Bauhinia purpurea; சிவப்பு மந்தாரை, மலையாத்தி; செம்மந்தாரை
நல்ல மணமுள்ள, பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும் சிவப்பு நிற / செம்மந்தாரை ஐந்து இதழ் கொண்ட மலருடைய சிறுமர வகையை சேர்ந்தது இந்த மலையாத்தி என்ற சிவப்பு மந்தாரை மரம். மந்தாரை என்பது பொதுவாக வழிபாட்டில் பயன்படும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. மந்தாரையில் பல வகை உள்ளது. அவற்றில் இது சிவப்பு மந்தாரை.
அழகுக்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படும் மூலிகை மரம். இந்த மலர்கள் நல்ல மணமுடையது, இரவு நேரத்தில் மலர்களின் நறுமணம் ரம்மியமாக இருக்கும். கோடை காலங்களில் இந்த மரங்களின் இலைகள் உதிர்ந்து விடும்.
பயன்படும் பகுதிகள்
மந்தாரை மரத்தின் இலை, பட்டை, பூ, பூ மொட்டுகள், வேர் ஆகியவை மருந்தாக பயன்படும் பகுதிகள்.
மந்தாரை இலைகள்
பொதுவாக மந்தாரை என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது மந்தாரை இலைகள். உணவு பரிமாற நாம் அதிகம் பயன்படுத்தப்படும் இலைகளில் வாழை இலைக்கு அடுத்து அதிகம் பயன்படும் இலை மந்தாரை இலைகள். இந்த இலைகளை பதப்படுத்தி உலர்ந்த இலைகள் காலம் காலமாக உணவு பொட்டலங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் இரு காம்புப்பகுதியிலும் வெட்டியதுப்போல் இருதய வடிவில் இருக்கும். மஞ்சள் நிற மந்தாரை இலைகள் இந்த சிவப்பு நிற மந்தாரை இலைகளை விட சிறிதாக இருக்கும். இந்த மலையாத்தி வகையின் இலைகள் சற்று பெரிதாக இருக்கும். இந்த இலைகள் மூன்றை ஒன்றாக சேர்த்து வட்டமாக பதப்படுத்திய இலைகளை இன்றும் நாம் பார்க்கமுடியும். உடலுக்கும், மண்ணிக்கும், சுற்றுசூழலுக்கும் எந்த தீங்கையும் விளைவிக்காதது.
மந்தாரை மருத்துவம்
இந்தியா மட்டுமல்லாமல் பல ஆசிய நாடுகளிலும் இந்த மரங்களைக் காணலாம். இலைகள் மட்டுமல்லாமல் மந்தாரை மரங்கள் சிறந்த மருத்துவப் பயன் கொண்டதாகவும் உள்ளது. தொற்று கிருமி அகற்றியாகவும், தீமை செய்யும் கிருமியை அழிக்கும் தன்மையும் கொண்ட இந்த மந்தாரை வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, தோல் நோய், காயங்கள், வீக்கம், வாய்வு போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பயன் அளிக்கிறது.
மிக முக்கியமாக வாத நோய்கள், நீரிழிவு, நரம்பு சார்ந்த பிரச்சனைகள், இருதய நோய்கள், தைராய்டு தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிக்கிறது. மந்தாரை இலையில் சூடான உணவை உண்பது, மற்ற பாகங்களின் கசாயம் போன்றவைகளே சிறந்த பலனை அளிக்கும்.