மண்ணை வளமானதாகவும், செழிப்பானதாகவும் வைத்துக்கொள்ள மண்ணிற்கு இயற்கை உரம் அவசியம். அதிலும் மண்புழு உரத்திற்கு ஈடானது எதுவும் இல்லை.
‘அடி காட்டுக்கு, நடு மாட்டிற்கு, நுனி வீட்டிற்கு’ என்பத விவசாயத்திற்கு மண் எவ்வளவு அவசியம் என்ற பகுதியில் பார்த்தோம். மண் வளமாக இருக்க, அடி மட்டுமல்ல, நடுப்பகுதியை மாடு உண்டு அவைகொடுக்கும் சாணம் மீண்டும் மக்கி எருவாகி மண்ணில் கலக்க மண் மீண்டும், புத்துணர்வு பெறுகிறது.
இந்த இரண்டும் ஒன்றாக கலந்து மண்ணில் இருக்கும் மண்புழுக்கள், நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் அமைகிறது. நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் எந்த மண்ணில் இருக்கிறதோ அந்த மண்ணே வளமான மண்ணாகும்.
சாதாரணமாக ஓடிய தண்ணீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகிறது, கண்ணுக்கு தெரியாத காற்று அடைக்கப்பட்டு விற்பனையாகிறது, அந்த வரிசையில் மண்புழுக்கள் மட்டுமென்ன விதிவிலக்கு. இன்று இதுவும் ஒரு வியாபாரப்பொருளாக மாறிவிட்டது. மண்ணில், இருட்டில் வாழும் இந்த மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் மண்ணையும், கழிவுகளையும் வளமாக மாற்றுகிறது.
உழவனின் நண்பனான இந்த மண்புழுக்கள் ஓயாமல் உழைக்கக்கூடியது. மண்ணின் அடியிலிருக்கும் மண்புழுக்கள் மேலிருக்கும் உணவை உண்ண மண்ணை துளையிட்டுக்கொண்டு வர இதனால் மண் பிரட்டப்படுவதுடன் அவற்றின் மேல்தோலில் இருக்கும் ஒருவித சுரப்பியாலும் மண் வளமாகிறது. மண்புழுக்கள் மண்ணையுண்டு வெளித்தள்ளும் பொழுது மண்ணும் ஒருவித மாற்றத்தை அடைந்து வளமாக மாறுகிறது.
பொன் விளையும் பூமி
‘பொன் விளையும் பூமி’ என்ற வாசகத்தை கேட்டிருப்போம். இந்த வாசகத்திற்கு காரணமாக இருப்பது நம் மண்ணின் இருக்கும் சத்துக்கள். இந்த சத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மண்ணில் சேர்க்கப்படும் கழிவுகள்.
இலை, தழை தொடங்கி மனிதன் வரை இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தையுமே உள்வாங்கிக்கொண்டு அவற்றை சிதைக்கும் வல்லமை படைத்தது மண். (விதைகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது). அவ்வாறு சிதைக்கப்பட்டதிலிருந்து கிடைப்பதே மண்ணின் சத்துக்கள்.
உதாரணத்திற்கு ஒரு புல்லை எடுத்துக்கொள்வோம். மண்ணிலிருக்கும் சத்துக்களால் புல் முளைக்கிறது. அதனை ஆடு மாடுகள் உண்கிறது, வளரும் காலம் முடிந்த பின் மீதமிருக்கும் வேர்கள் காய்ந்து மண்ணிற்கே உரமாகிறது, புல்லை உண்ட ஆடு மாடுகளின் புழுக்கையும், சாணமும் மீண்டும் மண்ணிற்கே வருகிறது. இவை இரண்டும் ஒன்றாக மண்ணில் கலக்க பல பல வேதியல் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகிறது, மீண்டும் மண் புதுப்பொலிவுடன் வளமானதாக மாறுகிறது.
