கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

படைப்பின் அதிசயத்தில் ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. தனித்துவம் மட்டுமல்ல ஒவ்வொன்றும் தனித்தன்மையுடனும் தனி அடையாளத்துடனும் உள்ளது.  

பலவற்றை பார்க்க நமக்கு எந்த வேறுபாடும் தெரியாது. ஏன்.. ஒன்றும் அதிசயமாகக் கூடாத தெரியாது. அதற்காக உண்மை காணாமல் போய்விடுமா என்ன?

அதுவும் மனிதர்களான நமக்கு சொல்லவா வேண்டும், ஆறறிவு உள்ளது நிச்சயம் உண்மைதான். ஆனால் எதையும் புரிந்துகொள்ள தேவைப்படும் அவகாசத்தை கொடுக்க கூட நமக்கு நேரம் இல்லை. 

தென்னகத்தில் இருக்கும் நமக்கு வட நாட்டவர் பத்து பேரை முதல் முதலில் பத்து நிமிடம் பார்த்துவிட்டு பின் இரண்டு நாள் கழித்து அவர்களின் முகத்தை நினைவு படுத்தி பார்க்கச் சொன்னால் அனைவருமே ஒருவரைப் போலவே தோன்றும். அதிலும் வட கிழக்கு மாநில மக்களை பார்த்தால் வேறுநாட்டவரை போலவும், ஒருவருக்கு ஒருவர் ஒரே மாதிரியும் தோன்றும். 

இன்னும் சற்று தள்ளி ஆசியாவில் சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்த்தால், அனைவரும் ஒரே மாதிரி தோன்றும். அதாவது சீனர்களும், ஜப்பானியர்களும் வெவ்வேறு நாட்டவர்கள், அவர்களின் கண்கள், நிறம், உயரம், முக அமைப்பு அனைத்துமே வெவேறானது. ஆனால் நமக்கோ புதிதாக பார்க்க அனைவரும் ஒருவரைபோலும், ஒவ்வொருவரையும் தனியாக அடையாளம் காண்பது சற்று சிரமமான செயலாகவும் தோன்றும்.

புதிதாக பார்க்க அவ்வாறு தோன்றினாலும், பழகப்பழக அவர்களின் வேற்றுமையை புரிந்து கொள்ள முடியும் என்பதும் உண்மை. அவ்வாறு புரிந்து கொண்டவர்களுக்கு தான் தெரியும் ஒருவரைப் போலவே மற்றவர் இல்லை அதிலும் ஒரு நாட்டவர்களுக்கு, ஒரு தட்பவெப்ப இடத்தில் வாழ்பவர்களுக்கும் பல பல வேற்றுமைகள் உள்ளது என்பது.

இவ்வாறு இருக்க அவசர யுகத்தில் ஒன்றை ஆராய்ந்ததோ அல்லது பொறுமையாகவோ பார்க்காமல் அனைத்துமே ஒன்று, எல்லாமே ஒன்றைப்போலவே உள்ளது என்ற முடிவிற்கு வருகிறோம். 

இன்றைய நவீனமும், அறிவியலும் தெரியாத நம் முன்னோர்கள் அன்று ஒன்றைப் போல் மற்றொன்று மாற்றுமல்ல ஒருவரின் விரலில் இருக்கும் ரேகை கூட மற்றவர் கையில் இல்லை என்ற அறிவியலை தெரிந்து வைத்து அதனையே முக்கியமான ஆவணங்களுக்கு சான்றாகவும், அத்தாட்சியாகவும் பயன்படுத்தினர்.

அவர்களின் அறிவையும், ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களை கைநாட்டவர்கள் என்று எள்ளி நகையாடிணோம். மெத்த படித்து கையெழுத்து போட பிரியப்பட்டோம். 

இன்றைய அறிவியல் கையெழுத்தை நிராகரித்து கைநாட்டே உண்மையானது. ஒருவருக்கு இருக்கும் கைரேகைகள் மற்றவருக்கு இருக்காது என்று ஐம்பது வருட பஞ்சாங்கத்தை புரட்டி எடுக்க அரசாங்க அடையாள அட்டைகளான ஆதார் அட்டை தொடங்கி அனைத்திற்கும் கைநாட்டை வாங்க தொடங்கிவிட்டது.

கைநாட்டா என்று கேவலமாக நகைத்தவர்களும் இன்று கைநாட்டை வைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது படைப்பில் மனித உருவங்களில் மட்டும் வேற்றுமை இல்லை ஒவ்வொரு சின்னச்சின்ன அடையாளங்களில் வேற்றுமை உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. நிதானத்துடன் ஆழமாகவும், ஆராய்ந்து பழகியும் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலை மனிதர்களுக்கும், ரேகைக்கு மட்டுமல்ல நமது உணவு தானியத்திற்கும், பாரம்பரிய அரிசிக்கும் தான். கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகிவரும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானியங்களில் சில ரகங்களே இருந்தாலும் ஒன்றுக்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடு தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம்.

வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும் பலரின் குழப்பம் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது, அவற்றின் தனி சுவையை எவ்வாறு அறிவது என்பது தான்.. இதற்கு விடை புதிதாக ஒன்றை பார்த்தவுடன் அதாவது பெரிய உருவமான மனிதர்களையே அடையாளம் காணமுடியவில்லை.

பார்க்கப் பார்க்கவும், பழகப் பழகவும் தான் தெரியும், அதே நிலை தான் சிறுதானியங்களுக்கும். தொடர்ந்து சிறுதானியங்களை பயன்படுத்துவதாலும், சுவைப்பதாலும் மட்டுமே அதனை வேறுபடுத்தி பார்க்க முடியும்.

சிறுதானியங்கள் சரி, பாரம்பரிய அரிசிகளுக்கும் இந்த நிலை உள்ளது. அரிசியைப் பற்றியும், பாரம்பரிய அரிசியைப் பற்றியும், சிகப்பு அரிசி, கருப்பு அரிசி, கைக்குத்தல் அரிசியைப் பற்றியும் நமது பகுதிகளில் பல தகவல்களைப் பற்றி அறிந்து கொண்டாலும், பொதுவாக சிகப்பு அரிசியைப் பார்த்தவுடன் பலர் கூறுவது இது கார் அரிசி என்று.

ஆம், பலரின் மனதில் பாரம்பரிய அரிசிகள் பலவற்றை பற்றி தெரிந்திருந்தாலும் சிகப்பரிசியைக் கண்டவுடன் கூறும் வார்த்தை கார் அரிசி என்று.. 

அப்படியானால் கார் அரிசி என்பதற்கும் சிகப்பரிசிக்கும் என்ன சம்பந்தம். ஏன் இந்த சிகப்பரிசியை கார் அரிசி என்று பலர் பொதுவாக கூறுகின்றனர் என்ற கேள்வி உள்ளது.

கார் அரிசி என்பது பொதுவாக குறைந்த மாதங்கள் விளையும் சிகப்பரிசி. பெரும்பாலான இடங்களில் அதுவும் வட தமிழகத்திலும் மற்ற மாவட்டங்களிலும் விளையும் அரிசி ராகம் இது.

அதிக இடங்களில் விளையக் கூடிய சிகப்பரிசி ரகமாக இருந்தது மட்டுமல்லாது குறைந்த மாதம் (சம்பாவைப் போல் ஆறுமாதம் இல்லை) விளைவித்ததாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பரிச்சியமான ரகமாக இருந்தது.

காலப் போக்கில் பாரம்பரிய ரகங்கள் பல காணாமல் போனாலும் சிகப்பரிசி என்றவுடன் தங்களுக்கு தெரிந்த கார் அரிசியாக இது இருக்குமோ என்ற பெருமை உணர்ச்சியால் பலர் சிகப்பரிசியைக் கண்டவுடன் கார் அரிசி என்று மலரும் நினைவுகளாக தங்களின் மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

இதனாலேயே இத்தனை பாரம்பரிய சிகப்பரிசிகள் தனித்தன்மை, மருத்துவகுணம், சுவை, பெயருடன் இருந்தாலும் பொதுவாக கார் என்று அழைக்கின்றனர்.

இனியாவதும் சிகப்பரிசிக்கும் கார் அரிசிக்கும், மற்ற பாரம்பரிய அரிசிக்கும் பல பல வேறுபாடுகள் உள்ளது என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொன்றிற்குமான தனிச்சிறப்பைக்கொண்டு அவற்றை பயன்படுத்தி கை ரேகையைபோல் பார்க்க ஒன்றைப்போல் இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் தனிச்சிறப்பும், தனித்தன்மையும், சிறப்பு மற்றும் மருத்துவ குணங்களும் உள்ளது என்று ஆழமாகவும் பழகி பயன்படுத்தியும் தெரிந்து கொள்ளவோம்.

‘நான் அவனல்ல’ என்பதை ஒவ்வொரு அரிசியிலும் மறக்காமல் கவனமாக நினைவு படுத்திக்கொண்டு இனியாவதும் இந்த அரிசிகளை பார்ப்போம். 

சரி, இனி பாரம்பரிய கார் அரிசியின் சிறப்பினைப் பற்றி பார்ப்போம்.

