குப்பைக் கீரை – நம் கீரை அறிவோம்

Amaranthus viridis; குப்பைக் கீரை

அதிக சத்துக்களை கொண்டிருக்க கூடிய ஒரு அற்புதமான கீரை இந்த குப்பைக்கீரை. சாதாரணமாக சந்தைக்கு வராத கீரை என்றாலும் சாதாரணமாக கிராமங்கள் நகரங்கள் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் சாலையோரங்களிலும் குப்பை மேடுகளிலும் புதர்களிலும் வளர கூடிய ஒரு கீரை வகை தான் இந்த குப்பை கீரை. குப்பை கீரை வேறு குப்பைமேனி கீரை வேறு. குப்பையில் வளர்வதால் இதனை குப்பைக்கீரை என்று அழைப்பதுண்டு.

முளைக்கீரை போல இருக்கக்கூடியது. முளைக்கீரை, தண்டு கீரை வகையை சேர்ந்தது. இதன் இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கக்கூடியது. இந்த கீரையின் பூக்கள் வெளிரிய சிவப்பு நிறத்தில் பூக்கக்கூடியது.

இந்த குப்பைக்கீரையின் இளம் தளிர்களையே சமைத்துண்ண சிறந்தது. இளம் தளிர்களே சுவையாகவும் இருக்கக்கூடியது. நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி சத்துக்கள், பொட்டாஷியம், கால்சியம், இரும்புச் சத்துக்கள் என பலவிதமான சத்துக்கள் கொண்டது. பொதுவாக கிராமப்புறங்களில் இந்த கீரையை அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய ஒரு பழக்கமும் உள்ளது.

இந்த குப்பை கீரையை துவரம்பருப்பு சேர்த்து சமைத்து உண்ண நல்ல சுவையாக இருக்கும் குடல் புண்ணையும் போக்கக் கூடியது. இந்த கீரையை மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக குடிக்க பசியைத் தூண்டும். குப்பைகீரையை சீரகம் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட நீர்க்கடுப்பு மறையும். குப்பைக் கீரையுடன் பூண்டு சீரகம் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக குடித்து வந்தால் வாய்வு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். இதனை சூப்பாகவும் செய்து முடக்கத்தான் கீரையுடன் பருகி வர மூட்டு வலி குணமாகும்.

குப்பைக்கீரையை ஓமம் சேர்த்து பருக நெஞ்செரிச்சல் தீரும். முகப்பரு, தழும்பு, தேமல், சருமத்தில் வரும் கட்டிகளுக்கு இந்த இலையை மைய அரைத்து பூசி வந்தால் குணமாகும். அடிபட்ட வீக்கங்கள் இருக்கக்கூடிய இடங்களில் இந்த குப்பை கீரையை பூசி வந்தால் வீக்கங்கள் குறையும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இந்தக்கீரையை உண்பதால் விரைவில் நல்ல நிவாரணத்தை பெற முடியும்.

குப்பை கீரை பசியைத் தூண்டக் கூடியதாகும். உடலை சுத்தப்படுத்தக் கூடியதாகும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட நச்சுக்களையும், கெட்ட நீரையும், கழிவுகளையும், கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றக் கூடியது. பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிடாய் தொந்தரவுகளுக்கும் சிறந்த ஒரு பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

(2 votes)