மாமரம் – நம் மூலிகை அறிவோம்

Mangifera indica; மாமரம்

அன்றாடம் நாம் சாதாரணமாக பார்க்கும் மரங்களில் ஒன்று தான் இந்த மாமாமரம். தமிழ்நாட்டில் மாமரத்திற்கு குறைவே இல்லை. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் மாமரங்கள் அதிகமாகவே உள்ளது.

மாமரத்தை அறியாதவர்களே இருக்க முடியாது. மாமரத்தின் பழங்களை (மாம்பழத்தை) தான் நாம் சாப்பிடுகிறோம், ஆனால் மாமரத்தின் இலை முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் நமக்கு வரும் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாது. இதன் துளிர், இலை, பருப்பு, பிசின் என அனைத்தும் மருதுவப்பயனுடையது. பல சிறப்புகளுடைய மாமரத்திற்கு குதிரை, கொக்கு, மாந்தி என்றெல்லாம் பழந்தமிழில் பெயர்கள் உள்ளன.

நம் முன்னோர்கள் காலையில் வயல்வெளிகளும் தோட்டங்களுக்கும் செல்லும் பொழுது மாமரத்து இளந்தளிர்களையும், வேப்ப மரத்து இளந்தளிர்களையும் பறித்து வாயில் போட்டு மென்று வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். உடலுக்கு தேவையான் கசப்பு, துவர்ப்பு சுவை கலந்த இவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், அதிக சத்துக்களையும் அளிக்கும். ரத்தத்தை சுத்திகரித்து, உடலில் இருக்கும் தொற்றுகளையும், கழிவுகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

சீதபேதி, ரத்த பேதி குணமாக

மாமரத்தின் உள்ள நீல நிறமுள்ள இளந்தளிர்களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து அதனை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து காலை, மாலை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து உண்டு வந்தால் சீதபேதி, இரத்த பேதி குணமாகும். தினசரி காலை மாலை மூன்று நாட்கள் பருகுவது சிறந்தது.

மாமரத்தின் பட்டை, அரச மரத்துப் பட்டை, நெல்லி மரத்துப் பட்டை, நாவல் மரத்துப் பட்டைகளைக் கொண்டு வந்து வகைக்கு அரை ரூபாய் எடை வீதம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி பெரியவர்கள் நான்கு தேக்கரண்டி அளவும் சிறியவர்கள் இரண்டு தேக்கரண்டி அளவும் பருகி வந்தால் சீதபேதி குணமாகும்.

சீதபேதிக்கு வேறு முறை, மாமரத்துப்பட்டை, செருப்படை, கோவைப் பிஞ்சு, அத்தி பிஞ்சு இவைகளின் வகைக்கு கால் ரூபாய் எடை எடுத்து அம்மியில் வைத்து வாழை மட்டைச் சாற்றை விட்டு மைய அரைத்து இரண்டு பங்காக்கி வேளைக்கு ஒரு பங்கு வீதம் காலை, மாலை மூன்று நாட்கள் பருக சீதபேதி குணமாகும்.

நீண்டநாள் பேதியை நிறுத்த

மாம்பூவே ஒரு கை பிடியளவு எடுத்து வந்து ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி அளவு தேனை விட்டு வறுத்தால் எல்லாமாகப் பொங்கும். பூ சிவந்து வரும் சமயம் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி ஆறிய பின் வடிகட்டி அதை இரண்டு பங்குகளாகப் பிரித்து காலை ஒரு பங்கு, மாலை ஒரு பங்காக பருகி வர நீண்ட நாள் பேதி குணமாகும்.

நீரழிவு குணமாக

மாமரத்தின் இளந்தளிர்களைக் கொண்டு வந்த அதை சுத்தம் செய்து மூன்று நாட்கள் வரை நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் சருகு போல காயவைத்து உரலில் இடித்து தூள் செய்து மாசல்லடையில் நன்கு சலித்து ஒரு சீசாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை தேக்கரண்டி அளவு எடுத்து பசும் பாலில் போட்டு கலக்கி உடனே குடித்து விடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் பருகிவர நீரிழிவு குணமாகும்.

தொண்டைக் கம்மல் குணமாக

சீதளம் காரணமாக தொண்டையில் கம்மல் ஏற்பட்டால் மாவிலையில் முற்றியதாக நான்கு இலைகளைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு தேனை அதில் விட அது பொங்கி இலை சிவக்கும். இந்த சமயம் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதித்தவுடன் இறக்கி ஆற வைத்து இலைகளை பிழிந்து எடுத்து விட்டு அதை இரண்டு பங்குகளாக செய்து காலையில் ஒரு பங்கு, மாலையில் ஒரு பங்காக நான்கு வேளை கொடுத்தால் போதும் தொண்டை கம்மல் நீங்கும்.

பூச்சி, வண்டுக்கடி, அரிப்பு நீங்க

மாமரத்துப் பட்டை 100 கிராம், நுணா மரத்துப் பட்டை 30 கிராம், அதிமதுரம் 5 கிராம், நிலப்பனைக்கிழங்கு 5 கிராம் இவைகளை நைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சுண்டக் காய்ச்சி நல்லெண்ணெய் விட்டு தைலப்பதம் வந்ததும் இறக்கி சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால் பூச்சிக்கடி, வண்டு விஷம், அரிப்பு, தடிப்பு மாறிவிடும்.

பல் சம்பந்தமான சகல தொந்தரவுகளும் நீங்க

மாவிலையை கொண்டு வந்து தேவையான அளவு வெய்யிலில் சருகு போல காய வைத்து, அதே போல ஆலமரத்துப் பட்டையையும் கொண்டுவந்து தனியே சருகு போல காய வைத்து எல்லாவற்றையும் உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து, தூள் உள்ள அளவில் எட்டில் ஒரு பங்கு உப்புத்தூள் சேர்த்து கலக்கி சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை இத்தூளைக் கொண்டு பல் துலக்கி வெந்நீரில் வாய் கொப்பளித்து வர, பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

மூலம், ஆசனவாய் எரிச்சல் நீங்க

மாம்பருப்பை நெய் விட்டு வறுத்து இடித்து அந்த மாம்பருப்பு சூரணத்தை மோரில் கலந்து பருக ஆசனவாய் எரிச்சல், இரத்த பேதி, மூலத் தொந்தரவு தீரும்.

கொசுக்களை விரட்ட

மாம்பூக்களை சேகரித்து வைத்துக்கொண்டு கொசு தொந்தரவு அதிகம் உள்ள இடத்தில் தணலில் இந்த பூவை போட்டால் புகை வரும். இந்த பூவின் புகை வாசனைக்கு கொசுக்கள் ஓடிவிடும்.

சொறி சிரங்கு குணமாக

மாம் பிசினைக் கொண்டு வந்து எலுமிச்சை சாறு விட்டு மைபோல அரைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சிரங்கைச் சுத்தம் செய்து இந்த மருந்தை போட்டு வந்தால் சொறி சிரங்கு ஆறிவிடும்.

பித்த வெடிப்பு மாற

ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக குதி கால், பெருவிரலில் பாளம் பாளமாக வெடித்து வேதனைத் தரும். இதைப்போக்க மாம்பிசின் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கும். மாம்பிசினை ஈரமானதாகப் கொண்டு வந்து அதை வெடிப்பின் மேல் அடிக்கடி தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

(61 votes)