குதிரையின் வாலைப்போல இருக்கும் இந்த தனியத்தை Barnyard Millet என்றும் இதனின் உமியை நீகியப்பின் குதிரைவாலி அரிசி என்றும் அழைக்கிறோம். சாதம், இனிப்பு காரம் முதல் இட்லி தோசை வரை அனைத்து உணவுகளையும் இந்த குதிரைவாலியில் தயாரிக்கலாம்.
குதிரைவாலி தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் அதிகமாக தென் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.
தவிடு நீக்கப்படாது உமி நீக்கப்பெற்ற இந்த தானியம் பழுப்பு நிறத்திலும், தவிடு நீக்கப்பட்ட இந்தத் தானியம் இளம் பழுப்பு நிறத்திலும், ஓரளவு வளைந்த முட்டை வடிவத்திலும் இருக்கும். பச்சை, புழுங்கல் என இருவகைகளில் இன்று கிடைக்கப்படுகிறது. புழுங்கல் குதிரைவாலி அரிசி சற்று பழுப்பு நிறத்திலும் கண்ணாடியைப்போல் மினுமினுப்பாகவும் காணப்படும்.
பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் இந்த குதிரைவாலி அரிசியின் செயல்பாடுகளும், ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகம். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரியது என்பதற்கேற்ப புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து என நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டச்சத்துகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.
சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் செயல்பாடுகளின் ஊக்கியாகவும் அவை செயல்படுகின்றன.
குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.
குதிரைவாலியின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தைப் பற்றி யோசித்தால், நார்ச்சத்து மிகுந்த உணவாக இருப்பது மட்டுமில்லாமல், நமது அன்றாட தேவைக்கான பல்வேறு அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன.
வளரும் குழந்தைகளின் தேவைக்கேற்ப ஊட்டச்சத்துகளும் உள்ளது. உடலுக்கு தேவையான ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆற்றலை அளிக்கக் கூடிய உணவு தானியமாகவும் இது உள்ளது.
இட்லி, தோசை, உப்புமா, கூழ், முறுக்கு, சாதம் என பலவற்றை தயாரிக்க சிறந்தது என்றாலும் குதிரைவாலி இனிப்பு பொங்கல், மிளகு பொங்கல் மற்றும் தயிர் சாதத்தின் சுவை ஈடு இணையற்றது. அதுவும் இவற்றை மண்பானையில் சமைக்க, சொல்ல வார்த்தைகளே இல்லை.
100 கிராம் குதிரைவாலி அரிசி சத்துக்கள்
- 7 கிராம் புரதம்
- 3.5 கிராம் தாது சத்துக்கள்
- 14 கிராம் நார் சத்துக்கள்
- 23 mg சுண்ணாம்பு சத்து
- 64 கிராம் மாவு சத்து
- 4.5 கிராம் கொழுப்பு சத்து
- 19 mg இரும்பு சத்து
குதிரைவாலி அரிசி பயன்கள்
- நாள்பட்ட நோய்களுக்கு நல்ல பலனை அளிக்கும்
- புற்றுநோய் வராமல் தடுக்கும்
- உடல் பருமனை குறைக்க உதவும்
- நீரிழவிற்கு சிறந்தது
- இரத்த கொதிப்பை குறைக்க உதவும்
- குடல் புற்றுநோயை தடுக்கும்
- தூக்கமின்மையை போக்கும்
- மாதவிடாய் வலிகளை குறைக்கும்