மகிழ மரம் – நம் மூலிகை அறிவோம்

Mimusops Elengi; மகிழ மரம்

சங்க இலக்கியங்களில் இந்த மரம் ‘வகுளம்’ என்று அழைக்கப்பட்டது. மாமரம் போல உயரமும் அகலமும் இருக்கக்கூடிய மரம். இதன் இலைகளும் மாவிலையின் வடிவத்தில் ஆனால் சிறிதாக இருக்கும். இதன் பூ வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. வட்டமான பல இதழ்கள் கொண்ட ராஜமுடி போல கவர்ந்திழுக்கும். முடிக்கு மகுடம் என்ற பெயர் உண்டு, எனவே தான் முடி போல இருக்கும் இப்பூவிற்கு ‘மகுடம் பூ’ என பெயர் வந்தது. அடர்த்தியான இலைகளையும் மனதைக் கவரும் நறுமணத்தையும் கொண்ட ஒரு அற்புதமான மரம் இது. இதற்கு இலஞ்சி மற்றும் கேசரம் என்று பெயரும் உண்டு.

இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் உண்ணத் தகுந்த பழங்களாக இருக்கும். வருடம் முழுதும் பூ பூத்து காய்க்க கூடிய ஒரு மரம். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளரக்கூடியது. பிற இடங்களிலும் இதனை வளர்ப்பதுண்டு.

இதன் காய் இலுப்பம் கொட்டை வடிவத்தில் சற்று சிறிதாக இருக்கும். மகுடம் பூ நல்ல மணம் தரும். மகுட மரத்து இலை, காய், பூ, விதை, பட்டை யாவும் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இதன் பூக்கள் தாது வெப்பு அகற்றக் கூடியதாகவும், காமத்தைப் பெருக்கக் கூடியதாகவும் உள்ளது. விதைகள் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். தாது பலத்தைப் பெருக்கக் கூடியதாகும். நஞ்சை நீக்கக் கூடியதாகவும் உள்ளது. பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மகிழ மரத்தின் சிலவற்றை பார்ப்போம்.

பல் சம்மந்தமான கோளாறுகள் குணமாக

பல் வலி, பல் ஈரல், எகிர் வீக்கம், பல் அசைவு, பல்லில் ரத்தம் வருதல், பல்லில் சீழ் வருதல் போன்ற கோளாறுகளை சீராக்க மகிழ மரத்தின் இலைகளைக் கொண்டு வந்த சிறிதாக நறுக்கி நான்கு கைப்பிடி அளவு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 4 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இளஞ்சூடாக இருக்கும் பொழுது கருவேலம் பற்பொடி கொண்டு பல் துலக்கி விட்டு அந்த இலை போட்ட நீரை வடித்து வாய் கொப்பளிக்க வேண்டும். மீதமுள்ள இலையை வைத்திருந்து மாலை வேளையில் கூட வைத்து மாலையில் ஒரு முறை வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

நாள்பட்ட மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி (பீனிசம்) குணமாக

சளி, இருமல், ஆஸ்துமா, சைனஸ், தொண்டை கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்ற தொந்தரவுகளும் நீங்க தேவையான அளவு மகிழம் பூவை கொண்டு வந்து வெய்யிலில் சருகு போல காய வைத்து உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து ஒரு சீசாவில் வைத்துக் கொண்டு மூக்குப்பொடி போடுவது போல அடிக்கடி மூக்கில் உறிஞ்சி வந்தால் நாட்பட்ட பீனிசம் குணமாகும்.

கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நீங்க

மகிழம் மரத்து விதைகளைக் கொண்டு வந்து, முலைப் பாலில் உரைத்து இரண்டு கண்களிலும் ஒவ்வொரு துளி வீதம் விட்டு வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

காய்ச்சல் குணமாக

இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு மூன்று தேக்கரண்டி அளவு மகிழ விதையை உடைத்துப் போட்டுக் ஊற வைத்து அந்த நீரை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகிவர காய்ச்சல் குணமாகும். எந்த வகையான காய்ச்சல் ஆனாலும் பயமின்றி பருகலாம்.

பல் அசைவு நிற்க

மகிழ மரத்தின் பிஞ்சுக் காய்கள் மூன்றை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று வாயிலேயே குதப்பிக் கொண்டிருந்த கால் மணி நேரத்திற்குப் பிறகு துப்பிவிட்டு இளம் வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த விதமாக தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் ஆடிக்கொண்டிருக்கும் பல் அதன் இடத்திலேயே இறுகப் பற்றிக்கொள்ளும்.

குழந்தைக்கு கட்டிய மலத்தை வெளியேற்ற

மகிழ மரத்து விதைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து பட்டுப்போல தூள் செய்து, அதனுடன் அதே அளவு நெய் சேர்த்து வெண்ணெய் போல் குழைத்து மெல்லிய துணியில் வைத்து குழந்தைகளின் ஆசனவாயில் சிறிது நேரம் சொருகி வைத்தால் சிறிது நேரத்தில் மலம் இறங்கிவிடும்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் மகிழ விதைகளைக் கொண்டு வந்து அதை வெயிலில் காய வைத்து இடித்து தூள் செய்து மாசல்லடையில் சலித்து வைத்துக்கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதே அளவு நெய் சேர்த்து குழப்பி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது, மலம் இளகி இறங்கும்.

படை போன்ற தோல் நோய்களுக்கு

மகிழ மரத்தின் பட்டையை எடுத்து வந்து அதனை நன்கு அரைத்து தோலில் வெடிப்புடன் இருக்கக்கூடிய படைகள் உள்ள இடங்களிலும் தோலில் வெடிப்பு காணும் படையுள்ள இடங்களிலும் பூச வேண்டும். தோல் சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்தாகும் இருக்கக்கூடியது இது.

பாம்பு விஷம் முறிய

மகிழ மரத்து விதையை வெந்நீர் விட்டு மைபோல் அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்குள் கொடுத்து விட்டால் பாம்பு விஷம் உடனே முறியும்.

இல்லற இன்பம் நீடிக்க

ஒருசிலருக்கு இல்லற இன்பத்தை அதிக நேரம் அனுபவிக்க முடியாது. அவர்கள் மகிழ மரத்துப் பூவை கொண்டு வந்து சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி இறக்கி அதில் பசும்பாலுடன் சேர்த்து இரவு படுக்க போகும் முன் பருக வேண்டும். இவ்வாறு இருபத்தியோரு நாட்கள் சாப்பிட்டு வர இல்லற இன்பத்தை நீண்ட நேரம் அனுபவிக்க முடியும். இது ஒரு கைகண்ட அனுபவ முறையாகும்.

உடல் சூடு தணிய

உடலில் அதிக சூடு ஏற்பட்டு சதா கதகதவென்று இருக்கும். இதை மாற்றி உடலில் உஷ்ணம் சமநிலைக்கு திரும்ப மகிழம்பூ நன்கு பயன்படக் கூடியதாக இருக்கும். மகிழம்பூவை கொண்டு வந்து சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில் போட்டு லேசாக வதக்கி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அரை டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி அதே அளவு காய்ச்சிய பசும்பாலை சேர்த்து கலக்கி காலை, மாலை ஏழு நாள் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.

(2 votes)