Solanum Surattense; Solanum Xanthocarpum; கண்டங்கத்திரி
கிராமப்புரங்களில், தரிசு நிலங்களில் அதிகமாக இந்த முள் தாவரம் கண்டங்கத்திரியைப் பார்க்க முடியும். பொதுவாக முள்கத்திரி என்ற கத்திரி வகைத் தாவரத்தை கிராமங்களில் அதிகமாக கண்டங்கத்திரி என்பதுண்டு. ஆனால் படத்தில் இருக்கும் தாவரமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்டங்கத்திரி மூலிகை. சுவாச காசக்கினி, கப நாசினி, பொன்னிறத்தி, முள் கொடிச்சி, சிங்கினி, கன்னங்கத்திரி, பாப்பார முள்ளி, கறி முள்ளி என பல பெயர்கள் இந்த கண்டங்கத்திரிக்கு உண்டு. நவ மூலிகைகளில் ஒன்றான மிக முக்கியமான மூலிகை இது.
கண்டங்கத்திரி தாவரத்தில் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் முட்கள் இருக்கும். இலைகளும் வித்தியாசமாக இலைகளின் ஓரங்களில் பிளவுற்று பற்கள் போன்று இருக்கும். இலைகள் மாற்றடுக்கில் இருக்கும். இதன் பூக்கள் கொத்தாக நீல நிறத்தில் சிறு பூக்களாக இருக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்திலும் பழுத்தப்பின் மஞ்சள் நிறத்தில் பழங்கள் இருக்கும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என இந்த செடியின் அனைத்து பாகங்களும் சமூலமுமே மருத்துவகுணம் கொண்டது.
உடலில் ஏற்படும் கோழையை அகற்றி, சிறுநீரைப்பெருக்கும் ஆற்றலும் கொண்ட கண்டங்கத்திரி குடல் வாயுவை வெளியேற்றும் தன்மைக் கொண்டது. மேலும் மலச்சிக்கல், பல்வலி, கப நோய்கள், ஆஸ்த்மா, இருமல், நுரையீரல் தொந்தரவுகள், தலை வலி, மூட்டு வலி, மூலம், தலை நீரேற்றம், தொண்டைக்கட்டு ஆகியவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும். கண்டங்கத்திரி வேரை குடிநீராக சுண்டக் காய்ச்சி பருக சிறந்த பலனை அளிக்கும்.
கண்டங்கத்திரி உணவும் மருத்துவமும்
கண்டங்கத்திரி காய்களை குழம்பு செய்தும் உணவுடன் சேர்த்து உண்ணலாம். கண்டங்கத்திரி இலைகளை கசாயம் செய்து பருகலாம் அல்லது இரசம் செய்தும் உட்கொள்ளலாம். நுரையீரல் தொந்தரவுகள் மறையும். கண்டங்கத்திரி சமூலத்தை நன்கு அரைத்து சிறிதளவு நீரில் கலந்தும் பருக கப நோய்களுக்கு சிறந்தது. கண்டங்கத்திரி சமூலத்துடன் இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து இடித்து சிறிதளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்த இளைப்பிருமல் வெளியேறும்.
பற்களுக்கு கண்டங்கத்திரி
நன்கு பழுத்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் கண்டங்கத்திரி பழத்தின் விதை நெருப்பிலிட்டு வரும் புகையை சுவாசிக்க பல் வலி நீங்கும், வாயிலுள்ள கிருமிகள் மடியும்.
சளிக்காய்ச்சல், கபநோய்களுக்கு
கண்டங்கத்திரி வேருடன் கொத்தமல்லி, சீரகம், சுக்கு சேர்த்து நீரில் சுண்டக் காய்ச்சி தினமும் மூன்று வேளை பருக நுரையீரலினால் தோன்றும் காய்ச்சல், சளிக்காய்ச்சல், கபநோய்கள் அகலும்.
தொண்டைக்கட்டு நீங்க
கண்டங்கத்திரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து அரை கப் என அருந்தி வர தொண்டைக்கட்டு நீங்கும்.