Mimosa Rubicaulis; இண்டு
இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு ஏறு கொடி இந்த இண்டு மூலிகை. புதர்களிலும் மரங்களிலும் அதிகமாக படர்ந்திருக்கும். அக உடல் புற உடல் என உடலுக்கு பலவகைகளில் பலன் அளிக்கும் மூலிகை. அக உடலுக்கு பல மூலிகைகளுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ குடிநீர், சாறு எடுத்து பல நோய்களுக்கு நல்ல பலனைப் பெறலாம். அதுவே குளியல் பொடியுடன் இந்த இண்டு மூலிகையையும் சேர்த்து இயற்கை குளியல் பொடி தயாரித்துப் பருக நல்ல நுரைவளம் கிடைக்கும்.
இண்ட, புலித்துடக்கி, ஈகை, இங்கை, ஈயக்கொழுந்து என பல பெயர்கள் இந்த இண்டு மூலிகைக்கு உண்டு. கார்ப்பு சுவைக் கொண்ட இண்டு கொடியின் தண்டுகளிலும், கிளைகளிலும் அதிக முள் வளரிகள் இருக்கும். இதன் இலை கள் சிறிதாக கூட்டிலைகளாக இருக்கும். வெள்ளை நிற பூக்கள் கொண்ட இந்த கொடியின் தண்டு, இலை ஆகியவை பயன்படும் பகுதிகள். உடலில் ஏற்படும் கோழை, மூலம் அகற்றி, வெப்பமுண்டாக்கியாகவும் செயல்படும் இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. கப நோய்களைத் தீர்க்கும்.
இண்டு பயன்கள்
இந்த இண்டு கொடியை ஒடித்து ஊதினால் மறுபுறம் சாறு வரும், இந்த சாறினை எடுத்து இரண்டு துளி மூக்கில் விட ஜலதோசம், வலி, ஈளை, மண்டைக் குடைச்சல் மறையும். அரை ஸ்பூன் சாறு குழந்தைகளின் கபம், வாத வீக்கங்கள், மாந்தம், சளி ஆகியவற்றையும் போக்கும். இந்த சாறினை பெண்களுக்கு தொடர்ந்து கொடுக்க சூதக வாயு, தீப்புண், வெள்ளை போன்றவை நீங்கும். இண்டுக் கொழுந்தை கபம் போக்கும் சில மூலிகைகளுடன் சேர்த்து கசாயம் தயாரித்து காலை, மாலை சிறிதளவு பருகி வர இருமல், இரைப்பு நீங்கும்.