Shorea Robusta; குங்கிலியம்
இறை வழிபாட்டில் மிக முக்கிய இடம்பிடித்த குங்கிலியம் சிறந்த ஒரு மூலிகை மருந்து. நம்மை சுற்றியுள்ள இடத்திற்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும் அற்புத மூலிகை. இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் அதிகம் வளரும் மூலிகை மரம் இது. தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இந்த மரங்கள் வளர்வதுண்டு. இதில் சில வகைகளுமுண்டு. பொதுவாக குங்கிலியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த குங்கிலியம் மரத்தின் இலைகள் பசுமை மாறாது சற்று தடித்து தோல் போன்றிருக்கும். தண்டுகளில் ரெசின் குழாய்கள் உள்ளன. இந்த மரத்தின் பிசின் பயன்படும் பகுதியாகவும் உள்ளது. இந்த மரத்தின் பக்குவப்படுத்தப்பட்ட மரப்படைகளே குங்கிலியம். இந்த பட்டைகளை கீறி அதிலிருந்து கிடைக்கும் பிசினை மருந்தாக பல நோய்களுக்கு பயன்படுத்துகிறோம். பல நிறத்தில் பல வகை குங்கிலியம் உள்ளது. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிறத்தில் பளிங்கிப் போல் இருக்கும். குங்கிலிகம், குக்குலு, குக்கிலியம், சருவரசம், குக்கில், கிங்கிலயம் என பல பெயர்கள் இதற்கு உண்டு. இந்த குங்கிலியம் பார்க்க சாம்பிராணிப் போல் இருக்கும்.
கசப்பு சுவைக் கொண்ட இது உடலில் ஏற்படும் கோழையை அகற்றி, சிருநீரைப்பெருக்கும் ஆற்றல் கொண்ட குங்கிலியம் பெரும்பாடு, வெள்ளை, எலும்பைப் பற்றிய புண், கீழ்ப்புண், உடல் புண், வறட்டு இருமல், வயிற்றுப்புண், வாய்ப்புண், உள் மூலம், உடற்சூடு, எரிச்சல், தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து. சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் குங்கிலிய வெண்ணை, குங்கிலிய தைலம், குங்கிலியப் பற்பம் என குங்கிலிய மருந்துகள் உள்ளது.
குங்கிலியப் பொடி
- குழந்தைகளுக்கு உண்டாகும் சீதக்கழிச்சல் நீங்க ஒரு சிட்டிகை அளவு குங்கிலியப் பொடியுடன் சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க விரைவில் நீங்கும்.
- ஒரு அல்லது இரண்டு சிட்டிகை அளவு குங்கிலியப் பொடியை ஒரு கப் பாலில் கலந்து அன்றாடம் காலையில் பருகிவர உடல் வலுவடையும்.
- குங்கிலியப் பொடியை கொண்டு தூபம் இட அல்லது நெருப்பில் போட்டு புகைக்க விஷ வாயுக்கள் மறையும், காற்று தூய்மையாகும், கண்ணுக்கு தெரியாத தீய சக்திகள் மறையும், நல்ல ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நோயாளியிருக்கும் இடத்திலும், சாக்கடை போன்ற இடங்களிலும் உண்டாகும் நாற்றம் நீங்கும். இதனுடன் சந்தனக்கட்டை, சாம்பிராணியும் சேர்த்து தூபம் போடா பலன் அதிகம்.
மூட்டுவலி தைலம்
மூட்டு வலிக்கு மிக சிறந்த மருந்து குங்கிலியம். ஒரு பங்கு குங்கிலியத் பொடிக்கு ஐந்து பங்கு நல்லெண்ணை என்ற விகிதத்தில் முதலில் இவற்றை எடுத்துவைத்துக்கொண்டு நல்லெண்ணையை முதலில் சிறிது சூடாக்கி அதனில் இந்தப் பொடியை சேர்க்க குங்கிலியத் தைலம் தயார். இதனைக்கொண்டு நாள்தோறும் மூட்டுகளுக்கு மசாஜ் செய்துவர மூட்டுவலி பறந்தே போகும்.
பெண்களுக்கு
மாதவிடாய்க் கோளாறு, வெள்ளை போன்ற தொந்தரவுகளுக்கு நல்ல பலனை குங்கிலியம் அளிக்கும். குங்கிலியப் பிசினை நெய் விட்டுப் பொரித்து, தண்ணீலிட்டு நன்றாக அடித்து பிசைந்து, துணியில் வடிகட்டி அந்த நீரை வடித்து ஆடையின் மேல் தங்கி இருப்பதை எடுத்துக் மருந்தாக சரியான அளவில் கொடுக்க வெள்ளை நோய் தீரும். உடலும் பலப்படும். ஓரிரண்டு மாதங்களில் நல்ல பலனைப் பெறலாம்.