சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இந்த குதிரைவாலி. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க வல்லது மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் இந்த குதிரைவாலியின் பயன்கள், நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.

தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- 1 பெரிய வெங்காயம்
- 1 கேரட்
- ¼ கப் பச்சை பட்டாணி
- 10 பீன்ஸ்
- ½ பச்சை மிளகாய்
- 10 மிளகு
- ½ ஸ்பூன் சீரகம்
- சிறிது இஞ்சி
- 10 பல் பூண்டு
- சிறிது பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
- குதிரைவாலி அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- வெங்காயம், பீன்ஸ், கேரட் (கோஸ், குடைமிளகாய் போன்ற காய்களையும் எடுத்துக்கொள்ளலாம் ) நீளமாக நறுக்கவும்.
- இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.
- ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், காய்களை சேர்த்து வதக்கவும்.
- அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் குதிரைவாலி அரிசியையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி 3 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
- நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- பின் திறந்து லேசாக கிளறி விடவும்.
- குழந்தைகளின் மதிய உணவாக கொடுக்க வேண்டுமானால் பச்சை மிளகாய் சேர்க்காமல் மிளகு மட்டும் சேர்க்கவும்.
- வண்ணமயமான நீள காய்களுடன் சின்ன சின்ன குதிரைவாலி காய்கறி சாதம் சுவையையும் சத்தையும் கொடுக்கும்.