பொதுவாக சிவப்பாக அல்லது அடர் நிறத்தில் இருக்கும் அனைத்து விதமான அரிசியையும் கார் அரிசி என்று கூறும் நிலை நமது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் அரிசி, உணவுகளை கார் அரிசி உணவுகள் என்றும் கூறுவார்கள். இதற்கு காரணம் பல சிவப்பரிசிகள் கார் பட்டத்தில் விளைந்தது.
சிகப்பரிசி
பூங்கார், குருவிக்கார், அறுபதாம் குறுவை என அறுபது நாளில் விளையும் நெல் ரகம் தொடங்கி ஆறு மாதத்திற்கும் மேல் விளையும் நெல் ரகங்களும் பல சிகப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. காலத்திற்கும், படத்திற்கும் ஏற்ப அதன் பெயர்கள், வயது, தன்மை, இயல்புகள் வேறுபடும். இவை அனைத்துமே ஒரே நெல் ரகம் இல்லை. சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒவ்வொரு நெல் ரகமும் வெவ்வேறானது.
கார் பட்டம் / கார் பருவம்
பொதுவாக கார் பட்டம் / கார் பருவம் என்பது ஆவணி – புரட்டாசி பட்டத்தை குறிப்பிடுவது. இந்த காலத்தில் விளையும் பல கார் ரக நெல்லில் ஒரு வகையான நெல் கார் நெல். நம் முன்னோர்கள் இந்த கார் நெல்லை வெள்ளம் வந்த காலத்திலும் பள்ளமான இடத்தில் விதைத்து நல்ல அறுவடையை செய்துள்ளனர்.
கார் அரிசி வயது
இந்த கார் நெல் ரகம் நடவு செய்து விளைச்சல் எடுக்க சிறந்த வகை. சிவப்பு நிற கார் நெல் விதைத்து, இருபது – இருபத்திரண்டு நாளில் நடவு செய்து அறுவடைக்கு தயாராக நூற்று முப்பது நெல் ஆகும். இதன் அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இது மோட்ட ரக அரிசி வகையை சேர்ந்தது.
கார் அரிசி விளைச்சல்
எவ்வளவு பெரிய வெள்ளம், புயல், மழை வந்தாலும் நடவு செய்து சீராக ஓரிரு வாரங்கள் நீர்பாய்ச்ச வேர் ஊன்றி, பச்சைபிடித்துவிட்டால் பின் எந்த சூழலிலும் பயிர் அழுகாது.
வெள்ளத்திலும் கார் அரிசி
மழையிலும் வெள்ளத்திலும் மூழ்கினாலும் நீருக்குளேயே இந்த கார் பயிர் பூத்து, பால் பிடித்து கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி நல்ல விளைச்சலை அளிக்கும் ஒரு அற்புதமான ரகம்.
உறங்கும் கார் அரிசி
அதுமட்டுமில்லாமல் வெள்ளமும் வற்றாமல், மழையும் நிற்காமல் நீண்ட காலத்திற்கு இருந்தாலும் இந்த கார் நெல் நீரில் மூழ்கியிருந்தாலும் முற்றி அறுவடைக்கு தயாரான நெல் மீண்டும் முளைத்து விடாது. மீண்டும் அடுத்த கார் பருவத்தில் மட்டுமே முளைக்கும் திறன் கொண்ட நெல். அதுவரை விதை உறக்கம் கொண்ட சிறந்த ரகம் என்பதாலேயே இதற்கு பிரத்தியேகமாக கார் நெல் என்று பெயர் வந்திருக்கலாம். விவசாயிகளுக்கு எந்த சூழலிலும் இழப்பை அளிக்கத சிறந்த ரகம்.
கார் அரிசி புட்டு
இந்த கார் நெல் அரிசியை இன்றும் பல விசேஷங்களுக்கும் விழாக்களிலும் பிரத்தியேகமாக பயன்படுத்துவதுண்டு. இந்த அரிசியில் புட்டு செய்து உண்ண நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும். கார் அரிசி அவலும் தென்னிந்தியாவில் பிரத்தியேகமாக அனைவராலும் விரும்பும் உணவு.
கார் அரிசி உணவுகள்
இட்லி, தோசை போன்ற பலகரங்களுக்கும் சாதமாகவும் செய்து உண்ண உடல் ஆரோக்கியம் மேம்படும். சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் ரகம். மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, சத்து குறைபாடு போன்றவற்றிற்கு சிறந்தது. வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த அரிசி. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற அரிசி. சில இடங்களில் இந்த கார் அரிசியை மட்ட அரிசி என்றும் கூறுவதுண்டு.
இந்த அரிசியை நான்கு முதல் ஆறு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி, அரைத்து புட்டு செய்து உண்ண அனைவரும் விரும்புவர்கள். அந்தளவிற்கு சுவையான அரிசி.
பெரியவர்கள், குழந்கைகள் இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொள்ள உடல் பலப்படும், தேக புஷ்டியை அளிக்கும். எலும்புகளுக்கு உறுதியையும், எலும்புகளில் வரும் நோய்களை தீர்க்கவும் உதவும் அரிசி.