உதாரணத்திற்கு ஒரு புல்லை எடுத்துக்கொள்வோம். மண்ணிலிருக்கும் சத்துக்களால் புல் முளைக்கிறது. அதனை ஆடு மாடுகள் உண்கிறது, வளரும் காலம் முடிந்த பின் மீதமிருக்கும் வேர்கள் காய்ந்து மண்ணிற்கே உரமாகிறது, புல்லை உண்ட ஆடு மாடுகளின் புழுக்கையும், சாணமும் மீண்டும் மண்ணிற்கே வருகிறது. இவை இரண்டும் ஒன்றாக மண்ணில் கலக்க பல பல வேதியல் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகிறது, மீண்டும் மண் புதுப்பொலிவுடன் வளமானதாக மாறுகிறது.
சரி இன்று நகரத்தில் அதுவும் அப்பார்ட்மென்டில் இருக்கும் நாங்க என்ன செய்றது? இங்க ஒரு சதுரடி நிலத்தடி மண்ணைக்கூட பார்க்கமுடியாது. அதிலும் நாங்க இருப்பது 5வது மாடியில் என்கிறீர்களா..
எந்த இடத்தில் இருந்தால் என்ன, அன்றாடம் உணவு உட்கொள்கிறோம் அல்லவா அது போதும். காலையில் அருந்தும் மூலிகை தேநீர், டீ, காபி, காய்கறிகள், பழங்கள் என நாம் உண்டு மீதமிருக்கும் குப்பைகள் போதுமே.
கருப்பு கரியிலிருந்து எவ்வாறு வைரம் கிடைக்கிறதோ அதைவிட சுலபமாக வைரத்தைப் போன்ற பொக்கிஷமான மண்ணை ஜொலிக்கவைக்கும் உரத்தையும் நமது இந்த குப்பைகளில் இருந்து பெறலாமே.
வீட்டிலிருந்து வெளியேறும் குப்பைகள்
அன்றாடம் ஒவ்வொருவரும் சராசரியாக அரைகிலோ குப்பையை வீட்டி லிருந்து கொட்டுகிறோம் என்கிறது ஆய்வுகள். அதிலும் மக்கும் குப்பைகள் அதாவது காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், சமையலறைக் கழிவுகள், பயிர்கழிவுகள் போன்றவை அதிகளவில் வீணடிக்கப்படுகிறது. அதோடு பிளாஸ்டிக் கழிவுகள் நமது மண்ணிற்கு பேராபத்தை இன்று ஏற்படுத்துகிறது.
இந்த பிளாஸ்டிக்குகள் மக்கும் குப்பைகள் கூட மக்க முடியாத நிலையை ஏற்படுத்தி அனைத்தையும் மண்ணிற்கு கழிவாக மாற்றுகிறது. இதனால் புவி வெப்பமயமாக்களும், உலகிற்கு பேராபத்தை விளைவிக்கும் மீத்தேன் போன்ற வாயுக்களும் உருவாகிறது. இந்த பிளாஸ்டிக்கால் மண்ணிலிருக்கும் நன்மை செய்யும் நுண்ணுர்கள் அழிவதும், அதன் காரணமாக மண்ணில் பிடிமானம் இல்லாது மண்ணரிப்பும் ஏற்படுகிறது. இவை செடி மரம் வளர்ச்சிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவற்றை தவிர்த்து மற்ற மக்கும் குப்பைகளைக் கொண்டு எளிதாகவும் விரைவாகவும் நாமே வீட்டில் ஏன் அப்பார்ட்மென்டில் கூட உரம் தயாரிக்கலாம்.
