Macrotyloma Uniflorum; Horsegram; கொள்ளு
தமிழகத்தில் காணம் (காணம் பயிர்) என பரவலாக அழைக்கப்படும் கொள்ளு உடலுக்கு மிகஅதிக ஆற்றலைக் கொடுக்கும் அற்புதமான பயிர். இந்த கொள்ளுக்கு முதிரை என்ற ஒரு பெயரும் உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு அதிகப் பயனளிக்கும் ஒரு பயிறுவகையைச் சேர்ந்ததும் இது. வேர்முடிச்சுகள் அதிகமாக வேர்ப்பகுதுகளில் இருக்கும் ஒரு சிறி செடி வகையைச் சேர்ந்தது கொள்ளு. இந்த வேர்முடிச்சுகள் மண்ணின் வளத்தை அதிகரிப்பதும் மண்ணிற்கு தேவையான தழைச் சத்துக்களையும் அதிகரிக்கும். இதன் இலைகள் சிறகு வடிவக் கூட்டிலைகளாக சிறு மலர்களுடன் இருக்கும். இதன் காய்கள் கனிகள் வெடித்து சிதறும் தன்மைக் கொண்டது.
கொள்ளு செடியின் விதை மற்றும் சமூலமே பயன்படும் பகுதிகளாகும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையும், உடலுக்கு நல்ல பலத்தையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கொள்ளு. இருமல், கல்லடைப்பு, நீர்க்கட்டு, வாதம், பித்தம் போன்ற நோய்களுக்கும் சிறந்ததாகவும் உள்ளது. மேலும் யானைக்கால் நோய், வீக்கம், கட்டி, அஜீரணம், வியர்வை, கபநோய்களை, உடல் பருமனுக்கும் சிறந்தது. பொதுவாக மலைக்கொள்ளு சற்று கருமை நிறத்திலிருக்கும்.
கொள்ளு நீர்
ஒரு ஸ்பூன் கொள்ளு பயிரை எடுத்து அதனுடன் ஒரு கப் நீர் சேர்த்துக் காய்ச்சிப் பாதியான பின் இந்துப்பு சேர்த்து தினமும் 2 வேளைகள் பருகி வர இருமல், உள்ளுறுப்புகளில் சேருகின்ற கற்கள், சளி நீங்கும். இந்த நீரை மட்டும் பிரசவத்திற்குப் பின் உட்கொள்ள கர்ப்பப்பையில் உள்ள அழுக்கு வெளியேறும். இதன் நீருடன் சுக்கு மற்றும் பெருங்காயம் சேர்த்துக் எடுக்க வயிற்றுவலி தீரும்.
வேகவைத்த கொள்ளு
வேக வைத்த கொள்ளு கப நோய்களைப் போக்கும். உடலுக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்தும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் அதிக சதைப்பகுதிகள் குறையும். மிக குறைவான அளவே போதுமானது. குதிரையின் சத்தியைக் கொண்டது இந்த கொள்ளு, மனிதர்களுக்கு அவ்வளவு சத்துக்களும் சக்தியும் அவசியமில்லை. மேலும் அளவோடு சிறிதளவு எடுத்துக்கொள்ள எந்த பாதிப்புமில்லை. அளவிற்கு மீறினால் பித்தத்தால் ஏற்படும் நோய்கள், உஷ்ணம் சம்மந்தமான நோய்கள் ஏற்படும்..
சத்துக்கள் மிக அதிகம் கொண்ட கொள்ளு பயிரை முளைக்கட்டி சுண்டலாக உண்ணலாம். கொள்ளு துவையல், கொள்ளு கஞ்சி போன்ற உணவுகளையும் செய்து மாதம் ஒருமுறை உண்ணலாம். உடல் பருமன் உள்ளவர்கள் அளவோடு அவ்வப்பொழுது உண்டுவர நல்ல பலனை விரைவாகப் பெறலாம். உடல் பருமனுக்காக கொள்ளுகஞ்சி உண்பவர்கள் அதிகமாக நீர் அருந்துவதும், மோர் பருகுவதும் அவசியமானது.