Gmelina asiatica; Kumil
தமிழகத்தில் பாலை நிலத்திலும் குன்று பகுதிகளிலும் வளரும் ஒரு புதர் செடி அல்லது சிறு மரம் இந்த குமிழ். பொதுவாக மலைகளில் இவை மரங்களாக வளருகிறது. நிலக்குமிழ், குமிழம், குமிளம், குமிழ் என பல பெயர்கள் இதற்கு உள்ளது. இது ஒரு முள் மரம். இதன் இலைகள் தனி இலைகளாக நீள் வட்டமாக முட்டை வடிவில் இருக்கும்.
குமிழ் மர பூக்கள் மஞ்சள் நிறத்திலும் அதன் மடல் மேல்புறம் விரிந்தும் அழகாக இருக்கும். இதன் இதழ்களில் ஒன்று சற்று நீண்டு இருக்கும். பூக்கள் இலை நுனியில் தொங்கும் அமைப்புடன் இருக்கும். காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
குமிழ் மரத்தின் இலை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. கிராமங்களில் மக்கள் இதனை அடுப்பு எரிக்க்கவும் தலைக்கு தேய்த்து குளிக்கவும் பயன்படுத்துவதுண்டு. நல்ல நுரையுடன் இருக்கும் இதன் கனிகள் தலைமுடிக்கு சிறந்த மேன்மையையும் பளபளப்பையும் அளிப்பதுடன் பொடுகையும் நீக்கும். இதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தும் பயன்படுத்த பொடுகு மறையும். குமிழ் இலையை அரைத்து தலையில் பற்று போட காய்ச்சலால் ஏற்படும் தலைவலி மறையும்.
முடக்கு வாதத்திற்கும் மிக சிறந்த பலனைக் கொடுக்கும் மூலிகை. இதன் வேர் மலமிளக்கியாகவும் பசியைத் தூண்டும் ஆற்றலும் கொண்டது. செரிமானத்தை தூண்டும் பண்பு கொண்டது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
வேர்பட்டையை அதிமதுரத்துடன் கசயமாக தயாரித்து பருக தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இது நரம்பு தளர்ச்சியையும் போக்கும். பழங்கள் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஏற்படும் வலிகளுக்கு இதன் இலை சாறு நல்ல பலன் அளிக்கும். மேலும் வெள்ளை, இருமல், சிறுநீர்ப்பை வலிகளையும் போக்கும்.