கருவேப்பிலை – நம் கீரை அறிவோம்

கருவேப்பிலை / Curry Leaves Benefits

உணவுக்காக பயன்படுத்தி பின் தூக்கி எறியும் இலைகளில் மிக முக்கியமான இரண்டு இலைகள் வாழை இலையும் கருவேப்பிலையும். வாழவைக்கும் வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்களைப் போல் கருவேப்பிலையிலும் அதிக சத்துக்களும் மருத்துவகுணங்களும் உள்ளது. பெண்கள் கருப்பையில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் இலை என்பதால் இதற்கு கருவேப்பிலை எனப் பெயர் வந்ததாக கூறுவர். இந்த கருவேப்பிலையை வாசனைக்காகவும் அதன் தனிப்பட்ட சுவைக்காகவும் உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் அதைவிட மிக முக்கியமான ஒன்று  கரு வேப்பிலையில் உள்ள சத்துக்கள். மேலும் உணவில் உள்ள நச்சுக்களை நீக்கவும் இந்த கருவேப்பிலை பயன்படுகிறது.

கருவேப்பிலைபயன்கள்

கருவேப்பிலையில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளது. அன்றாட உணவில் கருவேப்பிலையை பயன்படுத்திவர உடலிலுள்ள பல தொந்தரவுகள் சீராகும். சமையலில் சேர்த்து உணவில் எறியப்படும் இலை அல்ல இந்த கருவேப்பிலை. தனித்துவம் கொண்ட சத்துக்கள் அதிகம் உள்ள இலை இந்த கருவேப்பிலை. குறிப்பாக இரும்பு சத்து குறைபாட்டால் ரத்தசோகை உள்ள பெண்கள் அன்றாடம் இந்த கருவேப்பிலையை பயன்படுத்த ரத்த சோகையில் இருந்து வெளிவருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பெற முடியும். சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கும்.

குறிப்பாக கருதரித்திருக்கும் காலத்தில் பெண்கள் அன்றாடம் இந்த கருவேப்பிலையை பயன்படுத்த ஆரோக்கியமான குழந்தையை மட்டுமல்லாமல் சுகப்பிரசவத்திலும் குழந்தையை பெற்றெடுக்க முடியும். அந்த காலங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்றவற்றிற்கும் இந்த கருவேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். 

பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிகள், கருப்பை கட்டிகள், கருப்பையில் ஏற்படும் எல்லா விதமான தொந்தரவுகளுக்கும் கருவேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கண் பார்வை மேம்பட, தோல் பளபளப்பு அதிகரிக்க, முடி வளர்ச்சி சிறக்க கருவேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கும். கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை நீக்கவும், மற்ற உறுப்புகளில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றவும் கருவேப்பிலை துணைபுரிகிறது.செரிமான தொந்தரவு உள்ளவர்கள் கருவேப்பிலையை மென்று தின்பதால் செரிமான கோளாறுகள் விரைவில் குணமாகும். செரிமான கோளாறுகள் சீராவதால் உடல் பருமனில் இருந்து எளிதாக வெளிவரலாம். 

கருவேப்பிலை பழம்

மொத்தத்தில் ஒன்று இரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு அல்ல இந்த  கருவேப்பிலை. உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமான இயக்கத்திற்கு கருவேப்பிலையின் பங்கு பெரும்பங்கு. அதனாலேயே அன்றாடம் அனைத்து உணவுகளையும் தயாரிக்க கருவேப்பிலையை நாம்  பயன்படுத்துகிறோம்.

வாடிடினும் தங்கருமை வாடாக் கறிவேம்பு
தேடக் கிடைக்கா விருந்து

கறிவேப்பிலை மிக நன்றாகக் காய்ந்து வாடினாலும்,தன்னகத்தே அடங்கியுள்ள உயிர் சத்துக்கள், மணமும் குணமும் கூட மாறுவதில்லை.

(2 votes)