மூடாக்கு என்றால் என்ன?
செடிகளுக்கு தேவையான நீரினை சிக்கனமாகவும், சேமிக்கும் வகையிலும் பல உத்திகளை செடிகளுக்கு தண்ணீர் என்ற பகுதியில் பார்த்தோம். அதிலும் வாடகை வீடுகளில் இருப்பவர்கள் வீட்டில் தோட்டமமைத்தால் தண்ணீர் அதிகம் செலவாகுமே வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெறுவது சிரமமே என்று கவலைப்படவேண்டாம், இதில் ஏதாவது ஒரு உத்தியை நடைமுறைப்படுத்தினால் போதும், தண்ணீர் செலவும் மிச்சம், செடிகளும் செழிப்பாக வளரும்.
நீரில்லையானால் செடிகள் வாடுவதும், விளைச்சல் குறைவதும் அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும் உண்மையில் இவ்வளவு நீர் செடிகளுக்கு தேவையா? தேவையென்றால் எதற்காக தொட்டியின் அடியில் தூளை போடவேண்டும், அதுவும் அந்த தூளை வழியாக நீர் வடியவேண்டும்? வடியும் நீரால் சுவருக்கும் பாதிப்பு, செடிகளில் சத்து குறைபாடும் ஏற்படுகிறது.
செடிகளுக்கு நீர் தேவையா?
உண்மையில் செடிகளுக்கு அதிக நீர் தேவையில்லை, ஈரப்பதம் மட்டுமே போதும்.. செடிகளுக்கு தண்ணீர் என்ற பகுதியில் இதற்கு தொடர்பாகவே செடிகளின் ஈரப்பதத்தைக் காக்கவும் நீரினை சேமிக்கவும் பலப்பல உத்திகளைப் பார்த்தோம். இனி இயற்கை தன்னைத்தானே புதுப்பிக்கவும், பசுமையாகவும் வைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும் முறையைப் பார்ப்போம். யாருடைய உதவியியும் இல்லாமல் மரம் செடி, கொடிகளுக்கு இயற்கை தண்ணீர் ஊற்றும் அழகையும், அதனையே நாமும் நமது வீடுகளில் எவ்வாறு பின்பற்றுவது என்றும் பார்ப்போம்.
மழைபொய்த்தது விவசாயம் பாதிக்கப்படுகிறது.. நிலத்தடி நீர் குறைந்தது உணவு தட்டுப்பாடு அதிகரிக்கிறது.. உணவு இறக்குமதி உடல் நல பாதிப்பு போன்ற அனைத்துமே இந்த இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தின் மூலம் சரிசெய்யமுடியும் என்றால் அது எவ்வளவு பெரிய அதிசயம்.
நாம் தான் மண்ணையும் உணவையும் கெடுத்துவிட்டு மழையையும், மற்றவற்றையும் குறைசொல்லிக்கொண்டிருக்கிறோம். இயற்கை எந்த சூழலிலும் தனது பணியை செய்துகொண்டே தான் இருக்கிறது.
வேகமாக திரும்பிப்பார்க்க கண்ணில் படும் தெரு ஓர மரத்திற்கு யார் அன்றாடம் நீருற்றுவது என்று யோசித்தால், அதிசயம் புரியும். வீட்டில் இருக்கும் தென்னைமரத்திற்கும், மாமரத்திற்கும் அன்றாடம் குடம் குடமாக நீருற்றி பார்த்துப்பார்த்து பராமரித்தாலும் காய்ப்பு குறைவாகவும், பூக்கள் கொட்டுவதும் நிகழ்த்த வண்ணமே இருக்கிறது.
தெருக்களில் இருக்கும் மரங்களைப் பார்த்தால் வண்ண வண்ண நிறங்களில் கொத்துக்கொத்தாக பூக்களும், செழிப்பும் கண்ணைப் பறிக்கிறது. கோடையிலும் எங்கிருந்து தான் இந்த மரங்கள் ஈரப்பத்தைப் பெறுகிறது?
ஒவ்வொரு நாளும் மரங்கள் புதுப்புது இலையை பெறுவது பார்க்க அழகாக இருந்தாலும் அதற்கு காரணம் பழுத்த இலைகள் என்பது தான் ஆச்சரியம். தேவையில்லாததும், வீணானதும் என்று நினைக்கும் பழுத்த இலைகள் சருகுகளாக மாற அவை அந்த மரத்தின் அடியில் விழுகிறது.. விழுந்த இலைகள் தான் அந்த மரத்தையே வாழவைக்கிறது…
காய்ந்த இலைகள் தெருவோர மரங்களின் அடியிலேயே இருக்க விடியற்காலை பனி அன்றாடம் அதன் மேல் விழ சருகுகள் ஈரமாவதுடன் அடியில் இருக்கும் மண்ணையும் ஈரமாக்குகிறது. இந்த ஈரமான மண்ணையும் வெயில் படாதவாறு மூடியே சருகுகள் வைக்கிறது. இதனால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன், மேலிருக்கும் ஈரமான இலைகளையும் உண்ண பல பல நுண்ணுயிர்கள் வருகிறது. அவற்றுடன் மேல் மட்ட மண்புழுக்கள் இந்த இலைகளை சிதைத்து சிறந்த உரத்தையும் மரங்களுக்கு இயற்கையாக அளிக்கிறது. மரமும் செழிப்பாக இந்த பனித்துளியின் துணையுடன் இயற்கையாக இருக்கிறது.
இதனையே நாமும் நமது வீடுகளில் செய்ய மண்ணும் செழிப்பாகும், ஈரப்பதமும் காக்கப்படும், நீரின் செலவும் குறையும். என்ன மண்ணை மூடுவதா? சூரியஒளி? என்கிறீர்களா.. ஆம் மண்ணை மூடவேண்டும் தான். சூரியஒளி செடிகளுக்கும், இலைகளுக்கும் தான் வேண்டும், மண்ணிற்கும், வேர்களுக்கும் சூரியஒளி தேவையில்லை.
செடிகளுக்கு சூரிய ஒளி
செடிகளுக்கு சூரிய ஒளி என்ற பகுதியில் shade net, greenhouse பற்றி பார்த்தோம், இவை தேவையற்றது என்பது இப்போது புரிந்திருக்கும். நிழலில் வாழும் செடிகளைத்தவிர மற்றசெடிகளுக்கு கட்டாயம் வெயில் தேவை. 50% நிழல்குடையினை இந்த நிழல் விரும்பி செடிகளுக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும், மற்ற செடிகளை வெயில் படுமாறு வைப்பதே ஆரோக்கியமானது. சூரியஒளியே நமக்கான சிறந்த சத்துமிக்க காய்களையும், பழங்களையும் அளிக்கும்.
இலைகளும், செடிகளும் சூரியஒளியில் பட காய்ப்பும், விளைச்சலும் அதிகமாகும். மண்ணையும், வேர்களையும் மட்டும் தான் மூடவேண்டும், செடிகளை இல்லை.
இவ்வாறு வேர்களையும், மண்ணையும் மூடுவதற்கு பெயர் மூடாக்கு என்பதாகும். ஆங்கிலத்தில் Mulching என்பார்கள். அடுத்த பகுதியில் மூடாக்கு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.