Drynaria quercifolia: முடவாட்டு தேக்கு; செம்மரிக்கிழங்கு; முடவாட்டுக்கால்; ஆகாயராஜன்
‘ஆகாயராஜன்’ இது கற்ப மூலிகையாகும். இதனை ஆட்டுக் கால் கிழங்கு என்றும் கூறுவதுண்டு. இந்த கிழங்கு மூலிகைகள் வேர்கள் இல்லாமல் அடர்ந்த வனங்கள், மலைகளில் பாறைகளுக்கு இடையில் வளரக் கூடியது.
மலைப் பாறைகளில் உள்ள இலை மட்கு, செம்பு தங்கம் இரும்பு கால்சியம் போன்ற உலோக சத்துக்கள் அதிலும் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது இந்த முடவாட்டுக்கால் கிழங்கு. சிலிகா அயனி இந்த முடவாட்டுக்கால் கிழங்கின் சிறந்த கற்ப மருந்தாக உள்ளது.
முடம் நீக்கும் கிழங்கு என்பது மருவி முடவாட்டுக்கால் கிழங்கு என்றானது. இந்த கிழங்கை ஒரு மண்டலம் தொடர்ந்து உண்ண வாத, பித்த, கப சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் நீக்கி உடம்பை காயகல்பம் அடைய செய்யும்.
தாய்ப்பாலுக்கு இணையான பல சத்துக்களைக் கொண்ட இந்த முடவாட்டு தேக்கு கிழங்கு மூட்டு வலி, இடுப்பு வலிக்கு மிகச்சிறந்த மருந்து. அதிலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கும் மிகச்சிறந்த மருந்து. முடவாட்டுக்கால் கிழங்கின் இலைகளை வீக்கத்திற்கு அரைத்து பூச நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூளைக்கு
மூளைக்கு புத்துணர்வு அளித்து மனதையும், எண்ணங்களையும் மகிழ்ச்சியாகவும் சிறந்த மனநிலையையும் அளிக்கும் அற்புத கிழங்கு.
குழந்தை பேறு
குழந்தை பேறு அடைய விரும்புபவர்கள் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு தொடர்ந்து ஒரு மண்டலம் எடுத்துவர மலட்டுத்தன்மை, மாதவிடாய் கோளாறுகள், கருப்பை தொந்தரவுகள் நீங்குவதுடன், பல சத்துக்களையும் அளித்து விந்துவை அடர்த்தியாக்கும்.
முடவாட்டுக்கால் கசாயம்
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த பலனை முடவாட்டுக்கால் கசாயம் அளிக்கும். முடவாட்டுக்கால் கிழங்கை கழுவி, நன்கு சுத்தம் செய்து, தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி அதனை நீரில் இட்டு அரை பங்காக்கி கசாயமிட்டு குடிக்க பல நோய்களும் நீங்கும்.
முடவாட்டுக்கால் சூப்
உடலில் ஏற்படும் பல வலிகளுக்கு சிறந்த நிவாரணம் இந்த முடவாட்டுக்கால் சூப். இருமல், காய்ச்சல், வாய்வு தொந்தரவு, வயிற்றுப்போக்கு தொடங்கி இடுப்பு வலி, முடக்கு வாதம் வரை பல தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த சூப். கால் கிலோ அளவு முடவாட்டுக்கால் கிழங்கை கழுவி, நன்கு சுத்தம் செய்து, தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு கசகசா ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு லவங்கப்பட்டை, சின்ன வெங்காயம், பெருங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவையும் அதனுடன் நறுக்கிய முடவாட்டுக்கால் சேர்த்து அரை மணி நேரம் சிறு தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொண்டு பருகி வர மூட்டு சார்ந்த வலிகள், அசதி, தசை பிடிப்பும் பறந்தோடும்.
முடவாட்டுக்கால் தோல்
முடவாட்டுக்கால் தோலை நீர் விட்டுக் கொதிக்க வைத்து குளித்து வர மூட்டு வலி, அசதி, உடல் வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.