மயில் மாணிக்கம் – நம் மூலிகை அறிவோம்

Ipomoea Quamoclit; cypress vine; மயில் மாணிக்கம்

மயில் மாணிக்கம் கிராமங்களில் சாதாரணமாக வளரக்கூடிய ஒரு அலங்காரத் தாவரம். இதனை மயிர் மாணிக்கம் என்றும் மயில் மாணிக்கம் என்றும் அழைப்பதுண்டு. இந்த தாவரத்தின் இலைகள் மயில் இறகு போல மிகவும் மென்மையாகவும் பசுமையாகவும் காணப்படும் அதனாலேயே மயில் மாணிக்கம் என பெயர் வந்திருக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க கூடிய ஒரு கொடிவகை தாவரம்.

சுமார் ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரே காம்பில் இருபுறமும் சுமார் இரண்டு சென்டிமீட்டர் நீளம், ஒரு மில்லி மீட்டர் அகலமுள்ள இலைகள் இணைந்து, தண்டில் அமர்ந்திருக்கும் ஒரு கொடிவகை தாவரம் இது. அடர்த்தியின்றி படரும், பல கிளைகளிலும் மேலே கூறியவாறு இலைகள் பற்றி இருக்கும்.

சிகப்பு நிறமான சுமார் 4 சென்டி மீட்டர் நீளமுள்ள பூக்களை புஷ்பிக்கும். பூக்கள் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். காலையில் இந்த பூக்கள் பூக்கும். ஆடி முதல் தை வரையான காலங்களில் பூக்கள் அதிகமாக இருக்கும். தேனி ஓசனிச்சிட்டு (Humming bird) பறவைகளுக்கு மிகவும் விருப்பமானது இந்த பூக்களும், கொடியும்.

மயில் மாணிக்கம் கொடி குண்டு குண்டான காய்களைக் காய்க்கும். ஒவ்வொரு காயிலும் நான்கு நான்கு விதைகள் இணைந்து இருக்கும். இந்த விதைகள் இரண்டு பக்கம் பட்டையாகவும், ஒரு பக்கம் உப்பலாகும் இருக்கும். விதைகள் சிறியதாகவும் சாம்பல் அல்லது கருமை நிறமாகவும் காணப்படும். இதை அலுவலகங்கள், பங்களாக்களிலும் வீடுகளிலும் அழகுக்காக வளர்ப்பார்கள்.

மயில் மாணிக்கத்தின் இலைகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். வேலி ஓரங்களில் அழகாக படர்ந்து காணப்படும் செடி. இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் இதனைப் பார்க்க முடியும். மண்ணிலும் தொட்டியிலும் இதனை எளிமையாக வளர்க்கலாம். மயில் மாணிக்கத்தை வளர்ப்பது மிக எளிது. அதிக வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது ஒரு அற்புதமான தாவரம்.

க்ஷயரோகம், காச நோய் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. வெள்ளை ஒழுங்கினையும் இது குணப்படுத்திவிடும். மேலும் பல நோய்களுக்கு கூட்டு மருந்தாகவும் இதனை நாட்டு மருத்துவத்தில் பக்குவமாக பயன்படுத்துவதுண்டு. மயில்மாணிக்கம் இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து பெரிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை கொடுத்து வந்தால் மேற்சொன்ன வியாதிகள் குணமாகும்.

(3 votes)