Welcome to HealthnOrganicsTamil !!!

மாதுளம் பழம்

இரும்புச் சத்து அதிகம் இருக்கக்கூடிய பழம் என அனைவருக்கும் தெரிந்த ஒரு பழம் இந்த மாதுளம் பழம். சாதாரணமாக சந்தைகளிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் இந்த மாதுளை.

மாதுளம் பழ செடிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் சுற்றியிருக்கும் நாடுகளில் முதன்முதலாக தோன்றியது. பெரும்பாலும் மாதுளம் பழ செடிகளை வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கப்படுகிறது. பல அரசர்கள் இந்த மாதுளம் செடிகளை வளர்ப்பதற்கு பல தனி தோட்டங்களை வைத்திருந்தனர் என்றும் வரலாறுகள் கூறுகிறது. தற்பொழுது உஷ்ணப் பிரதேசங்களில் எல்லா இடங்களிலும் இது வளர்க்கப்படுகிறது.

மிகவும் அழகான ரத்த சிவப்பு பூக்களுடன் காணப்படக்கூடியது. இப்பழத்தின் மேற்புறம் தோல் போன்று இருக்கும் உள்பக்கத்தில் விதைகள் லேசான சிவப்பு நிற சதையால் மூடப்பட்டிருக்கும். இதில் பல வகைகள் உள்ளன. இதில் நாட்டு ரகமும் உண்டு, வெளிநாட்டு ரகமும் உண்டு.

இரு வகைகள் கொண்ட மாதுளையில் இனிப்பு மாதுளையை விட புளிப்பு மாதுளை உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. பொதுவாக மாதுளம் பழம் நீராகப் போகக்கூடிய மலத்தை கட்டி உடலுக்கும், மலக்குடலுக்கும் பலத்தை அளிக்கக்கூடியது. மாதுளையில் துவர்ப்பு சுவை மிகுதியாக இருப்பதால் உடல் கட்டு, ரத்த புஷ்டி, பலமும் உண்டாகும். உஷ்ணம் மிகுதியாகி வரும் சகல பேதிகளுக்கும், இரத்தபேதி, சீதபேதி கழிச்சல் என அனைத்தையும் குணமாக்கக் கூடிய ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு பழம் இந்த மாதுளம் பழம்.

மாதுளம் பழத்தை விதையோடு சாப்பிடுவது நல்ல பலன் தரும். இரத்தம் இல்லாது வெளுத்துப்போனால் இதன் விதையை மென்று தின்று வந்தாலே போதும், உடம்பு சிவப்பு நிறமாக மாறும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட வேண்டும். இரத்தசோகையிலிருந்து வெளிவரலாம்.

இப்பழத்தில் ஒருவித அமிலச் சத்து உள்ளது. இப்பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் இயல்புடையது. நன்கு பழுத்த பழங்கள் வெடிக்கும் தன்மை உடையவை. அதனால் முதிர்வதற்கும் முன் அவற்றை பறித்துவிட வேண்டும்.

இப்பழத்தின் பல சத்துக்கள் உள்ளது.
புரதச்சத்துக்கள் 1.6 சதவீதம்
கொழுப்புச்சத்து 0.1 சதவீதம்
தாதுச்சத்து 0.7 சதவீதம்
நார்சத்து 5.1 சதவீதம்
மாவுச்சத்து 14.6 சதவீதம்
சுண்ணாம்புச்சத்து 0.01 சதவீதம்
இரும்புச்சத்து 0.3 மில்லி கிராம்
ரிபோபிளவின் 10 மில்லி கிராம்
வைட்டமின் சி 16 மில்லி கிராமும் உள்ளது.

