இளம் வயது ஆண்கள், பெண்களுக்கு வரும் தொந்தரவுகளில் ஒன்று முடி உதிர்வு மற்றொன்று பருக்கள் கட்டிகள். இன்னும் சிலருக்கு சருமத்தில் மருக்கள் வருவதையும் பார்க்கலாம். ஹார்மோனில் ஏற்படக்கூடிய சில மாறுபாடுகளால் வரகூடியதே இந்த தொந்தரவுகள்.
இவற்றை எளிமையாக சத்தான உணவுகளாலும் கீழிருக்கும் எளிய கை வைத்தியங்களை செய்வதாலும் தீர்க்கலாம். மேலும் பாதாம், தேங்காய் போன்ற நல்ல கொழுப்புள்ள கொட்டைப் பருப்புகளை உட்கொள்வதால் தடுக்கலாம். நன்றாக அன்றாடம் தண்ணீர் குடிக்க மீண்டும் பருக்கள் வருவதையும் கட்டுப்படுத்தலாம்.
வீட்டுக் குறிப்புகள்
- குப்பைமேனி இலையை கசக்கி பருக்களின் மீது தடவலாம். இதனுடன் மஞ்சள், வேப்ப இலையையும் சேர்த்து பூசலாம்.
- அம்மான் பச்சரிசி இலைகளில் வழியும் பாலை தொடர்ந்து மருக்களின் மீது ஒரு வாரம் பூச மருக்கள் உதிரும்.
- பருக்கள், கட்டிகள், மருக்களின் மீது சிவப்பு சந்தனத் தூளுடன் ரோஜா தண்ணீர் (ரோஸ் வாட்டர்) சேர்த்து குழைத்து பூசி வர குணமாகும்.
- சந்தனத் தூளுடன் எலுமிச்சை சாறு சேர்த்தும் பூசலாம்.
- கோஷ்ட்டம் என்கிற மூலிகையை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) எலுமிச்சை சாறில் உரசிப் போட குணமாகும்.
- சிறு தேள் கொடுக்கு இலையை அரைத்து முகப் பரு உள்ள இடங்களில் பூசவும் குணமாகும்.
- அவரை இலைச் சாறினை தினமும் குளிப்பதற்கு முன் முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் காய விட்டு குளித்து வர
முகம் பளபளப்பாகும். அனைத்து தழும்புகள் மறையும். - வேப்பிலை, பெருங்காயம், திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றை அரைத்து பாலுண்ணி எனப்படும் மருக்களின் மீது தடவ குணமாகும்.
- மஞ்சள் சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றுப் பகுதியை (ஜெல்) அரைத்துப் போட நல்ல பலனை பெறலாம்.
- நாயுருவி இலைச் சாறும் பருக்களை குறைக்கும். நாயுருவி இலையை கசக்கி பருக்களின் மீது பூசலாம்.