Acalypha indica; குப்பைமேனி
தமிழகத்தில் பரவலாக குப்பை மேடுகளில் காணப்படும் ஒரு சிறந்த மூலிகை குப்பைமேனி. இது சாதாரணமாக களைச் செடியாக வளரக்கூடியது. குப்பையாக இருக்கக்கூடிய மேனியை பாதுகாத்து, குப்பையை அகற்றி, உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்கி வெளியேற்றும் ஒரு அற்புதமான மூலிகை என்பதால் இதற்கு குப்பைமேனி என பெயர் பெற்றது.
சருமத்தை மட்டுமல்லாமல் ரத்தம், உள் உறுப்புகளையும் சுத்தப்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான மூலிகை. பூனைவணங்கி, அரிமஞ்சரி, பூனை மயங்கி, அக்னி சிவம், அண்டகம், சங்கர புஷ்பகம் என பல பெயர்கள் இந்த குப்பைமேனிக்கு உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளிலும் பரவலாக பார்க்கப்படும் மூலிகை.
சாலையோரங்கள், வேலியோரங்களில், காடு புதர் செடிகள் இருக்கக் கூடிய இடங்களிலுமே இந்த மூலிகையை பார்க்க முடியும். பொதுவாக இதனை யாரும் வளர்ப்பதில்லை ஆனால் சாதாரணமாக பார்க்க முடியும். இது ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது.
இந்த குப்பைமேனி செடியின் இலைகள் பச்சை பசேலென்று இருக்கும், இலை ஓரங்களில் அருவம் போல் வெட்டுப்பட்டு இலைகள் இருக்கும். சில இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். இதனுடைய பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடியது. இதனுடைய பூக்களில் ஆண் பூ, பெண் பூ என இருவகை உண்டு. பெண் பூக்கள் சிறிதாகவும் ஆண் பூக்கள் மிகவும் சிறிதாகவும் இருக்கும். இதனுடைய காய்கள் செதில் செதிலாக இருக்கக்கூடிய அமைப்பிற்குள் இருக்கக் கூடியதாக இருக்கும். பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும்.
குப்பைமேனி பயன்கள்
உடல் பருமன், விஷக்கடி, கல்லீரல், சிறுநீரகம், குடல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் புழு பூச்சி தொந்தரவுகள், ஆஸ்துமா, சளி, இருமல், கோளை, வாதம், இரத்த மூலம், அல்சர், சுவாச நோய்கள், சரும நோய்கள் என உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் மிக சிறந்த மருந்து இந்த குப்பைமேனி. இதில் மாவு சத்துக்கள், புரதம் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் நுண்ணூட்ட சத்துக்களும் நிறைந்துள்ளது.
புற்றுநோய்
புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு மருந்தாக இந்த குப்பைமேனி இருப்பதாக என்று பல ஆய்வுகள் வெளியிட்டுள்ளது.
பூஞ்சானம், பக்டீரியா
பாக்டீரியா, பூஞ்சானத்தால்வரக்கூடிய தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாக இந்த குப்பைமேனி உள்ளது.
குடல் புழு பூச்சி வெளியேற
குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்படும் புழு பூச்சி தொந்தரவுகளுக்கு குப்பை மேனி மிக சிறந்த மருந்து. குப்பைமேனி இலை சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் உட்கொள்ள புழு பூச்சிகள் வெளியேறும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதனை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. அதேப்போல இலையை கசயமாக வைத்து அதனுடன் பூண்டு சேர்த்தும் உண்ணலாம். அல்லது குப்பைமேனி வேர் குடிநீர் பருகவும் புழு பூச்சிகள் வெளியேறும்.
கருத்தடையை ஏற்படுத்தும்
குப்பைமேனி கருத்தடையை ஏற்படுத்தும். அதனால் கருவுற்ற பெண்கள், திருமணமான குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் பெண்கள் இதனை பயன்படுத்தக் கூடாது.
கல்லீரலை பலப்படுத்தும் அற்புத மூலிகை
குப்பைமேனி கல்லீரலுக்கு சிறந்தது. கல்லீரலில் ஏற்படும் நோய்களை விரட்டும். குப்பைமேனி இலை சாறினை மாதம் ஒருமுறை பருக கல்லீரல் பலப்படும்.
நரம்புகளை பலப்படுத்த
குப்பைமேனியின் வேர் நரம்புகளுக்கு சிறந்தது. வேர் கசயமாக நரம்புகளை உறுதியாக்கும்.
சருமம் – தோல் நோய்களுக்கு
குப்பையாக இருக்கும் சருமத்திற்கும் மேனிக்கும் பளபளப்பை அளிக்கும் குப்பைமேனி இலையை மைய கல் உப்பு, எலுமிச்சை சாறு. மஞ்சள் சேர்த்தரைத்து சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த தோல் நோய்கள் மறையும், சருமம் பளபளக்கும்.
படுக்கைப் புண்
நோய் வாய்ப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் பலருக்கும் வரும் படுக்கை புண்ணை போக்க குப்பைமேனி சிறந்த பலனளிக்கும். குப்பைமேனி இலையை விளக்கெண்ணையில் வதக்கி போட விரைவில் ஆறும்.
மூட்டுவலிக்கு
பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கு குப்பைமேனி நல்ல பலனை அளிக்கும். குப்பைமேனி இலை சாற்றை நல்லெண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி மூட்டுகளில் தேய்க்க விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
நெஞ்சு சளி நீங்க
குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு சளியை போக்க குப்பைமேனி சாற்றை வேப்பெண்ணை சேர்த்து காய்ச்சி குழந்தையின் நெஞ்சில் தடவ நெஞ்சு சளி நீங்கும்.
பூனை முடி, தேவையற்ற ரோமங்கள் நீங்க
பெண்களுக்கு இருக்கும் தேவையற்ற ரோமங்களை, முகத்தில் இருக்கும் பூனை முடியை போக்க குப்பைமேனியை நன்கு மஞ்சள் சேர்த்து மைய அரைத்து இரவு பூசி வர விரைவில் அந்த ரோமங்கள் உதிரும்.
குப்பைமேனி தைலம்
குப்பைமேனி வாய்வு, மூலம், மலக்கட்டு போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து. குப்பைமேனியை விளக்கெண்ணையில் தைலமாக காய்ச்சி எடுத்துக்கொள்ள மூலம், மலக்கட்டு, வாய்வு சார்ந்த தொந்தரவுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். விரைவாக இந்த தொந்தரவுகள் மறையும்.
மலச்சிக்கல்
குப்பைமேனி வேர் கசாயம் மலச்சிக்கலை போக்கும்.
மூலம்
மூலம் சார்ந்த தொந்தரவுகளுக்கு குப்பைமேனி இலையை அரைத்து ஆசனவாயில் வைத்துக் கட்ட விரைவில் நிவாரணம் பெறலாம்.
அழகை அதிகரிக்கும்
பெண்களின் அழகை மெருகேற்றும் மூலிகை. பெண்கலின் சருமத்தை பளபளக்கவும் முடி உதிர்வை தடுக்கவும் குப்பைமேனி பயன்படும். இலையை அரைத்து தேய்க்கலாம். விரைவில் முடி உதிர்வு கட்டுப்படும், முகம், சருமம் பளபளக்கும்.
பரு கட்டுகள்
முகத்தில் வரும் பருக்கள், கட்டிகளுக்கு வெட்டிவேர், பசும்பால், குப்பைமேனி இலையை நன்கு அரைத்து பூச நீங்கும்.