Citrus Limon; Lime Tree; எலுமிச்சை
வாத பித்த கபத்தை சமநிலைப்படுத்தும் உன்னதமான ஒரு பழம் எலுமிச்சை. இது வாய்க்கு புளிப்பு சுவையுடன் அமிலமாக காணப்பட்டாலும், வயிற்றுக்கு கார தன்மையை அளிக்கும் தன்மைக் கொண்டது. எலுமிச்சையை நீருடன் சேர்த்தே பருக இந்த பலனைப் பெறலாம். உடலை சமநிலைப்படுத்தும் தன்மையும் குளிர்ச்சியுண்டாக்கக் கூடியது இயல்பும் கொண்டது இந்த பழம். பொதுவாக எலுமிச்சையை நாம் சாறு எடுத்து பயன்படுத்துவதுண்டு.

எலுமிச்சை சாறைவிட எலுமிச்சையின் தோலிலும் பல சத்துக்கள் உள்ளது. இதைத்தெரிந்த நம் முன்னோர்கள் எலுமிச்சை ஊறுகாயை செய்து எலுமிச்சையின் முழு பலனையும் அடைய வழிவகுத்தனர். இன்று அதிக உப்பு, காரம், எண்ணெய் மற்றும் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் அதிக இராசயங்கள் சேர்க்கப்படுவது போல் அன்று நம் முன்னோர்கள் ஊறுகாய் தயாரிக்கவில்லை. அன்றைய எலுமிச்சை ஊறுகாய் என்பது உப்பு சேர்த்து வெயிலில் ஊற அல்லது காயவைத்த ஊறுகாய்களாக ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தது.
இறைவழிபாடு, சுற்றுப்புற ஆற்றல் மேம்பாடு என பல வகைகளிலும் எலுமிச்சை நமக்கு வலுவூட்டும் பொருளாகவும் உள்ளது. எலுமிச்சை ஒரு பெரிய செடி வகை தாவரம், 8-10 அடி உயரம் வளரும். அதனால் இதனை மரம் என்றும் கூறுவதுண்டு. இராஜகனி, அமிர்த பலை, தேசிப் பழம், சம்பீரம் என பல பெயர்கள் எலுமிச்சைக்கு உண்டு.

இந்த எலுமிச்சை செடி முழுவதும் பச்சை முட்கள் இருக்கும். எலுமிச்சை இலைகளின் மேல்புறம் பசுமையுடன், சிறு புள்ளிகள் இருக்கும். இந்த இலைப்புள்ளிகளில் எண்ணெய் சத்துக்கள் நிறைந்துள்ளது. புளிப்பு சுவைக் கொண்ட இந்த எலுமிச்சையின் இலை, காய், பழம், பழச்சாறு, எண்ணெய் என அனைத்துமே பயனுடையதாக உள்ளது.
உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்கும் எலுமிச்சையிலிருந்து நறுமண எண்ணெய், Citric Acid ஆகியவையும் பெறப்படுகிறது. உடல்சூடு, அஜீரணம், நகச் சுற்று, நாவறட்சி, மயக்கம், காதுவலி, பித்த வாந்தி, சுவையின்மை, பைத்தியம், நரம்புத் தளர்ச்சி, மனச்சோர்வு, வெட்டை, வயிற்றுப் போக்கு போன்ற பல தொந்தரவுகளுக்கும் சிறந்த பழம் எலுமிச்சை. இளநரைக்கு மிக சிறந்த பலனை எலுமிச்சை அளிக்கிறது.
எலுமிச்சை இலை மருத்துவம்
உடலில் ஏற்படும் சில சாதாரண தொந்தரவுகளுக்கு சிறந்த வீட்டு வைத்திய முறையாகவும், இயற்கை மருந்தாகவும் எலுமிச்சை இலைகள் உள்ளது. சிறிதளவு எலுமிச்சை இலையை மோரில் நான்கு மணி நேரம் அல்லது ஒரு இரவு ஊற வைத்து பின் இலையை வடிகட்டி மோரை மட்டும் உணவுடன் சேர்த்து கொடுத்துவர பித்த சூடு, அஜீரணம். வெட்டைச் சூடு, தாகவறட்சி ஆகியவை நீங்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு / இள நரை மாறு
- எலுமிச்சம் பழத்தை சாறாகவும், ஊறுகாயுமாக அன்றாடம் ஆறு மாதங்கள் பத்தியத்துடன் சாப்பிட்டுவர இள நரை மாறும். முதுமை ஏற்படாது. மேலும் நரம்புத்தளர்ச்சி, வயிற்றுப் பொருமல், பைத்தியம் நீங்கும்.
- எலுமிச்சம் பழச்சாறு, கரிசலாங்கண்ணியிலைச்சாறு, பால் ஆகியவற்றை சம பங்கு எடுத்து அவற்றை சேர்த்தல் வரும் அளவிற்கு நல்லெண்ணெயையும் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி ஆறு மாதங்கள் தலையில் தேய்த்துவர முடி நரைக்காமல், கருகருவென அடர்த்தியாக வளரும். உதாரணத்திற்கு நூறு மில்லி எலுமிச்சம் பழச்சாறு, நூறு மில்லி கரிசலாங்கண்ணியிலைச் சாறு, நூறு மில்லி பால் ஆகியவற்றுடன் முன்னூறு மில்லி நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு
- ஒரு எலுமிச்சையை ஒரு லிட்டர் நீரில் கலந்து வைத்துக் கொண்டு பருகிவர விரைவில் நீரிழிவு கட்டுப்படும். அன்றாடம் இவ்வாறு மூன்று முதல் ஆறு பழங்கள் வரை எடுக்கலாம். இதனுடன் உப்பு, சர்க்கரை என எதனையும் சேர்க்கக் கூடாது.
- எலுமிச்சம் பழச்சாறு நான்கைந்து துளிகள் காதில்விட காதுவலி மறையும்.
- சீரகத்தை தேன்விட்டு லேசாக வறுத்து அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் காய்ச்சி எடுக்க வயிற்றுப் போக்கு, வாந்தி நிற்கும்.
- சீரகத்தை சிறிதளவு எடுத்து அதனை எலுமிச்சம்பழ சாறில் ஓரிரவு ஊறவைத்து, பின் காயவைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து வர சுவையின்மை, பித்த வாந்தி, குமட்டுதல், மயக்கம், வயிற்றுப் போக்கு பறந்தோடும்.
- நகச்சுற்றுக்கு எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைக்க பழுத்து உடையும். விரைவில் வேதனை நீங்கும்.
இது மட்டுமல்லாமல் எலுமிச்சையை அவ்வப்பொழுது பயன்படுத்தி வர சருமம் பளபளக்கும், சருமத்திலிருக்கும் தொந்தரவுகள் மறையும், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அகலும். எலுமிச்சை தோலை நன்கு உலர்த்தி அதனுடன் பச்சைப்பயறு கலந்து அரைத்து வைத்துக்கொண்டு ஒரு குளியல் பொடி தயாரித்து வைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம். அதனைக் கொண்டு முகம் கழுவிவர கருங்திட்டுகள், படை, எண்ணெய் தொந்தரவுகள் மறையும். முகம் பளிச்சிடும்.