பித்த நோய்கள் தீர

மாதுளம் பூக்களின் சாற்றை எடுத்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2 வேளை சிறிதளவு குடித்து வர பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கம், உஷ்ணம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

ஒரு பத்து மாதுளம் பூவை எடுத்து ஒரு குவளை தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி அரை குவளையாக சுண்ட வைத்து சிறிது கற்கண்டு சேர்த்து மேற்கண்ட வியாதிகளுக்கு கொடுத்தாலும் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

பேதி கட்டுப்பட

புளிப்பு மாதுளம் பிஞ்சுகளை எடுத்து வந்து சுத்தம் செய்து இடித்து மெல்லிய துணியை வைத்துப் பிழிந்து அதன் சாற்றை சிறிதளவு தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை பருக பேதி கட்டுப்படும். அதேபோல் மாதுளம் பிஞ்சுகளை நசுக்கியும் அரை நெல்லிக்காய் அளவு அப்படியே சாப்பிட்டு வருவதாலும் இந்த தொந்தரவுகள் நீங்கும்.

மாதுளம் பழம் தோலையும் நன்றாக வெயிலில் காயவைத்து இடித்து தூள் செய்து பாட்டில்களில் வைத்துக்கொண்டும் மேற்கண்ட நோய்களுக்குப் பயன்படுத்தலாம். நல்ல ஒரு பலன் கொடுக்கும்.

மாதுளை பழரசம்

மாதுளம் பழத்தில் பழரசம் தயாரித்து உண்பதால் ஜீரண சக்தி பெருக்கும். உஷ்ணத்தால் ஏற்படும் குடல் கோளாறுகளையும், வீக்கம், வாந்தி, வாய் நீர் சுரப்பு, காதடைப்பு, மயக்கம், குமட்டல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் என பலவிதமான தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்த ஒரு டானிக் இந்த மாதுளம் பழரசம்.

எளிதில் ஜீரணமாகும் உணவு

இதில் உள்ள சர்க்கரை சத்து எளிதில் ஜீரணிக்கும் நிலையில் உள்ளது. இந்த பழத்தின் சிறப்பே இது எளிதில் ஜீரணிக்கும் இயல்புடையது தான். இப்பழச்சாறு புத்துணர்வூட்டும் தன்மைக் கொண்டது. இருதய நோய்க்கு அருமருந்தாக உள்ளது. இரைப்பை வீக்கத்திற்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும். சீரண சக்தி குறைந்துள்ள காய்ச்சல் நோயாளிகளுக்கு இப்பழச்சாறு அற்புதமான உணவாகிறது. தாகத்தை தணிக்கவும் பயன்படுகிறது.

மாதுளை உணவுகள்

மாதுளையில் பழப்பாகு, பழச்சாறு என பல உணவுகளை செய்து உண்ணலாம். ஒரு நோயாளி உணவையே உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், இந்த மாதுளை பழச்சாறை உணவாகக் கொடுக்க, நோயாளி புத்துயிர் பெற முடியும்.

உஷ்ணத்தை குறைக்க

மாதுளம் பழம் தேகத்தின் உஷ்ணத்தை குறைக்கும், இருமலைப் போக்கும். சீதபேதிக்கு ஒரு நல்ல மருந்தாகும். இப்பழத்தின் தோலையும் கிராமம் சேர்த்து கசாயம் செய்து பருக சீதபேதி குணமாகும்.

மாதுளம் பழச்சாறு

தொண்டைப்புண் ஏற்பட்டால் மாதுளம் பழச்சாறுடன் சிறிது படிகாரம் கலந்து மருந்தாகக் கொள்ளலாம். மேலும் வாந்தி, விக்கல், மயக்கம், வயிற்றில் உண்டாகும் அஜீரணம், சூலை, நுரையீரல் வறட்சி, இரத்தக் கசிவு, சீழ்வடிதல், கருப்பை சார்ந்த புண்கள், அதிக ஜுரம், கபம் போன்றவற்றிற்கும் இப்பழம் நல்ல ஒரு மருந்தாகிறது.

நாடாப்புழு வெளியேற

வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழிக்க மாதுளம் மரப்பட்டையுடன் கிராம்பு கலந்து கசாயம் செய்து சிறிதளவு கொடுத்தால் புழுக்கள் இறந்துவிடும்.

மார்புச்சளி

மார்புச்சளி ஏற்பட்டால் மாதுளம் செடியின் பூவை உலர்த்தி தூள் செய்து ஓரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வர நோய் தீரும்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!