Phyllanthus Amarus; Phyllanthus Niruri; Gale of the wind; Kizhanelli
பழுதடைந்த கல்லீரலுக்கு மிக சிறந்த மருந்தாக காலம் காலமாக இருக்கும் ஒரு அற்புத மூலிகை கீழாநெல்லி. தமிழகத்தில் பரவலாக பார்க்கப்படும் ஒரு மூலிகை இது. இது ஒரு சிறு செடி வகைத் தாவரம். இதன் இலைகள் தனி இலைகளாக சிறு கிளைகளில் இருக்கும். இலைகளைத் தாங்கிப்பிடுக்கும் நடு காம்பின் கீழ்பக்கத்தில் கீழ்நோக்கி பசுமையான சிறு பூக்களும் சிறு காய்களும் இருக்கும். அவை பார்க்க சிறு நெல்லிக்காய் போல் இருப்பதால் கீழ் காய் நெல்லி, கீழாநெல்லி என பெயர்பெற்றது.
இருபது வருடங்களிக்கு முன் மாதம் ஒருமுறை இந்த கீழாநெல்லி சாறினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு முறை எடுக்கும் பழக்கமிருந்தது. இதனால் உடல் நச்சுக்கள் நீங்குவதும், கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளும் ஓடிவிடும்.
சாலையோரங்கள், விவசாய நிலங்கள், கிராமங்கள் நகரங்களில் மண்ணிருக்கும் இடங்களில் பொதுவாக இதனைப் பார்க்கமுடியும். இதனை எளிதாக வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம். மற்ற கீரைகளுடனும் சிறிதளவு சேர்த்து சமைத்துண்ணலாம். அன்றாடம் பச்சையாக சில இலைகளை காலையில் மென்று திங்க நல்ல பலனைப் பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும், பல நோய்கள் பறந்தோடும். கீழக்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்றும் இதற்கு பெயருண்டு. துவர்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட இந்த கீழாநெல்லியின் சமூலமே மருத்துவ குணம் கொண்டது.
ஈரலுக்கு பலத்தையும் வலுவையும் அளிக்கும் கீழாநெல்லி மஞ்சட்காமாலை, உட்சூடு, வீக்கம், கட்டி, இரத்தப் போக்கு, சீதபேதி, பித்த மயக்கம், வெள்ளெழுத்து, மாலைக்கண், பார்வை மங்கல், கண், கை, கால் எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து.
கல்லீரல் நோய்களுக்கு
கல்லீரலை குளிர்விக்கும் தன்மைக் கொண்ட கீழாநெல்லி செடியை, இலை, வேர் என அனைத்து பாகத்தையும் எடுத்து அதனை அரைத்து மோரில் கலந்து எடுக்க மஞ்சட் காமாலை, மேக நோய் மற்றும் அனைத்து கல்லீரல் நோய்களும் மறையும்.
கண் நோய்கள் நீங்க
கண் நோய்கள் நீங்க கீழாநெல்லி இலைச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு ஆகியவற்றுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து நன்கு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலனைப் பெறலாம். பார்வைக் கோளாறுகளும் மறையும்.
கல்லீரல் நோய்கள் நீங்க
கரிசலாங்கண்ணி இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் விதம் எடுத்து பசும்பாலில் கலந்து ஒரு மண்டலம் எடுத்துவர இரத்தமின்மை, இரத்த ஓட்டம் தடைப்படல், கல்லீரல் நோய்கள் நீங்கும்.
ஆண்கள் பெண்களுக்கு
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து அரிசி கழுவிய நீரில் கலந்து அரைத்து எடுத்து வர பெண்களின் பெரும்பாடு மறையும். மேலும் கீழாநெல்லி வேர் பொடி, அத்திப்பட்டை பொடி, அசோகப்பட்டை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து வைத்துக்கொண்டு அன்றாடம் காலை மாலை என ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகிவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல், பெரும்பாடு, தாமதித்த மாதவிடாய், வெள்ளை பொன்ற தொந்தரவுகளும் தீரும். ஆண்களுக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு ஓரிதழ் தாமரையை கீழாநெல்லி இலையுடன் சம அளவு எடுத்து நெல்லிக்காய் அளவு ஒரு மண்டலம் உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும் ஆண்மைக் கோளாறுகள், மலட்டுத்தன்மை நீங்கும்.
தோல் நோய்கள் மறைய
தோல் நோய்கள், சருமத்தில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண் போன்ற தொந்தரவுகளுக்கு கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூச நல்ல பயன் கிடைக்கும் இந்த தொந்தரவுகள் விரைவில் ஆறும்.