செடி வளர்க்கவே நேரமில்லை இதில் உரம் வேறா என்கிறீர்களா? வீட்டு காய்கறி தோட்டத்திற்கும் மற்ற செடிகளுக்கும் அவசியம் தேவைப்படுவது உரங்கள், அவற்றை அவ்வப்பொழுது மண்ணிற்கு கொடுத்தால் மட்டுமே செடிகளை சிறந்த முறையிலும் காய்கறிகளை எளிதாகவும் அறுவடை செய்யலாம். அப்படி இருக்க ஏன் தயக்கம். வீணாக செலவு செய்யமால் நாமே நமது கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கலாமே.
இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் உணவு தானியங்கள் அங்கு பக்குவப்படுத்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, மதிப்புக்கூட்டி புதுவடிவில் மீண்டும் இந்தியாவிற்கு இறக்குமதியாகி விற்கப்படுகிறது.
இன்றைய நிலை
உதாரணத்திற்கு இந்தியாவில் விளையும் அதிக சத்துக்கள் கொண்ட சிறுதானியங்களை மிகமிக குறைந்தவிலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி அதைவைத்து குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி உண்ணும் குக்கீஸ்சை தயாரித்து அதிக விலைக்கு மீண்டும் இந்தியர்களிடமே விற்கின்றனர், நமது மூலிகைகளை வாங்கி அவற்றைக் கொண்டு பலபல உணவுகள், துணை உணவுகள் என பல ரூபங்களில் மீண்டும் நம் நாட்டிற்கே விற்கின்றனர். நாமோ இதனால் நாட்டிற்கும், நமக்கும் ஏற்படும் நஷ்டங்களை யோசிக்காமல் பெருமையாக அவற்றை வாங்கி உட்கொள்கிறோம்.
இந்த நிலை உணவுகளில் மட்டுமல்ல, கட்டுமான பொருட்கள், தொழில்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள், துணிமணிகள் என அனைத்து துறைகளிலும் உள்ளது. இவற்றில் நமது பணம் மட்டுமே விரையமாகிறது, அந்த பொருட்களின் தரமும் கூட பல நேரங்களில் குறைகிறதே.
இந்த நிலை தான் நமது வீட்டுத்தோட்ட முயற்சிகளிலும் நடக்கிறது. வீட்டுத்தோட்டம் வைத்திருக்கும் பலர் தங்களது தோட்டத்திலிருந்து ஒரு கிலோ வெண்டைக்காயை அறுவடை செய்ய குறைந்தது ஐநூறு ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். இது புத்திசாலித்தனமா? வீட்டில் தோட்டமும் அதிலிருந்து பெறப்படும் காய்களும் ஏதோ பொழுது போக்கிற்கான விஷயமல்ல. அத்தியாவசியமானது.
ஒவ்வொருவரும் நச்சற்ற உணவை பெறவேண்டும். அவ்வாறு இருக்க இப்படி செலவு செய்து காய்களை பெற்றால் மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு முன்னுதாரணமாக இருப்பது. வீட்டிலிருக்கும் மக்கும் குப்பைகளை வெளியில் கொட்டிவிட்டு பணம் கொடுத்து மக்கிய உரத்தை வாங்கி செடிகளுக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் சாமர்த்தியம்? அன்றாடம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து மக்கச்செய்து நாமே உரத்தை தயாரித்து செடிகளை வளர்ப்பதே உண்மையில் ஆரோக்கியத்தையும், லாபத்தையும் அளிக்கும்.
வீட்டிலேயே அதுவும் அப்பாட்மெண்டுகளில் கூட நமது அன்றாட காய்கறிக் கழிவுகளைக் கொண்டு உரத்தினை செடிகளை வளர்க்கும் தொட்டிகளில் எவ்வாறு தயாரிப்பது என தெரிந்துக்கொள்ள – தொட்டியில் தயாரிக்கும் இயற்கை உரம்.
தனியாகவும், மண்ணிலும் எளிதில் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.
இயற்கை உரம் – தொட்டியில் தயாரிக்கும் முறை
இயற்கை உரம் – மாடித்தோட்டத்திற்கு தயாரிக்கும் முறை
மண்ணில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை