தொடர்ந்து பல சத்தான உணவுகளையும், பாரம்பரிய மற்றும் இயற்கை உணவுகளையும் பற்றி பல செய்திகளை அறிந்தும் அவற்றைப் பற்றி பல நல்ல கருத்துக்களை தெரிந்து கொண்டிருக்கும் நமக்கு அவற்றை பயன்படுத்தவும் அவற்றினால் உண்டாகும் பலன்களை அனுபவிக்கவும் ஆவல் மிகுந்திருக்கும். இந்த உணவுகளை ஒவ்வொருவரும் ருசித்து ரசித்து உண்ண விரும்பினாலும் பலருக்கு புது உணவுகளை தயாரிப்பதிலும், அதனை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளவும் நடைமுறை சிக்கல்கள் பல இருப்பதாக பல தரப்பிலும் சங்கடங்கள் உருவாகிறது.
குடும்பம் என்ற வாகனம்
கணவன் மனைவியை குறை சொல்வதிலும், மனைவி கணவனை குறை சொல்வதிலும் வல்லவர்களாகவே இருந்தாலும் இவற்றிற்கு ஆழ்மனதில் அல்லது மனநிலையில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் தான் காரணமாக உள்ளது. என்றோ ஒருவர் மீது மற்றவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் அன்றாட வாழ்வில் பிரதிபலித்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. உணவு விஷயத்தில் பெரிய பாதிப்பையும் இந்த மனநிலை நம்மை அறியாமல் வெளிப்படுத்துகிறது.
இரண்டு சக்கரங்களை கொண்டிருக்கும் இந்த குடும்பம் என்ற வாகனத்தில் ஒரு சக்கரம் இன்னொன்றை சீராகவும், சமமாகவும் இழுத்தால் மட்டுமே வளமான மகிழ்வான குடும்பம் அமையும்.
ஒவ்வொரு செயலிலும் துருப்பிடித்த பாகங்களைப் போல் கழன்றும் ஒட்டிக்கொண்டும் இன்றைய வண்டி ஏதோ நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கணவன் என்ற சக்கரம் தனது துருப்பிடித்த பாகங்களை சீராக்க அதாவது உடல் நிலையையும், மன நிலையையும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட அதனை நேரடியாக மனைவி சக்கரத்திடம் கூறமுடியாமல் தனக்கு தேவையான சத்தான உணவு தானியத்தையோ, பாரம்பரிய அரிசியையோ அல்லது சிறுதானியத்தையோ கடையிலிருந்து வாங்கி வந்தாலும் அதனை மனைவி என்ற சக்கரம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நடைமுறை நிஜம்.
வாகனம் என்ற குடும்பமோ துருப்பிடித்த வாகனமாக மக்கர் செய்து கொண்டே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எந்த பக்கம் எந்த நேரத்தில் கழன்று கொள்ளும் என்று தெரியாமல்…
மனைவி என்ற சக்கரத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. மனைவி என்ற சக்கரம் இவ்வாறு வாகனம் பாதிக்கப்பட்டிருக்கிறதே என்று நினைத்து தானாக நல்ல உணவை தயாரித்து வைத்தால் பல குடும்பங்களில் அதனை கணவன் ஏற்க மறுப்பதும் அதனை கிண்டலாகவும், கேலியாகவும் பேசுவதும் நடைமுறை நிஜங்கள் தான்.
இரண்டு சக்கரம்
இப்படி இரண்டு சக்கரமும் ஒன்றோடு ஒன்று இணையாமல் வாகனத்தை நகர்த்த ஒருவர் மேல் மற்றவருக்கு சலிப்பும், வெறுப்பும், நம்பிக்கையின்மையும் தான் மிச்சமாகிறது.
என்றோ ஒரு நாள் ஒருவர் மீது மற்றவருக்கு மனத்தால் ஏற்பட்ட பாதிப்பு காலம் கடந்தாலும், வடுவாக நின்று கடனே என்று நாட்களை நகர்த்துகிறது. இதன் வெளிப்பாடு தான் எந்த புது ஆரோக்கியமான உணவையும் கணவன் அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள மனைவி விரும்பாததும், மனைவி எந்த புது ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்தாலும் அதனை உண்டு பலனடைய கணவன் விரும்பாததற்கும் காரணமாக உள்ளது.
என்ன தான் செய்வது மாற்றமும் வேண்டும் ஆனால் பெரிய அளவில் மாற்றத்தையும் யாரும் விரும்புவதில்லை. புதிதாக ஒரு உணவு தானியம் உதாரணத்திற்கு சிறிதாக இருக்கும் சிறுதானியத்தை பார்த்தாலும் தடுமாற்றம் தான், சிகப்பாக இருக்கும் சத்தான அரிசியைப் பார்த்தாலும் தடுமாற்றம் தான்.
கணவனோ, மனைவியோ அல்லது நமது குழந்தைகளோ அவற்றை உடனே ஏற்றுக்கொள்ள மறுப்பதும் நடைமுறை சிக்கலாகத்தான் இருக்கிறது.
