மூக்கிரட்டை கீரை; Boerhavia diffusa; Punarnava
சாதாரணமாக தமிழகத்தில் பார்க்கக்கூடிய ஒரு படர் கொடி வகை கீரை இந்த மூக்கிரட்டை கீரை. இக்கொடிகள் தன்னிச்சையாக வளரும் தன்மை கொண்டது.
சிறுநீரக கற்களை கரைக்க கூடிய ஆற்றல் நிறைந்த இந்த மூக்கிரட்டை கீரை உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு அதிலும் ராஜ உறுப்புகள் என்று சொல்லக்கூடிய சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்களை எளிதாக தீர்க்க கூடியதாகவும் உள்ளது.
மூக்கிரட்டை வேறு பெயர்கள்
தமிழ் மருத்துவர்கள் இதனை ‘புனர்வாழ்வு’, ‘புனர்நவா’ என்றும் கூறுவதுண்டு. வடமொழியில் இதன் பெயரான ‘புனர்நவா’ என்பதற்கு பொருள் உடலில் உள்ள செல்களை புத்துணர்வு அளித்து புதுப்பிக்கும் தன்மை கொண்டது என்பதாகும். அதாவது செயலற்றுப் போன சிறுநீரகங்களை கூட ஊக்கமளித்து உயிரூட்ட கூடிய ஒரு அற்புதமான கீரை இந்த மூக்கிரட்டை கீரை. இதன் மலரின் நிறத்தால் ‘இரத்த புஷ்பிகா’ என்ற வடமொழியில் ஒரு பெயரும் உண்டு. மூக்குறட்டை, இரத்த புட்பிகா, புட்பகம், மூக்கரட்டை என பல பெயர்களும் இதற்கு உண்டு.
தமிழ்நாட்டில் இதனை கீரைக்காகவே கூட பல இடங்களில் பயிரிடுகின்றனர். இக்கீரையை பல வித உணவாக செய்து உண்பது நம் நாட்டு வழக்கம் அதேபோல் மற்ற கீரைகளுடனும் சேர்த்து இக்கீரையை சமைக்கலாம். மூக்கிரட்டை கீரையை வேகவைத்து குழம்பாகவும் உண்ணலாம். பருப்பு வகைகளுடன் சேர்த்து கூட்டும் தயாரிக்கலாம். மூக்கிரட்டை கீரையில் பொரியல், துவையல், கடையல் என அனைத்து வகை உணவுகளையும் செய்து உண்ணலாம்.
இந்த மூக்கிரட்டை கீரையின் நரம்புகள் மெல்லியதாக இருக்கும். இலைகள் அரை ரூபாய் நாணயத்தளவு கரும் பச்சையாக ஊதா நிறம் கலந்து இருக்கும்.
சத்துக்கள் நிறைந்த மூக்கிரட்டை கீரையில் புரதச்சத்துக்கள், கொழுப்புச் சத்துக்கள், தாது சத்துக்கள், நார்ச்சத்துகள் என அனைத்து விதமான சத்துக்களும் உள்ளது. வெப்ப ஆற்றல் 61 கலோரியை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது.
100 கிராம் கீரையில் 667 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 250 மில்லிகிராம் மணிச்சத்தும், 18.4 மில்லி கிராம் இரும்புச் சத்தும் உள்ளது. உயிர்சத்துக்களில் ஒன்றாகிய வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த கீரையாகவும் இருக்கக்கூடிய இந்த கீரை.
சாரணை என்ற ஒரு கீரையும் மூக்கரட்டை கீரை போன்ற அமைப்பைக் கொண்டு இருக்கக் கூடியது ஒரு கீரை. ஆனால் சாரணை கீரை வேறு மூக்கிரட்டை கீரை வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாடினை அதன் தண்டுகள் மூலம் வேறுபடுத்தலாம். மூக்கிரட்டை கீரையின் தண்டுகள் நரம்புகளைப் போல இருக்கும், சாரணை கீரையின் தண்டுகள் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருக்கும்.
மூக்கிரட்டை கீரை குழந்தை மருத்துவத்தில் ஒரு சிறப்பிடத்தைப் கொண்டிருக்கக்கூடிய கீரை. பண்டை காலத்தில் தமிழர்கள் இதனைக் கொண்டுதான் குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாத்து வந்தனர். இன்றும் இந்த பழக்கம் கிராமப் புறங்களில் அதிகமாகவே காணப்படுகிறது. எந்தவிதமான குழந்தை நோயானாலும் அந்த நோய்க்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த நோய் நீக்கும் நிவாரணியாக உள்ளது.
சமையலில் மூக்கிரட்டை கீரையை சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடலுக்கு வாய்வு சம்பந்தமான நோய்கள் வராது. இவ்வாறு உண்பதால் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் உடலை அணுகாது. மேலும் இரத்த விருத்தி செய்து உடலுக்கு ஆண்மையையும் அழகையும் ஊட்ட வல்லது இந்த மூக்கிரட்டை கீரையாகும்.
கண் நோய்
கண் நோயைத் தீர்ப்பதில் இக்கீரை பொன்னாங்கண்ணி கீரை நிகரானது. பொன்னாங்கண்ணி கீரையைப் போன்றே இக்கீரையையும் நெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் உண்டு வர கண் சம்பந்தமான நோய்கள் தீரும். இக்கீரையால் மலச்சிக்கல் நீங்கும். உடல் வலுபெறும். இக்கீரையை உணவாகச் சமைத்து ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உண்டுவர மூட்டு நீர் கட்டு போன்ற வாத வலி நோய்கள் நீங்கும். நமைச்சல் வாத நோய்களை நிவர்த்தி செய்யும். நீர் தாராளமாக போகும், வாயுவை விரட்டும்.
இடுப்பு வலி, மூட்டு வலி குணமாக
மூக்கிரட்டைக் கொடியை வேருடன் கொண்டுவந்து வேரை மட்டும் நறுக்கி கழுவி கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து இடித்து ஒரு சட்டியில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதை இரண்டு பங்காக்கி காலையில் ஒரு பங்கு மாலையில் ஒரு பங்கு என தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி குணமாகும். மேலும் லேசான வலி இருந்தால் மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட பூரண குணம் ஏற்படும்.