உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் நாட்டுக் கம்பு
முற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு).
கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையை விட) விட்டமின் ‘A’ மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் ‘A’ சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் ‘A’ க்கான ஆதாரம் எனலாம்.
நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் ‘A’ அவசியம். நார்ச் சத்து, விட்டமின் ‘B’, விட்டமின் ‘E’, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.
பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங் களி, கம்பங் கூழ் தான். அவை மட்டும் தானா, இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். எளிமையாக கம்பினை முளைக்கட்டி மாவாக திரித்து முளைக்கட்டிய கம்பு மாவாக பக்குவப்படுத்தி அதனைக்கொண்டு பல பல உணவுகளையும் செய்யலாம்.
கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி, கம்பு ஜூஸ் / முளைகட்டிய கம்பு பால் என்று பல பலகாரவகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி, கம்பு முறுக்கு, கம்பு லட்டு என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த தானியமான இந்த கம்பினைக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதேனும் ஒரு உணவை அவ்வப்பொழுது தயார் செய்து உட்கொள்ள உடல் ஆரோக்கியம் கூடும்.