நகரும் காலத்தில் நவீனமும் மருத்துவமும் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளதோ அதே அளவிற்கு நோய்களும், சத்தற்ற நஞ்சான உணவுகளும் நம்மை கவசமாக வளம் வருகிறது. இவற்றால் காரணங்கள் தெரியாத மரபு சார்ந்த நோய்களும் இன்று பெருகத் தொடங்கிவிட்டது.
நஞ்சாய் போன உணவுகளை பற்றி அறிந்த சில எதார்த்த சிந்தனையாளர்களும், நடைமுறை அறிவை கொண்ட சிலரும் இவற்றுக்கான காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ற உணவுகளை முதலில் மாற்ற தொடங்கினர்.
பாரம்பரிய உணவுகள் – Organic Foods
பாரம்பரிய உணவுகள் இன்று எங்கும் பார்த்தாலும் கிடைக்கத் தொடங்கியுள்ளதற்கு காரணம் இந்த புதுப்புது நோய்கள் தான். பூச்சி கொல்லிகள், இரசாயனங்களை கொண்ட அரிசியை ஒவ்வொரு நாளும் உணவாக உட்கொள்ள வரும் உறுப்பு இழப்பும், நாள்பட்ட நோய்களும் அடுத்த தலைமுறையினரை வேகமாக பாதித்தாலும் அதைவிட இன்று வேகமாகப் பரவும் நோயாக அல்லது தொந்தரவாக உள்ளது இந்த மரபியல் சார்ந்த நோய்கள்.
அதாவது பிறக்கவிருக்கும் குழந்தைகள், பிறக்கும் குழந்தைகள் தனது குடும்ப வரலாற்றில் இல்லாது புதிதாக மூளை வளர்ச்சி குன்றியும், கை, கால், தலை அல்லது உறுப்பு பாதிப்பு என வரும் உடலியல் மாற்றங்கள் தான்.
பாரம்பரியம், மரபு என்பது நாமறிந்த ஒன்று தான், அதாவது தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று பரம்பரை பரம்பரையாக கண், காது, மூக்கு, பேச்சு, செயல் என அனைத்திலும் ஒவ்வொருவரின் குணத்தையும், தன்மையையும் கொண்டு வழி வழியாக செல்வது.
இந்த தன்மைகள் நமது உணவில் இருக்கும் மாறுபாட்டால் மரபணுவையும், மரபையும் மாற்ற தொடங்கியுள்ளது. இவையே இந்த புதுப்புது மரபியல் சார்ந்த நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.
பெரிய மாற்றத்தை விரும்பாது சிறு மாற்றத்தில் குடும்பத்திலும் பெரிய குழப்பமோ அல்லது மன வருத்தங்களோ இல்லாது ஆரோக்கியமான உணவை உட்கொள்ள விரும்பும் பலருக்கு ஏற்ற ஒரு பாரம்பரிய அரிசியை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம்.
குடும்பம் என்ற வாகனமும் ஓரளவிற்கு சீராக இயங்க வேண்டும், அதில் எந்த ஈகோவும் இல்லாது கணவனும் மனைவியும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தாலே போதும் முதலில் எளிய மாற்றத்தை ஏற்படுத்த.
இதனால் குடும்பத்தில் ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மை குறைவதுடன் நமது தலைமுறையினரின் ஆரோக்கியமும் மேம்படும்.
நவீன அரிசி – பாரம்பரிய அரிசி
நவீன அரிசிகளை காட்டிலும் இந்த பாரம்பரிய அரிசிகள் ஒவ்வொருவரின் பாரம்பரிய குணங்களை காப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல முறையில் எந்த பாதிப்பும் இல்லாது கடத்தவும் உதவுகிறது.
இந்த பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்துவதால் நமது பாரம்பரிய குணங்கள் காக்கப்படுவதோடு, சீராக கடத்தப்படுவதால் விட்டுக்கொடுக்கும் மனோபாவமும், குடும்பத்தில் அன்பும் கணவன் மனைவி இடையில் இருக்கும் மன வருத்தங்களும் குறையத்தொடங்கும்.
பாரம்பரிய அரிசி ஒவ்வொன்றும் தலைமுறை தலைமுறையாக வளரும் அரிசிகள். இந்த அரிசிகள் ஒவ்வொன்றும் தனது தரமான விதைகளை அதன் பாரம்பரிய குணங்களுடன் உருவாக்கும் தன்மை கொண்டது. உணவால் உருவாக்கப்படுவது தான் உடல். அந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பாரம்பரிய அரிசிகள் உதவுகிறது.
