Quercus Infectoria; Infectoria Fagaceae; மாசிக்காய்; Magic nuts; Oakgalls
மாசிக்காய் என்பது பொதுவாக மரங்களிலிருந்து கிடைக்கும் காயை போன்ற காய் கிடையாது. நமது பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியத்தில் பயன்படும் ஒரு அற்புதமான காய் இது. மரத்தில் காய்க்காமல் ஒரு வித பூச்சிகளினால் உருவாகும் காய் இந்த மாசிக்காய். பூச்சி காயா! என்கிறீர்களா..
ஆம், கிரீஸ் நாட்டை சார்ந்த புற்று மரம் தான் மாசிக்காய் மரம். Adleria Galloetinctoriae என்ற பூச்சி இந்த மரத்தின் கிளைகளில் குருத்துப்பகுதியில் முட்டைகளை இட்டு அதிலிருக்கும் லார்வா இளம் கிளைகளின் புறத்தோல் செல்களுக்குள் செல்கிறது. இந்த பூச்சியின் லார்வாவின் வாயிலிருந்து வெளிவரும் சுரப்பி நீர் இந்த லார்வாவைச் சுற்றியுள்ள திசுவை வளரத் தூண்டுகிறது. இதனால் லார்வாவைச் சுற்றி ஒருவித திசு வளர்ந்து ஓர் உருண்டை வடிவத் தாவரப் புற்றாக வளர்ச்சி அடைகின்றது.
இந்த மர தாவரப் புற்றின் நடுவிலுள்ள வெற்றிடத்தில் வளரும் லார்வா 5 – 6 மாதங்களின் பூச்சியாக வளர்ந்து தாவர புற்றில் துவாரமிட்டு வெளியேறுகிறது. இது வெளியேறும் முன் சேகரிக்கப்படும் புற்றுதான் மருத்துவப் பயன் மிக்கது. இது கருமை, நீலம், வெண்மை என மூன்று வேறுபாடுகளுடையது. இதில் மருத்துவத்திற்காக பயன்படும் பகுதி புற்று பகுதியாகும். இது துவர்ப்பு சுவையைக் கொண்டது. இந்த புற்று காயில் உடலுக்கு நன்மை பயக்கும் பலவிதமான அமிலங்கள் உள்ளது.
அதிக உட்சூடு, குழந்தைகளின் கணச்சூடு மற்றும் மேக நோய்களை தீர்க்கும் தன்மை இந்த மாசிக்காய்க்குஉண்டு. உடலின் வன்மையை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாகவும் இந்த மாசிக்காய் உள்ளது. நஞ்சு முறியவும் பயன்படுகிறது.
கட்டிகள், வாய்ப்புண் குணமாக
மாசிக்காய் தூளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அரைபங்காக காய்ச்சி அந்த நீரினால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் நீங்கும். புண்களுக்கும் கழுவலாம். உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண், கட்டிகளுக்கும் பயன்படுத்தலாம். மூலத்திற்கு அதன் கட்டிகளில் பூச நல்ல பலனை பெறலாம்.
மாந்தம், பெருங்கழிச்சல், வெட்டை
மாந்தம், பெருங்கழிச்சல், வெட்டை போன்ற தொந்தரவுகளுக்கு மாசிக்காயை உரசி அல்லது ஒரு ஸ்பூன் அளவு பொடியை இரண்டு கப் அளவு நீரில் எடுத்து சிறுதீயில் அரைபங்கு சுண்டக் காய்ச்சி அரை ஸ்பூன் அளவு எடுத்து வர இந்த தொந்தரவுகள் தீரும்.
பெரும்பாடு, குருதி வடிதல் தீர
ஒரு சிட்டிகை அளவு மாசிக்காய் தூளை எடுத்து தினமும் காலை, மாலை உட்கொள்ள குருதியோடு கழியும் சிறுநீர், பெரும்பாடு, ஈறிலிருந்து வரும் இரத்தக் கசிவு, குருதி வாந்தி ஆகியவை தீரும். சிறிதளவு மூக்கி தடவ மூக்கில் இரத்தம் வடிதல் சீராகும்.
சரும நோய்களுக்கு
சருமத்தில் ஏற்படும் தேமல், படை, கருந்திட்டுகள், சொறி போன்ற தொந்தரவுகளுக்கு இந்த மாசிக்காய் போடி நல்ல பலனை அளிக்கும். குளியலுக்கும் பயன்படுத்தலாம். சுருக்கங்கள் மறையும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு மாசிக்காயை தேன் அல்லது நெய் கலந்து உட்கொள்ள நல்ல பலனை பெறலாம். கருப்பையில் வரும் பல நோய்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
தொண்டைக்கு
தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள், வலிகளுக்கு மாசிக்காயை உரசி வெற்றிலை அல்லது கற்பூரவள்ளியுடன் சேர்த்து சாப்பிட தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள், சுவாச குழாயில் வரும் பாதிப்புகள் நீங்கும்.