பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தப்பின் தாய்ப்பாலையும் அதனுடன் இணை உணவாக பிற உணவுகளையும் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.
என்ன உணவை குழந்தைக்கு முதலில் தரலாம்
எந்த உணவை குழந்தைக்கு முதலில் அளிக்க வேண்டும் என்றால் நமது குடும்பம், பாரம்பரிய, கலாசார வழக்கப்படி கொடுக்க வேண்டும். அந்த வரிசையில் இந்த பதிவில் குழந்தைக்கு தரவேண்டிய காலை உணவு மற்றும் தாய்ப்பால் எப்பொழுது தரவேண்டும் என பார்க்கலாம்.
காலை உணவு எத்தனை மணிக்கு?
காலையில் குழந்தைக்கு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை அளிக்க வேண்டும். காலையில் இணை உணவை அளிப்பதால் குழந்தைக்கு தாய்ப்பாலை காலை உணவிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அளிக்கலாம். அதாவது காலையில் ஆறு மணிக்கு தாய்ப்பாலை அளிக்கலாம். அதன் பின் நேரடியாக காலை உணவை அளிக்க வேண்டும். இணை உணவை குழந்தைக்கு கொடுத்த பின் சிறிது வெந்நீர் ஸ்பூனில் அளிக்க வேண்டும்.
காலை உணவு பட்டியல்
காலையில் குழந்தைக்கு கேழ்வரகு பால் கூழ், மசித்த இட்லி, மூடி வேகவைத்த ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றை அளிக்கலாம். இந்த உணவுகளை சிறிது சிறிதாக எடுத்து அவற்றை கைகளால் மசித்து பின் சிறு சிறு கவளமாக தர வேண்டும். இவற்றுடன் பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் ஆகியவற்றை சேர்த்து மசித்து அளிக்கலாம். இணை உணவை குழந்தைக்கு கொடுத்த பின் சிறிது நீரை ஸ்பூனில் அளிக்க வேண்டும். குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ உணவு அளிக்க வேண்டும். குழந்தைக்கு உணவு அளிக்க அளவு கிடையாது. குழந்தை விரும்பி உண்ணும் வரை அளிக்கலாம். ஒவ்வொரு முறை வாயில் குழந்தைக்கு உணவை வைக்கும் பொழுதும் நாமும் சைகை மூலம் வாயை திறக்கவும், வாயை மூடி மெல்லவும் செய்து காட்டலாம்.
இடை உணவு
பின் இரண்டு மணி நேரம் இடைவேளை விட்டப்பின் பதினோரு பன்னிரண்டு மணிக்கு வீட்டில் புதிதாக நாம் தயாரித்த பழ ஜூஸ் தரலாம். மாதுளை, ஆப்பிள், திராட்சை ஆகியவற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு அளிக்கலாம்.
எவ்வளவு நாள் பழக்கப்படுத்த வேண்டும்
குழந்தைக்கான திட உணவை தொடங்கியப்பின் இவற்றைப் பழக்கப்படுத்திய பின் அதாவது ஓரிரண்டு வாரங்கள் இதனை தொடர்ந்த பின் மறு வேளை உணவை துவங்கலாம். மற்ற நேரங்களில் தாய்ப்பாலை மட்டுமே அளிக்க வேண்டும்.
எவ்வாறு குழந்தை உணவை தயார் செய்வது?
குழந்தைக்கு அளிக்கும் உணவுகள் பழங்கள் ஆகியவற்றை புதிதாக தயாரித்து மட்டுமே அளிக்க வேண்டும். மீண்டும் சூடுபடுத்தி அல்லது பழங்களை சாறாக தயாரித்து வைத்துவிட்டு தாமதமாக தரக்கூடாது. புது உணவு, சுத்தமான உணவு, தயாரித்த சிறிது நேரத்தில் அளிக்க வேண்டும், முடிந்த வரை பூச்சிக்கொல்லிகள் அற்ற உணவை அளிக்க வேண்டும்.