முதல் முதலில் ஒரு தொட்டியில் செடிகளை வைக்க நினைப்பவர்கள், அடியில் துளையிட்ட ஒரு தொட்டிய எடுத்துக்கொள்ளவும். அதனில் இரண்டு அங்குல அளவிற்கு மண்ணினை (அருகில் கிடைக்கும் எல்லா மண்ணும் உகந்தது) நிரப்பவும். பின் அதில் நமது காய்கறி தோல், உள்ளிருக்கும் தேவையற்ற பகுதிகள், பூண்டு தோல், வெங்காயத் தோல், வாழைப்பழ தோல், முட்டை ஓடு (நன்கு நொறுக்கியது), காபி, டீ டிகாஷன் போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி போடவும்.
பின் அதனில் இந்த கழிவு நன்கு மூடும் அளவிற்கு மண்ணை நிரப்பவும். லேசாக அரிசி களைந்த நீர் அல்லது மோர் தெளிக்க வேண்டும். பின் மீண்டும் மறுநாள் நமது காய்கறி கழிவுகளையும், மண்ணையும் சிறிது அரிசி தண்ணீர் அல்லது மோருடன் அதே போல் சேர்க்கவும். இந்த கலவையை ஒவ்வொரு நாளும் முடிந்தால் பிரட்டி விடலாம் அல்லது ஒரு குச்சியைக்கொண்டு அடிவரை குத்திவிடவேண்டும். இதனால் அடியில் இருக்கும் மண், குப்பைகளுக்கு தேவையான காற்றோட்டம் இதன் மூலம் கிடைக்கப்படும். இதன் மூலம் விரைவாக நமது கழிவுகள் மக்க தொடங்கும்.
காற்று, நீர் (ஈரப்பதம்) இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இந்த கழிவுகள் விரைவில் மக்கும். மக்குவது அல்லது மக்கு உரம் என்பது நுண்ணுயிர்களால் இயற்கையில் கிடைக்கும் அந்த பொருள் உருமாறுவது. சீரான காற்றோட்டம் இல்லையானால் இந்த கழிவுகள் மக்காமல் அழுகும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், பூச்சிகள், கொசுக்கள் வரும். அதேபோல் ஈரப்பதம் இல்லையானால் அவை உலர்ந்து போகும் நுண்ணுர்கள் அதில் வாழ முடியாது. அதிக தண்ணீர் இருந்தாலும் அழுகிவிடும். இவற்றை சமன் செய்யவே வெங்காயம், பூண்டு போன்ற காய்ந்த தோல்களும், காய்ந்த இலைதழை சருகுகளும் சேர்க்கப்படுவதுடன் அவ்வப்பொழுது பிரட்டியும் விடவேண்டும்.
கழிவுகளை எவ்வளவு சிறிதாக போடுகிறோமோ அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் நமக்கு மக்கு உரம் கிடைக்கும். ஒரு மாதத்தில் இந்த குப்பைகள் மக்கி மண்ணோடு மண்ணாக நன்கு கலந்து மண்வாசனையையும், கருப்பு நிறத்தையும் அளிக்கும். இதனை நன்கு பிரட்டி விட்டு ஏதேனும் செடிகளை நடலாம். இது எளிதாக தொட்டியிலேயே உரம் தயாரிக்கும் முறை.
இந்த உர தயாரிப்பு முறைகளில் கவனிக்கவேண்டியவை:
- ஈரமாக இருக்கும் கழிவுகளும் அதற்கேற்ப காய்ந்த இலைதழைகள், காய்ந்த தோல்கள் அவசியம் தேவை. இவற்றை சாண்ட்விச் போல் ஒன்று மற்றொன்று என மாறிமாறி சேர்க்கவேண்டும்.
- முடிந்தவரை சிறுசிறு துண்டுகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
- வாழைப்பழம், டிகாஷன், முட்டையோடுகள், சாணி தூள் போன்றவற்றை சேர்க்க விரைவாக நல்ல பலன்கிடைக்கும்.
இந்த முறையை பின்பற்றி நமது வீட்டு கழிவுகளை உரமாக்கி நமது செடிகளுக்கு எந்த செலவும் இல்லாமல் உரத்தையளிப்போம். நாம், நமது குடும்பம், நமது நாடு… குப்பைகளை பயனுள்ள உரமாக்குவதால் செழிக்கும்.
இயற்கை உரம்
இயற்கை உரம் – மாடித்தோட்டத்திற்கு தயாரிக்கும் முறை
மண்ணில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை