கோவை இலை கொடி இனத்தை சேர்ந்தது. வேலியிலும் சில மரங்களிலும் மேலும் கீழும் வரக்கூடிய ஒரு வகை கொடி. பந்தல் அமைத்தால் அழகாகப் படரும் இது தூதுவளை இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் தடித்து காணப்படும். இதன் காய்கள் இரண்டு சென்டிமீட்டர் கணக்கில் கனத்து உருண்டு 5 முதல் 6 சென்டிமீட்டர் வரை நீண்டிருக்கும். கோவைக்காயை சமையல் வகைக்கும் பயன்படுத்துகின்றனர். கோவை இலை சில வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கண் வலி குணமாக கோவை இலையை கசக்கிச் சாறு எடுத்து காலை, மாலை கண் வலி உள்ள கண்ணில் இரண்டு துளி வீதம் விட்டு வந்தால் கண்வலி மூன்று நாளில் குணமாகும்.
வெட்டைச் சூடு தணிய கோவை இலையைக் கொண்டு உரலில் இடித்துச் சாறு எடுத்து தினசரி காலையில் மட்டும் நான்கு தேக்கரண்டி அளவு குடித்து வந்தால் வெட்டைச்சூடு குணமாகும். தொடர்ந்து ஏழு நாள் சாப்பிடவேண்டும்.
சீதபேதி குணமாக கோவை இலையைக் கொண்டு வந்து இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றை அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் சீதபேதி குணமாகும்.
வீக்கம் வாட கோவை இலையைக் கொண்டு வந்து அதை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கத்தின் மேல் வைத்துக் கட்டி வந்தால் எந்த வகையான வீக்கமானாலும் வாடிவிடும்.