Welcome to HealthnOrganicsTamil !!!

காட்டுயானம் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

அன்று

நெற் களஞ்சியம், மூன்று போக விவசாயம், கண்ணிற்கு எட்டிய தூரம் வரை சொந்த நிலங்கள், ஏக்கர் கணக்கில் மாந் தோட்டம், வாழை தோட்டம், தென்னந் தோட்டம், எண்ணிலடங்கா வயல்வெளிகள், நூற்றிற்கும் மேற்பட்ட வகைவகையான நாட்டு பசுக்கள், சீறிப்பாயும் காளைகள், கணக்கற்ற ஆடுகள், எல்லா இடங்களிலும் குஞ்சுகளுடன் வளம் வரும் கோழிகள், வாத்துகள், மீன் குட்டை, பண்ணை வீடு…

பண்ணை முழுதும் வலம் வரும் பம்பு செட்டு, வேண்டிய உணவுகள் தங்களின் நிலங்களிலேயே அதுவும் பாரம்பரிய விதைகள், நாட்டு ரக கால்நடைகள், இயற்கையான சூழலில் காலையும் மாலையும் வளம் வர…

ஆரோக்கியமான வாழ்க்கை, ஒன்று கூடிய கிராம மக்கள், தனது வாரிசுகளுக்காக நிலத்தையும், கால்நடைகளையும் உயிருக்கும் மேலாக பாதுகாப்பது, பொருள் பணம் நகை வாகனம் போன்றவற்றிற்கு மேலாக நிலத்தையும் மண்ணையும் கட்டிக்காத்து இவற்றை பேணி வைத்திருப்பதில் பெருமை காட்டிய சமுதாயம் நமது சமுதாயம். 

பெருமைப்பட்டதில் மிக முக்கியமாக வளம் வந்தது அவர்களின் கால்நடைகளும், நிலங்களும். இவற்றிக்கு அடுத்தபடியாய் மற்ற எல்லா செல்வங்களும், வளங்களும் என்று வாழ்ந்துவந்த சமுதாயம் நமது சமுதாயம். அவர்கள் கொண்ட பெருமையில் மண்ணிற்கான பெருமையுடன், நீருக்கான பெருமையும் அடங்கியதுடன் அவை அனைத்தையும் தன் உயிருக்கும் மேலாக பேணிப்பாதுகாத்தனர்.

குட்டையில் தொடங்கி கண்மாய், ஏரி என தொடர நதிகள், கடல் வரை அனைத்து நீர்நிலைகளையும் காப்பதில் பெருமைப்பட்டனர். அனைத்தையும் தாயாகவும், பெண்ணாகவும் மதிப்போடு கருதி பெண்களின் பெயர்களை சூட்டினர். 

காரணம் அவற்றை எந்த பாதிப்பும் இல்லாது தனது வாரிசுகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில். அவர்கள் தங்களது முன்னோர்களிடம் இருந்து பெற்றததை தங்களது குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் பாதிப்பும் இல்லாது வழங்க வேண்டும், இதனையே அனைத்திற்கும் மேலான பெருமையாக நினைத்து வாழ்ந்து வந்தனர்.

தங்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல இயற்கையையும், சுற்றுச்சூழலையும், தனது வம்சத்தையும் காத்து வாழ்ந்த பெருமைக்குரிய சமுதாயம் நமது தமிழர் சமுதாயம். இவையே தனது பெருமைகளாகவும், பெறுமதிப்பாகவும் கருதி வாழ்ந்தனர்.
இந்த சமுதாயத்தின் வழியில் தோன்றிய இன்றைய சமுதாயத்தின் நிலைமை என்ன என்று சற்று யோசித்தால் அனைத்தும் தலைகீழான நிலைமை.

கடைகளில் சென்று உணவிற்கான விளை பொருட்களை (அரிசி தொடங்கி காய்கறி, பழங்கள், மாமிச உணவுகள் வரை) வாங்குவதையே அவமானமாக கருதிய நம் முன்னோரின் வழியில் வந்த நம்மவர்கள் அனைத்தையும் மறந்த ஒரு மாயையில் சிக்கித் தவிக்கும் சூழல் இன்று நிலவுகிறது.