கிச்சிலி சம்பா அரிசியின் குணம்
பல பல மருத்துவ குணங்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்ட நமது சிகப்பு மற்றும் கருப்பு பாரம்பரிய அரிசிகள் பல இருக்க, அன்றாட உணவுக்கு சத்தானதாகவும் சுவையானதாகவும் எளிதாக மாற்றிக்கொள்ள பழுப்பு வெள்ளை அரிசியாக இருக்கும் நமது பாரம்பரிய அரிசி கிச்சிலி சம்பா அரிசி சுலபமானது.
பல மாவட்டங்களில் அந்தந்த மண்ணிற்கும், நீருக்கும் ஏற்ப அசத்தலான சுவைகளுடன் விளையும் இந்த பாரம்பரிய அரிசியான கிச்சிலி சம்பா மல்லிகைப் பூவைப் போல் நிறத்துடன் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும் அரிசி.
அதிலும் ஆற்காடு கிச்சிலி சம்பா என்பதற்கு தனி பெருமையே இருக்கு. காரணம் அந்த மண்ணும் அங்கிருக்கும் தண்ணீரும் அரிசியின் சுவையை மேலும் அதிகரிப்பது. ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தின் போது மிக பிரத்தியேகமாக விளைவித்து அனைவரும் சுவைத்து உண்ட அரிசி ராகம் தான் இந்த ஆற்காடு கிச்சிலி சம்பா.
கிச்சிலி சம்பா – எந்த ஊர் அரிசி
அன்றைய காலத்தில் காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம் பகுதிகளில் விளைந்த பிரத்தியேக நெல் ரகமாக இருந்தது இந்த கிச்சிலி சம்பா.
கிச்சிலி சம்பாவின் தன்மை
சன்ன ரகமான இந்த பாரம்பரிய அரிசியினை விளைவிக்க எந்த இரசாயனமும், பூச்சிக்கொல்லியும் தேவையில்லை. பாரம்பரிய அரிசி என்பதால் இந்த கிச்சிலி சம்பா இயற்கையாகவே நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி விளையும் தன்மை கொண்டது.
கிச்சிலி சம்பாவின் குணங்கள்
இயற்கையாக, இயற்கையான முறையில் விளையும் இந்த அரிசி உடலுக்கும் நமது உறுப்புகளுக்கும் எந்த தீங்கும் அளிக்காது பாதுகாக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் வலுவையும், தெம்பையும் அளிக்கும் அரிசியாகவும் இந்த பாரம்பரிய அரிசி உள்ளது. பட்டை தீட்டாத இந்த கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் சிறு அளவில் புரதச்சத்தும் உள்ளது.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்ற அரிசி
இதுமட்டுமல்ல அன்று பால் சுரப்பதற்கு ஏற்ற அரிசியாகவும் இந்த அரிசி இருந்தது. அந்த காலங்களில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசி சோறு கொடுப்பது வழக்கமாக இருந்தது.
உடல் பருமனை விரட்டும் அரிசி
அன்றாடம் பூச்சிக்கொல்லிகளும், ரசாயனங்களும் தெளித்த நவீன் அரிசியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை வியாதி, உடல் வலி, உடல் களைப்பு, இரத்த சோகை, மலச்சிக்கல் உட்பட பல அன்றாடம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மருந்தாக அமைகிறது இந்த கிச்சிலி சம்பா அரிசி.
மதிய உணவிற்கும், தாளித்த உணவிற்கும் ஏற்றது இந்த கிச்சிலி சம்பா அரிசி. அதுவும் சுட சுட இந்த கிச்சிலி சம்பா அரிசியினை உண்ண சீரான ஜீரணத்தையும் சிறந்த சத்தினையும் அந்த அரிசி அளிக்கிறது.
கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை
ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற விதத்தில் இந்த கிச்சிலி சம்பா அரிசியினை வேக வைக்கலாம். கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருக்கும். கிச்சிலி சம்பா அரிசியினை சமைக்கும் முறையை தெரிந்துகொள்ள இங்கு தொடரவும்.
இவ்வாறு பாரம்பரிய அரிசியான கிச்சிலி சம்பா அரிசியில் ஒவ்வொரு நாளும் மதிய உணவை தயாரித்து உண்ண பல நன்மைகள் உருவாகும்.
கூட்டு, பொரியல், குழம்பு, சாம்பார், ரசம், மோர் என அனைத்து வகைகளுடன் சேர்த்து உண்ண சிறப்பாகவும் சத்தானதாகவும் அமைகிறது நமது கிச்சிலி சம்பா அரிசி.
இரசாயன வெள்ளை அரிசியை பயன்படுத்துவதால் வரும் பல தொந்தரவுகள் இந்த பாரம்பரிய கிச்சிலி சம்பா அரிசி உண்ண நீங்குவதுடன், எந்த பெரிய மாற்றமும் இன்றி எளிதில் வீட்டில் உள்ளவர்களையும் இந்த சத்தான அரிசியுடன் மாற்றலாம். இந்த சின்ன மாற்றம் உணவு மாற்றம் மட்டுமல்ல மகிழ்ச்சியான குடும்ப மாற்றமும் தான்.
25 kg kichili saba rice