முடக்கத்தான் கீரை – நம் மூலிகை அறிவோம்

முடக்கத்தான்; முடக்கறுத்தான்; Balloon Vine; Cardiospermum halicacabum; Mudakathan

இந்தியா முழுவதும் சாதாரணமாக வரக்கூடிய ஒரு கொடியினம் தான் இந்த முடக்கத்தான் கீரை. பொதுவாக தமிழகம், வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளரக் கூடியது. இமயமலை பிரதேசங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் இது தன்னிச்சையாக வளரக் கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த முடக்கத்தான் கீரையை அதிகமாக பார்க்க முடியும்.

முடக்கத்தான் செடியில் இலையும் வேரும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை துவர்ப்பு, கைப்பு, வெப்பம், கார்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும். இக்கீரை சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி, பசியை தூண்டி, உடல் உரமாக்கி, தடிப்பு உண்டாகும் செயல்களை செய்யும்.

முடக்கத்தான் கீரை உணவுகள்

முடக்கத்தான் கீரை கசப்பு சுவை உடையதாக இருக்கும். இதனை அடையாக தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடுவார்கள்.

தோசை தயாரிப்பதற்கு உளுந்து மாவுக்கு பதிலாக இக்கீரையை பயன்படுத்துவதும் உண்டு. முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் கலந்து இரவில் வைத்திருந்தால் மறுநாள் தோசைக்கு ஏற்ற புளிப்புத் தன்மையை மாவு பெற்று விடும். இந்த மாவில் தோசை செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தோசை மிருதுவாகவும் இருக்கும்.

முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம் அல்லது பயறு வகைகளுடன் சேர்த்து கூட்டு, பொரியல் செய்து உண்ணலாம். பொரியலில் வெங்காயம் அதிகம் சேர்ப்பது நல்லது. இதனை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வெந்தயம், உளுந்து ஆகியவற்றை நன்கு நெய்யில் விட்டு வறுத்து தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம்.

முடக்கத்தான் கீரையை பச்சையாக உண்பது சிறப்பான பலனைத்தரும்.

முடக்கத்தான் கீரையை மிளகு ரசம் வைத்து உண்ணலாம். ஆனால் முடக்கத்தான் கீரையை பச்சையாக உண்பது சிறப்பான பலனைத்தரும். இக்கீரையை உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து பச்சையாக உண்ணலாம்.

https://www.youtube.com/watch?v=UAygFSs87Gk

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்தால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

முடக்கத்தான் கீரையின் ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்தை பொருத்தளவில் இக்கீரையில் புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து முதலியன நிறைந்த அளவில் உள்ளன.

மருந்தாகும் முடக்கத்தான் கீரை

பச்சிலை மருந்து

முடக்கத்தான்கீரை பச்சிலை மருந்துகளில் மிகச் சிறந்த பச்சிலையாக விளங்குகிறது. முடக்கத்தான் இலை வேர் ஆகிய இரண்டுமே மருத்துவத்திற்கு உதவக்கூடியது.

தோல் நோய்கள்

முடக்கத்தான் கீரையை அரைத்துக் காலையில் நெல்லிக்காய் அளவு உண்ண சொறி சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல்

இதனை குடிநீீராக காய்ச்சி குடித்து வர குடலை சுத்தமாக்கி, மலச்சிக்கலை போக்கும் ஆற்றல் பெற்றது.

குடலிறக்கம்

முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து சிறிது கருப்பட்டி சேர்த்து உட்கொள்ள குடலிறக்கம் நோயிலிருந்து வெளிவரலாம்.

உடல் வலி நீங்கி உடலுக்கு வலுவூட்டும்

இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை கால் வலி, கை கால் குடைச்சல் முதலியவற்றிற்கு முடக்கத்தான் கீரை சிறந்த மருந்தாக உள்ளது. இக்கீரை உடலுக்கு வலுக்கொடுக்கும் ஆற்றலை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு சிறந்த கீரையாகும். நிறைந்த ஆற்றலையும் சக்தியையும் உடலுக்கு அளிக்கக்கூடியதாகவும் உள்ளது. அதனால் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்டும் மருந்துகளில் இக்கீரை சேர்க்கப்படுகிறது. இக்கீரையை முறையாக உண்டு வந்தாலே தசைநாரும், நரம்புகளும் வலுப்பெறும். இக்கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உண்பதால் உடல் வலி மற்றும் தசை வலிகளை போக்க வல்லது.

https://www.youtube.com/watch?v=jewjoVrk0Rc

கண்வலி நீங்கு

இக்கீரையை வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்ண கண்வலி நீங்கும். கண் சம்பந்தமான நோய்களுக்கு இக்கீரை சிறந்தது.