விவசாயமும், நிலமும், பிள்ளைச் செல்வங்களும், அவர்களின் நற் குணங்களும் இரண்டாம்பட்ச பெருமைகளை பெற அவரவர்கள் தங்களுக்கு இருக்கும் குறைகளை தீர்க்காது அதனை பெருமையாக பேசும் அவல நிலை இன்று உள்ளது.

நாற்பத்தைந்து ஐம்பது வயதை கடந்தவர்களுக்கு இன்றைய பெருமைக்குரிய ஒன்று என்றால் அவர்களுக்கு இருக்கும் குறைகளும், நோய்களும் தான். தனக்கு சர்க்கரை வியாதி உள்ளது என்ற குறையை பலரின் மத்தியிலும், விழாக்களிலும், வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற வசனத்திற்கு ஏற்ப ‘எப்படி இருந்த சமுதாயம் இன்று இப்படி ஆயிடுச்சு’ பார்த்தோமா..

இன்று

உலகிலேயே சர்க்கரை வியாதிக்கு தலைநகராக இந்திய இருக்கிறது என்ற கணக்கெடுப்பு வேறு. சம்பாதிப்பதே பின் வரக்கூடிய சர்க்கரை வியாதிக்கு மருத்துவம் செய்ய என்று பெருமையுடன் சம்பாதிக்கும் சமூகமாகவும் இன்றைய சமூகம் மாறிவிட்டது.

மருத்துவச்சட்டம் சில தொந்தரவுகளைப் பட்டியல் இட்டு அவற்றிற்கு மருத்துவம் செய்ய இயலாது என்றும், அவை நோய்கள் இல்லை உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்றும் கூறியுள்ளது. அதில் இந்த சர்க்கரை வியாதியும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு எந்த மருத்துவமும் இல்லை இதனால் பலப்பல உடல் தொந்தரவுகள் அடுத்தடுத்து வர வாய்ப்புள்ளது, வாழ்நாள் முழுதும் இதனை சீராக நிர்வகிக்க உடலை பேணிப்பாதுகாக்கலாம் என்கிறது.

தூங்குபவர்களை தான் எழுப்ப முடியும், தூங்குவதை போல் நடிப்பவர்களை எவ்வாறு எழுப்புவது என்பதை போல் நோயாகவோ அல்லது குறையாகவோ இருந்தால் தான் அதற்கு மருத்துவம் செய்ய முடியும், இது நம்முள் ஏற்படும் குறை இதற்கு எவ்வாறு மருத்துவம் செய்யமுடியும்.

இது நோயாக இல்லாமல் ஒரு குறைபாடாக இருக்கும் பட்சத்தில், அதற்கான மிக முக்கியமான காரணமாக அமைவது தவறான உணவுப் பழக்கமும் வாழ்வியல் பழக்கமும் தான்.

‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்ற பழமொழி இங்கேயும் பயன்பெறும். சிறுவயதில் உணவினை உண்ணும் முறைகளைப் பற்றி நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றெல்லாம் கூட படித்திருக்கிறோம். 

அதுமட்டுமல்லாமல் பல உதவாத வெளிநாட்டு கலாச்சாரத்தையும் பெருமையாக நினைத்து பின்பற்றிவருகிறோம். நல்லதை எப்போதுமே எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் அளவிற்கு வாயை மூடி உணவினை நன்கு அரைத்து உண்ணும் பழக்கம் மட்டும் வேண்டவே வேண்டாம் என்றிருக்கிறோம்.

பலர் வயிற்றில் கிரைண்டர் இருக்கிறது என்று தவறாக படித்திருப்பார்கள் போல, காரணம் வாயில் இருக்கும் அரவை பற்களை மறந்ததே விடுகின்றனர். இதுதான் அனைத்து வியாதிகளுக்கும் முதல் காரணமாக அமைகிறது.