கார் அரிசி

ஆடிமாதத்தில் விதைத்து தைமாதம் அறுவடைக்கு வரும் சம்பா ரகங்கள் பலவற்றை பார்த்த நாம் ஆவணி-புரட்டாசியில் அதாவது மழைக்காலமான கார் காலத்தில் விதைக்கும் அரிசி ரகங்களை கார் அரிசி என்பர். இந்த கார் அரிசியில் பல பல ரகங்களும் உள்ளது.

உதாரணத்திற்கு பாரம்பரிய கார் அரிசி, குள்ளக்கார் அரிசி, பூங்கார் அரிசி, கருத்தக் கார் அரிசி, சித்திரைக்கார் என பல உள்ளது.

கார் அரிசி சத்துக்கள்

சிகப்பரிசியான பாரம்பரிய கார் அரிசி பல பல மருத்துவகுணம் கொண்டது. நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது. 

கார் அரிசியில் என்ன உணவு தயாரிக்கலாம்

கார் அரிசி என்றவுடன் புட்டு அரிசி என்ற பொதுக்கருத்து உள்ளது. புட்டிற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து உணவினையும் இந்த கார் அரிசியில் தயாரிக்கலாம்.

இந்த கார் அரிசியினை வேகவைத்து  வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை, தக்காளி சேர்த்து கடலை சாதம் தயாரித்து கொடுக்க உடலுக்கு தேவையான போலிக் அமிலம் குறையாமல் கிடைக்கும். இதனால் உண்பவருக்கு மன அமைதி மட்டுமல்லாது உடலில் விஷப் பொருட்கள் சேராமல் இருக்கும்.

கார் அரிசியினை மாவாக அரைத்து அதில் எலுமிச்சை இடியாப்ப சேவை செய்ய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.

விருப்பமும் சுவையும் மட்டுமல்ல இதனை உண்பதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் சீராகப் பெறுவதுடன் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளும் நீங்கும்.

கார் அரிசி மூன்று பங்கிற்கு ஒரு பங்கு உளுந்தம் பருப்புடன் சிறிது வெந்தயம் சேர்த்து இட்லி மாவு அரைத்து எட்டு மணிநேரம் புளிக்க வைத்து அதனுடன் தக்காளி சட்னி செய்து உண்ண வயதானவர்களுக்கும் உடல் எலும்புகள் மற்றும்  திசுக்கள் பலம் பெறுகிறது.

உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நல்ல போஷாக்கையும், சதைப்பற்றையும் அளிக்கிறது. அதுமட்டுமல்ல இதனை தொடர்ந்து உண்டுவர உடல் தொய்வில்லாமல் புத்துணர்வுடன் காணப்படும்.

சிகப்பு மோட்டா கார் அரிசியில் சுவையான பிஸிபேளா பாத் தயாரித்து உண்ணலாம். சன்ன ரக பாலிஷ் அரிசியிலேயே உணவை உண்ட நமக்கு இந்த அரிசி சாதம் சற்று பெரிதாக தோன்றினால் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்தும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு கார் அரிசியினை ஒன்றும் பாதியுமாக உடைத்து அதனுடன் துவரம் பருப்பு, கேரட், பீன்ஸ், பட்டாணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பிஸிபேளா பாத் தயாரிக்க சுவை பிரமாதமாக இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான பல சத்துக்களும் கிடைக்கும்.

இந்த உணவால்  உடலுக்கு தேவையான மக்னீசியம் சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்கள் சீராக கிடைக்கிறது. உடலில் ஏற்படும் குடல் புழுக்களால் அவதிப்படுவோருக்கு மாமருந்தாக இது அமைகிறது. நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. 

இவ்வாறு பல பல உணவுகளை தயாரித்து கார் அரிசியுடன் உண்ண உடல் பலப்படும். பல சத்துக்கள் நிறைந்த இந்த பாரம்பரிய அரிசியினை தொடர்ந்து பக்குவமாக சமைத்தும், கவனமாக சுவைத்தும் பயன்படுத்திவர பல நோய்களுக்கு இது மாமருந்தாகும்.

கார் அரிசி என்பது ஒரு வகை பாரம்பரிய ராகம் என்பதையும், சிகப்பாக இருக்கும் அரிசியெல்லாம் கார் அரிசி இல்லை என்பதனையும் மறவாமல், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தன்மையும், சுவையும், குணமும் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்.

புதிதாக இந்த அரிசியினைப் பற்றி கேள்விப் பட அனைத்தும் ஒன்றைப்போல் தோன்றும் ஆனால் ஒவ்வொன்றும் வெவேறானது. 

(4 votes)