கொப்புளங்கள் கட்டிகள்

இதனை பாலுடன் சேர்த்து அரைத்து கொப்புளங்களுக்கும் கட்டிகளுக்கும் தடவிவர குணம் கிடைக்கும்.

காதுவலி

கிராமப்புறங்களில் காதுவலிக்கும் இக்கீரையை பயன்படுத்துவதுண்டு. கீரையை வதக்கி பிழிந்து சாறு எடுத்து இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காது வலி, காது குத்தல் முதலியன நீங்கும். சீழ்வடியும் காதுகளில் இலை சாறை விட சீழ்வடிதல் நீங்கி காது சுத்தப்படும்.

மூலநோய்

மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக முடக்கத்தான் கீரை உள்ளது. ஒரு பிடி முடக்கத்தான் கீரையை இடித்து ஒரு பழகின சட்டியில் போட்டு அரை கப் நீர் விட்டு கால் கப்பாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை மூன்று நாள் கொடுக்க நரம்பு சம்பந்தமான மேகவாய்வு, மூச்சுப்பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் இவைகள் போகும்.

கருப்பைக்கு

முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்து கட்ட சூதகத்தை அதிகப்படுத்தி சிக்கல்பட்ட உதிரத்தை வெளியே அகற்றி கருப்பையை சுத்தப்படுத்தும்.

சுகப்பிரசவத்திற்கு

முடக்கத்தான் கீரையை இடித்து பிரசவிக்கும் நிலையில் உள்ள பெண்கள் அடி வயிற்றில் கட்டுவதினாலும் இலையின் சாற்றை பூசுவதனாலும் சிறிது நேரத்திற்குள் சுகப் பிரசவமாகும். தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பார்கள். பிரசவமானவுடன் வயிற்றை வெந்நீரில் கழுவ வேண்டும்.

வாத வலி

முடக்கத்தான் இலையை எண்ணெயிட்டு காய்ச்சி அவ்வெண்ணையை வாத வலிகளுக்கு பூசலாம். முடக்கத்தான் கீரையை அரைத்து வாத நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதிகளுக்கும், உடல் விரைப்புகளுக்கும் பூசினால் விரைவில் குணமாகும்.

இலை வேர் முதலியவைகளை கசாயம் செய்து வாதம், மூலம், நாள்பட்ட இருமல் முதலியவற்றிற்கு கொடுக்க சிறந்த பலனை பெறலாம்.

வேர் கசாயத்தை மூல நோய்க்கு கொடுக்கலாம். இதன் கஷாயத்துடன் ஆமணக்கு எண்ணெய் விட்டுக் கொடுக்க பேதியாகி வயிற்றிலுள்ள வாத நீர், பித்தநீர் முதலியவைகளை பேதி மூலம் வெளிப்படுத்தி தேக ஆரோக்கியத்தை கொடுக்கும்.

https://www.youtube.com/watch?v=D2Xa-tTscYg

மாதவிடாய் காலங்களில் அதிகமாக போகும் உதிரப் போக்கைக் தடுத்து இக்கீரையின் சாற்றினை மேசைக்கரண்டி அளவு உண்ண சம்மப்படும். இதன் விதையை உண்பதால் நினைவாற்றல் மிகச்சிறந்திருக்கும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

முடக்கத்தான்கீரை சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருப்பினும் அதனை பயன்படுத்துவோர் குறைவாகவே உள்ளனர். காரணம், இக்கீரையைப் பற்றி முழு விவரம் நம் நாட்டு மக்களுக்கு கிடைக்காததே ஆகும். இதன் பண்பையும் பயனையும் கருதி இக்கீரையை நாம் உணவுடன் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்ததாகும்.

(1 vote)