வாயில் பற்கள் மட்டுமல்ல அதனுடன் நாம் உணவினை அரைக்க அந்த உணவு உமிழ் நீருடன் கலக்க பல வேதியல் மாற்றம் அடைந்து பல சத்துக்களாக பிரிக்கப்படுகிறது. இங்கு உணவு மாவுப்பொருளாகவும், புரதம், எண்ணெய் பொருளாகவும் தனித்தனியாக இனம் கண்டு அவற்றிற்கு ஏற்ற ஜீரண சுரப்பிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் சீரான ஜீரணம் நடைபெற்று கணையத்திலிருக்கும் பீட்டா செல்களில் இருந்து இன்சுலின் கிடைக்கிறது.

இவ்வாறு உண்ட உணவு சீராக ஜீரணிக்க அவை இறுதியில் இரத்தத்தில்  சர்க்கரையாக உருமாற அவற்றை கணையத்தின் துணையுடன் சக்தியாக மாற்றப்பெறுகிறது.

இதனால் இரத்திலிருக்கும் சர்க்கரையின் அளவும் குறைகிறது. சர்க்கரை என்ற குறைபாடும் காணாமல் போகிறது. இதனை விட்டுவிட்டு முறையாக உண்ணாமல், முறையாக ஜீரணிக்காது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்கள் பெறமுடியாமல் முதலில் சர்க்கரை என்ற வியாதி வர அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் அடுத்தடுத்த உறுப்புகளும் பாதிப்படைகிறது. ஒருகட்டத்தில் இதன் காரணமாக உயிருக்கே பேராபத்தாகவும் இது விளைகிறது.

இதுமட்டும் தான் காரணமா சர்க்கரை வியாதிக்கு என்கிறீர்களா? இதுமட்டுமல்ல, ஆனால் இது மிக முக்கியமான காரணம். நல்ல சத்தான ரசாயனம் கலக்காத நமது பாரம்பரிய உணவினை நன்கு மென்று உண்ண எண்ணிலடங்கா நோய்களும், தொந்தரவுகளும் குறிப்பாக நீரிழிவும் காணாமல் போகிறது.

சிலருக்கு பிறவியிலேயும், மருந்து மாத்திரைகள் மூலமும், மற்ற உறுப்பு குறைபாடுகள் மூலமும், ஜீரண சுரப்பி குறைபாடுகள் மூலமும், வாழ்வியல் பழக்கவழக்க குறைபாடுகள் மூலமும் இந்த சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதிக்கு  சிறந்த தீர்வு முதலில் உணவு பழக்கத்தை மாற்றுவது. அதிலும் நன்கு மென்று உண்ணக்கூடிய நார்ச்சத்துக்கள் உட்பட பலசத்துக்கள் கொண்ட பாரம்பரிய அரிசிவகைகளும், சிறுதானியங்களும் தான்.

காட்டுயானம் அரிசி சத்துக்கள்

பாரம்பரிய அரிசிகளின் வகையில் சர்க்கரை வியாதிக்கு ஏற்ற அரிசி காட்டுயானம் அரிசி. ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களை பெற்ற இந்த அரிசியில் பலவகையான வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளது. பலபல உடற்கொல்லி நோய்களுக்கு மாமருந்தாகவும் இந்த அரிசி அமைகிறது.

இயற்கை விவசாயத்தில் காட்டுயானம் அரிசி

இயற்கையாக எந்த பூச்சி தாக்குதலும், நோய் தாக்குதலும் இல்லாது அனைத்து மண்வகைகளிலும் வீரியமாக வளரக்கூடிய ரகம் இந்த காட்டுயானம் அரிசி. 

காட்டுயானம் அரிசியின் நிறம் குணம்

சிகப்பு மோட்டா ரக அரிசியான இந்த காட்டுயானம் அரிசிக்கு இந்த பெயர் வரக்காரணம் உண்டு.

காட்டுயானம் அரிசி பெயர் காரணம்

அதாவது நெற்பயிரை இன்று பலர் கண்டுள்ளோம். சுமார் ஒன்றரை அடி மட்டுமே இன்றைய நவீன ரக அரிசி ரகங்கள் விளையக்கூடியது. எந்த வீரியமும் இல்லாது வெள்ளத்திற்கும் வறட்சிக்கு தாக்குபிடிக்காத, எந்த சத்துக்களும் இல்லாது வெறும் மாவுச்சத்தினை மட்டும் கொண்ட நவீன வெள்ளை அரிசியினை உண்ண எல்லா நோய்களும் குறிப்பாக சர்க்கரை   வியாதி வரும்.

