ஆவாரம்பூ குடிநீர் / தேநீர்
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
கரிசாலை குடிநீர் / தேநீர்
கரிசாலையுடன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
நன்னாரி குடிநீர் / தேநீர்
நன்னாரி வேரை, நன்கு அலசி உலர்த்திய பின், சற்று அரைத்து, தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இந்த நீரை தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது பனங் கற்கண்டு சேர்த்து பருகி வர, நீர்க் குத்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவை விலகும். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த குடிநீர்.
துளசி குடிநீர் / தேநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
நெல்லிப்பட்டை குடிநீர் / தேநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தலாம். ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க்காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
மாம்பட்டை குடிநீர் /தேநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
ஆடாதொடை குடிநீர் / தேநீர்
ஆடாதொடை இலைகளை சிறிதாக நறுக்கி நெய் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தலாம். ஆடாதொடை பொடிகளையும் கொதிக்கவைத்து அருந்தலாம். சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
வல்லாரை குடிநீர் / தேநீர்
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். நினைவாற்றலை அதிகரிப்பதுடன் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
சீரகக் குடிநீர் / தேநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும். சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
மேலும் மூலிகைத் தேநீர் அவசியமா? பக்கத்தை பார்க்க – மூலிகைத் தேநீர் அவசியமா?