முருங்கைக்கீரை உடல் நலத்துக்கு சிறந்த ஒரு கீரை. அளவோடு முருங்கைக்கீரையை சாப்பிட சிறந்த ஒரு பலனை பெறலாம். அளவுக்கு மீறினால் பல சமயங்களில் பேதியாகும். இந்த முருங்கைக் கீரையை பகல் நேரத்தில் தான் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிடக்கூடாது. இந்த கீரையை எளிமையாக வீட்டிலேயே தொட்டியில் கூட வளர்த்து பயன்படுத்தலாம்.
- பெரும்பாலும் தேங்காய், பருப்பு, நெய் சேர்த்து இளஞ்சூட்டில் பிரட்டி சாப்பிடும் பழக்கம் நமது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இவ்வாறு சாப்பிடுவதால் பல நன்மைகள் அதிகமாவதுடன் இதிலிருக்கும் சத்துக்களும் கூடும்.
- சுவையாக இருக்கும் இந்த முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்களும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது.
- முருங்கை கீரையை அடிக்கடி உண்பதால் உடல் நன்கு செயல்படும். நரம்புகள் வலிமை பெறும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளின் சீரான இயக்கத்தை தரும் அற்புதமான கீரை முருங்கை கீரை.
- முருங்கை கீரையை எள்ளுப் புண்ணாக்குடன் சேர்த்து சமையல் செய்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
- ஆண்மை விருத்திக்கு இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகி இன்பமளிக்கும்.
- தலைவலி, தொண்டைவலி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாறுடன் மிளகு சேர்த்து அரைத்து பற்றுபோட்டால் விரைவில் பறந்து போய்விடும்.
- கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சிறிது சுத்தமான கைகளில் கசக்கி இரண்டு சொட்டு கண்களில் விட்டால் கண் நோய் அகன்றுவிடும்.
- இரும்புச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்களுக்கு இதனைப் பயன்படுத்தினால் அகன்றுவிடும்.
- சிலர் திடீரென்று தொண்டை கமறல் ஏற்பட்டு பேச முடியாமல் திணறுவார்கள். அவர்களுக்கு இந்த இலைச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு தேன் ஆகியவற்றை சேர்த்து குழைத்து தொண்டை குழியில் தடவினால் நோய் விரைவில் அகன்றுவிடும்.
- முருங்கைக்கீரையை சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு என சமையல் செய்து சாதத்துடன் சேர்த்துக் கொண்டால் எல்லா பலன்களையும் பெற முடியும்.