இதற்கு மாறாக காட்டுயானம் அரிசி விளையக்கூடிய வயக்காட்டில் யானையே புகுந்தாலும் அதனை காணமுடியாத அளவிற்கு உயர விளையும் அரிசி இந்த காட்டுயானம் அரிசி.

அதுமட்டுமல்லாது யானையைப் போல் உடலுக்கும் மனதிற்கும் பலத்தையும், உறுதியையும் கொடுக்கக் கூடிய அரிசி இந்த காட்டுயானம் அரிசி.

சூரியனிலிருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பொறுமையாக பெற்று உறுதியாக விளையக்கூடிய இந்த அரிசியினை உண்ண தீராத வியாதிகளும் குணமாகும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த இளம் சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல  பலனைப் பெறலாம்.

என்ன உணவுகள் செய்யலாம் இந்த காட்டுயானம் அரிசியில்

இட்லி, தோசை, அவல், புட்டு, இடியப்பம், சாதம், பழஞ்சோறு என அனைத்து வகை உணவுகளையும் இந்த அரிசியில் தயாரிக்கலாம். கருவேப்பிலைசேர்த்த பழஞ்சோற்றினை தினமும் காலை வேளையில் உண்டுவர பல வியாதிகள் குணமாகும்.

அன்றாடம் மதியம் தவிடு நீக்காத காட்டுயானம் அரிசியில் செய்த சாதத்தினை குழம்பு, கூட்டு, ரசம், மோர் சேர்த்து நன்கு மென்று உண்ண பலவருடம் பாடாய்ப்படுத்திய சர்க்கரைவியாதியின் தாக்கம் மறையும்.

மண்பாத்திரத்தில் வேகவைத்த சாதத்திற்கு தனிச்சிறப்பும், அபாரமான குணமும் உண்டு. அதனுடன் மாலை அல்லது இரவிலும் இந்த தவிடு நீக்காத காட்டுயானம் அரிசி பலகாரத்தை தொடர்ந்து உண்ண உடலும் தேகமும் பொலிவோடு பேணிப்பாதுகாக்கப்படும்.

காட்டுயானம் அரிசி சமைக்கும் முறை

சாதமாக இந்த காட்டுயானம் அரிசியினை தயாரிக்க இந்த அரிசியினை முதலில் சுமார் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். பின்னர் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நன்கு முதல் ஐந்து கப் தண்ணீர் வரை சேர்த்து நன்கு கொதிவந்த உடன் அரிசியினை சேர்க்கவும்.

பத்து நிமிடத்திற்கு பின் சிறுதீயில் சுமார் இருபது முதல் முப்பது நிமிடம் வரை வேகவைத்து பின் தீயை அணைத்து அரிசியினை சிறிது நேரம் மூடிவைக்கவும். பின் நன்கு வெந்து மலர்ந்திருக்கும் சிகப்பு காட்டுயானம் சாதத்தினை அனைத்து காய்கறியுடனும் சேர்த்து உண்ணலாம்.

பெருமைப்பட தமிழர் பாரம்பரியம் பலவற்றை கொண்டிருக்க அவற்றை மாயையால் மறந்துள்ளோம். எதனைப் பெருமையாக நினைக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, மறந்த நமது நல்ல பாரம்பரிய உணவினை முதலில்  உட்கொள்வோம், அவற்றால் உடலும் மனமும் தெளிவாக அதனை பெருமையாக ஊருக்கும் உலகிற்கும் பறைசாற்றுவோம்.

மேலும் காட்டுயானம் நெல்லைப் பற்றி தெரிந்துக் கொள்ள – காட்டுயானம் நெல். காட்டுயானம் அரிசி சமைக்கும் முறை – காட்டுயானம் சாதம்.

5/5 - (1 vote)
சிந்தனை துளிகள் :

கீரைத் தண்டு பிடுங்க ஏலோலப் பாட்டா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!