த முருங்கை இலையினை உணவில் பயன்படுத்த பல உடல் உபாதைகளில் இருந்து வெளிவருவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

வெப்ப மண்டலத்தில் பெரும்பாலும் காணப்படும் இந்த முருங்கை மரம் வெப்பத்தை தாங்கி வளரக்கூடியது. குளிர்காலங்களில் இலைகளை உதிர்க்கும்  இந்த முருங்கை வடிகால் கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது. பல ரகங்கள் கொண்ட இந்த முருங்கை காய், பூ, இலைக்காக வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டத்தில் இதனை நாம் மாடிகளில் இலைக்காக எவ்வாறு வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.

பல ரகங்கள் கொண்ட இந்த முருங்கையில் சில ரகங்கள் நல்ல தடிமனான காய்களையும் சுவையான காய்களையும் அளிக்கக்கூடியது. சில ரகங்கள் சுவையான இலைகளை அளிக்கக்கூடியது. இவற்றையும் சுவையான கீரைகளை அதாவது இலைகளை அளிக்கக்கூடியது கொடிக்கால் முருங்கை என்ற திருச்சி  மாவட்டத்தில் விளையும் முருங்கை ரகம்.

வீட்டில் மாடிகளில் முருங்கை வளர்க்க இந்த ரகம் ஏற்றது, காரணம் வீட்டின் மாடிகளில் முருங்கை வளர்ப்பது பொதுவாக கீரைகளைப் பெறத்தான். மாடிகளில் காய்களை அளிக்கும் பெரிய முருங்கை மரம் வளர்ப்பதென்பது அனைவராலும் இயலாது.

எளிமையாக கீரைகளை வளர்க்கலாம். அதனால் இந்த ரகம் ஏற்றது. திருச்சியில் நண்பர்கள் உறவினர்கள் அல்லது விவசாய நண்பர்கள் இருந்தால் எளிதாக அவர்களின் துணையுடன் இந்தவகை முருங்கை விதையையோ அல்லது முருங்கை மரத்தின் குச்சி, கட்டையையோ மரத்திலிருந்து எடுத்துவரலாம்.

இதெல்லாம் சாத்தியமில்லை என்றால் எளிதாக நாட்டுரக முருங்கை விதைகளை சந்தையிலிருந்து பெறலாம். முருங்கையை விதை மூலமாகவும் குச்சிகள் மூலமாகவும் வளர்க்கலாம். முருங்கை (மரம்) செடி வளர்க்க  முதலில் சற்று பெரிதான ஒரு தொட்டியினை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலை தழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும். விரிவாக வீட்டுத் தோட்டத்தில் முருங்கை வளர்க்க – முருங்கை செடி.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். பின் விதைகளாக இருந்தால் அதனை பஞ்சகவ்யத்தில் ஒரு மணிநேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்து மண்ணில் 3 செ.மீ ஆழத்தில் சிறுதுளையிட்டு ஒரு குழியில் இரண்டு விதைகளை விதைக்கவேண்டும், மீண்டும் மண்ணைக்கொண்டு மூடிவிடவேண்டும். குச்சி அல்லது கட்டையாக இருந்தால் அதில் அடிப்பகத்தினை பஞ்சகவ்யத்தில் சிறிது நேரம் வைத்திருந்து பின் நடவேண்டும்.

இவ்வாறு செய்வதால் முருங்கைக் கட்டையில் ஏதேனும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள் இருந்தால் அவை அழிக்கப்படும் மேலும் புதுமண்ணில் முருங்கையின் வேர் வளரவும் இலை சீராக வளர்ச்சியைப் பெறவும்  உதவும். லேசாக தண்ணீர் தெளித்து வைக்க ஒரு வாரத்திலிருந்து பத்துநாட்களில் விதைகள் முளைக்க தொடங்கும், புது இலைகளையும் கட்டைகளில் காணலாம்.

மூடாக்கு இடுவதால் நீர் ஆவியாவதும் தடுக்கப்படும். பொதுவாகவே நாட்டு ரகங்களை தேர்ந்தெடுப்பதால் பூச்சி நோய் தாக்குதல் குறைவதோடு அதிக  வெப்பம், மழை போன்ற காலங்களிலும் செழிப்பாக இருக்கும். 

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிப்பதும் வாரம் ஒருமுறை பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் அல்லது ஏதேனும் இயற்கை வளர்ச்சி ஊக்கி போன்றவற்றை செடிகளுக்கு அளிப்பதும் சீரான வளர்ச்சியை அளிக்கும். மேலும் ஆரம்பத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை இலைகளை தேவைக்கேற்றவாறு பறித்து உபயோகித்துக் கொள்ளலாம்.

ஓரிரு மாதங்கள் கழித்த பின் வாரம் ஒரு முறை செடிகளின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் இலைகளை பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகரிப்பதோடு நல்ல வளர்ச்சியும் இருக்கும், இலைகளும் நல்ல மணம், சுவையைக்கொண்டிருக்கும்.

தொட்டிகளில் வைத்திருக்கும் இந்த முருங்கை இலைகளுக்காகவே வளர்க்கப்படுகிறது. அதனால் அவ்வப்பொழுது இலைகளை பறித்து உணவாக்கிக் கொள்ளலாம். மேலும் காய்கள் பூக்களுக்காக இவை வளர்க்கவில்லை. அதனால் இளங்கொளுந்துகளை உணவிற்காக பயன்படுத்துவது சிறந்தது. முருங்கை இலையில் இல்லாத சத்துக்களே இல்லை என்று தெரிந்தும் பலர் முருங்கையை வளர்க்க பயப்படுவது அவற்றை தாக்கும் பூச்சிகளாலும், நோய்களாலும். முருங்கையில் பயன்கள் நன்மைகள் தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – முருங்கை இலை பயன்கள்.

வாரம் ஒருமுறை என ஆரம்பம் முதல் செடிகளின் இலைகளில் படுமாறு கோ மூத்திரத்தினை பத்து சதவீதம் நீருடன் கலந்து தெளிக்க முருங்கைக்கு வரும் பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் ஆரம்பத்திலேயே அழிக்கலாம். பத்துநாட்களுக்கு ஒருமுறை வேப்பிலைகரைசல் அல்லது 3G கரைசல் போன்றவற்றையும் தெளிக்கலாம். 

முருங்கையில் பெரும்பாலும் இலைகளை உண்ணும் கம்பளிப்புழு, இலைப்புழு, சாம்பல் வண்டு போன்றவற்றாலும் அஸ்வின் போன்ற சாறு உறுஞ்சும் பூச்சிகளாலும் அதிக தொந்தரவுகள் வரும். இவற்றை எளிதாக பப்பாளி இலைக் கரைசலைக் கொண்டு அழிக்கலாம். 

https://www.youtube.com/watch?v=3tUCqp06EF0