Morinda Tinctora; நுணா; மஞ்சணத்தி; Indian Mulberry
கிராமப்புறங்களில் திரும்புமிடமெல்லாம் சாதாரணமாக பார்க்கக் கூடிய ஒரு மூலிகை மரம் மஞ்சணத்தி. துணை உணவு சந்தை, ஏற்றுமதி சந்தையில் கொடி கட்டி பறக்கும் இதற்கு நுணா என்று மருத்துவ உலகில் பெயரிருந்தாலும் கிராமங்களில் மஞ்சணத்தி என்றாலே தெரியும். மருத்துவகுணங்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல், கொடிய நோய்களையும் விரட்டும் தன்மை என அதிக மருத்துவகுணங்களைக் கொண்ட இந்த மஞ்சணத்தி பல கோடி வர்த்தகத்தையும், லாபத்தையும் அளிக்கும் ஒரு அற்புதமான மூலிகை.
நுணா, நுணவு, நோனி, தணக்கு, மஞ்சணாத்தி என பல பெயர்களும் இந்த மரவகை தாவரத்திற்கு உண்டு. இந்த மரத்தின் இலை, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. கார்ப்பு சுவையையும், வெப்ப தன்மையையும் கொண்டது. வீக்கக்கத்தை நீக்க்கும் தன்மையும், ருது உண்டாக்கும் தன்மையும், வெப்பத்தை அகற்றும் தன்மையும் கொண்டது இந்த நுணா.
எதிரிலை குறுக்கு மறுக்குமென தனி இலைகள் அடுக்கத்தில் இருக்கும். இலைக்கோணத்தில் வெள்ளை நிற மலர்கள் இருக்கும். இந்த மஞ்சணத்தியின் மரப்பட்டை தடிப்பாகவும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் உதித்த வடுக்களுடன் இருக்கும். காய்கள் சிறு கண்களுடனும் முண்டுகளுடனும் இருக்கக் கூடியவை. கட்டையில் உட்புறமும் மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த காய்கள் பழுக்க ஒருவித வாசனையுடன் கருநீலநிறமான பழங்களைப் பெறலாம்.
தொண்டை நோய்கள், வெண்புள்ளி, சரும நோய்கள், மலச்சிக்கல், கரப்பான், மாந்தம், கப ஜுரம், புண், இடுப்பு வலி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்தது.
தொண்டை வலிக்கு
மஞ்சணத்திக் காயைப் பிழிந்து சாறு எடுத்து தொண்டையில் பூச தொண்டை வலி, தொண்டை நோய்கள் தீரும். மஞ்சணத்தி மணப்பாகு செய்தும் குடிக்கலாம்.
மலச்சிக்கல் தீர
சிக்கல்களில் மிகக் கொடிய சிக்கல் மலச்சிக்கல். இதனை தீர்க்க நுணா வேர் உதவும். மஞ்சணத்தி வேரைக் கஷாயமாக்கிக் எடுக்க மலச்சிக்கல் தீரும்.
மஞ்சணத்தி பல்பொடி
கல் உப்பையும் மஞ்சணத்திக் காயையும் சம அளவு சேர்த்து அரைத்து வரட்டிப் போல் காயவைத்து புடமிட்டு பொடி செய்து பற்பொடியாக உபயோகிக்க பல் நோய்கள் நீங்கி, பற்கள் பலப்படும்.
கர்ப்பப்பை கோளாறுகளுக்கு
மஞ்சணத்தி இலையையும் பழத்தையும் குடிநீரிட்டுக் பருக கர்ப்பப்பை கோளாறுகள் தீரும்.
மஞ்சணத்தி ஊறுகாய்
நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சணத்திக் காயை ஊறுகாய் செய்து தினமும் உண்டுவர எல்லா நோய்களும் நீங்கி உடல் பலப்படும்.
மாந்தம் தீர
உப்பு, புளிப்பு, கார உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உட்கொண்டு, மஞ்சணத்தி இலைச் சாற்றுடன் நொச்சியிலைச் சாறு, பொடுதலைச் சாறு, வேலிப் பருத்தியிலைச் சாறு சம அளவு எடுக்க சகல மாந்தமும் தீரும். ஆறு மாத குழந்தைகளுக்கு அரை ஸ்பூனை விட குறைந்த அளவும், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூனும், பெரியவர்கள் இரண்டு ஸ்பூன் அளவும் எடுத்துக் கொள்ளலாம். அதேப்போல் மஞ்சணத்தி இலையுடன் பொடுதலையிலை சில மூலிகைகள் சேர்த்து குடிநீர் செய்து பருக மாந்தம் நீங்கும்.