கி.மு. 2500 ஆண்டுக்கு முன்பிருந்தே ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கம்பு உண்டதாகக் குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சிறுதானியங்களை உபயோகிப்பது இன்றும் பழக்கத்தில் உள்ளது. அவர்கள் Bajra Roti என்று இன்றும் தங்களின் காலை உணவாக இதனை உட்கொள்கின்றனர்.
தமிழகத்திலும் நம் முன்னோர் தினமும் காலையில் கம்பும் மாலையில் கேழ்வரகும் உண்டு வந்தனர். இவ்வாறு உண்டு வர இருவேளை உணவிலேயே எல்லா சத்துகளும் கிடைத்தன. காய்கறிகள், பழங்கள் உண்ணாமலே சத்துகள் கிடைக்கும் போது இது ஏழைகளின் நல்ல உணவாக நினைத்திருந்த காலம் போய் இப்போது ஆரோக்கியத்துக்காக எல்லோரும் கட்டாயம் உண்ண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் கம்பில் அதுவும் நாட்டு கம்பில் பல உணவுகளை தயாரிக்கலாம்.
அது என்ன நாட்டுக் கம்பு என்கிறீர்களா?
பொதுவாக நாட்டுக் கம்பு என்பது கீழிருக்கும் இந்த படங்களில் பார்க்கும் வடிவத்திலும் அளவிலும் இருக்கும். அதாவது வெந்தயம் நிறத்திலும், எள்ளைப் போன்ற வடிவத்திலும் சன்னமாகவும் இருக்கும். இவைதான் பாரம்பரிய கம்பும்.
நவீனம் வளர்ந்ததில் பாரம்பரிய நம் கம்பும் மாறிவிட்டது. இன்று பெரும்பாலும் கடைகளில் கிடைப்பது உருட்டுக் கம்பு எனப்படும் கம்பெனி கம்பு அதாவது ஹைப்ரிட் கம்புகளைதான். இவற்றை தவிர்த்து நம் பாரம்பரிய நாட்டுக் கம்பினை உட்கொள்வதால் ஆரோக்கியம் சிறக்கும்.
நாட்டுக் கம்பில் உள்ள சத்துக்கள்
இந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் முதலிடத்தைப் பிடிக்கும் கம்பில் நார்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் கொண்டுள்ளதால் உணவுச்சத்து தரத்தில் நம் நாட்டுக்கம்பு முதலிடம் வகிக்கிறது.
வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் தானியமாகவும் நம் கம்பு இருந்து வந்துள்ளது. பூச்சிகொல்லி கிடையாது, குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராகவும் கம்பு உள்ளது.
நோய்களுக்கு நல்லது
நாட்டுக்கம்பின் சத்துக்களையும் அதன் வீரியத்தையும் அறிந்த நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு சேர்த்து வந்தனர். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் நம் நாட்டுகம்பு உணவை உட்கொள்ள அதனால் மலச்சிக்கல் அடியோடு காணாமல் போவதுடன் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டினையும் தனித்து உடலை சமநிலையில் வைக்க உதவும்.
அஜீரண கோளாறை சீராக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இன்றைய சக்கை அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்கும் மிகச் சிறந்த தானியமும் நம் கம்பு தான்.
90 நாட்களில் விளையும் கூம்பு வடிவ கம்பு சித்திரைபட்டம், மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் என்று வருடத்தில் பல பட்டங்களில் சிறப்பாக விளையும்.
இவ்வளவு உணவுகள் தயாரிக்கலாம்
சிறுதானியங்களில் இளவரசியான கம்பு என்றவுடன் பலருக்கு கஞ்சி, கூழ் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் சுவையில் அட்டகாசமாக இருக்கும் கம்பு தானியத்தில் இட்லி, தோசை, அடை, சட்னி, கொழுக்கட்டை, புட்டு, உப்புமா தொடங்கி அனைத்து சிற்றுண்டிகளும் பலகாரங்களும் தயாரிக்கலாம். மேலும் கம்பை லேசாக உடைத்தால் கிடைப்பது கம்பரிசி. அதனைக்கொண்டு கம்பு சோறு, இனிப்பு, கார பொங்கல் என்று சாத வகைகளையும் தயாரிக்கலாம்.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். பழக்கத்தையும் வேலையையும் உடனடியாக மற்ற இயலாதவர்கள் உடனடியாக கம்பு உணவிற்கு மாற ஓரளவு உடலின் வலிமையையும் ஆரோக்கியமும் சீராகும்.
உடல் உஷ்ணத்தை சற்று அதிகரித்து மேலும் மலச்சிக்கலை அதிகப்படுத்தும் வட இந்திய உணவான கோதுமைக்கு சிறந்த மாற்று உணவு நம் நாட்டுக் கம்பு. எளிதாக ரொட்டியும் உப்புமாவும் தயாரித்து காலையும் மாலையும் சிறந்த முறையில் உண்ணலாம்.
உப்புமா மட்டுமில்லாது, ரொட்டி, இட்லி என்று செய்தும் உண்டு வரலாம். அதைப்போல லேசாக கம்பை உடைத்து ரவையாக இல்லாமல் சற்று பெரிதாக உடைத்து கம்பஞ் சோறு செய்து குழம்பு, பொரியல், கூட்டு வைத்தும் மதிய உணவாக உண்ணலாம். மேலும் கம்பைப்பற்றியும் கம்பில் செய்யும் உணவுகளையும் பற்றி தெரிந்துக்கொள்ள நாட்டுக் கம்பு பகுதிக்கு இணையவும்.
இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு பிடித்தமான வகைகளிலும் முறுக்கு, லட்டு என்றும் தயாரித்தும் கொடுக்கலாம். கம்பு மாவை நன்கு வாசனை வரும் வரை சூடேற்றி அதனுடன் நாட்டுச்சக்கரை சிறிது பசு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க சுவையான சத்தான கம்பு லட்டு தயாராகும்.
சிறுதானிய இளவரசி என்று கூட இந்த கம்பை சொல்லலாம். மலிவாகவும் அதே சமயம் சத்துகள் குறைவில்லாமலும் கிடைக்கும் தானியம் நம் நாட்டுக் கம்பு. குறிப்பிட்ட இவ்வளவு நன்மைகளும், சத்துக்களும் நாட்டுக் கம்புக்கே உள்ளது. சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் உருட்டு கம்பை தவிர்த்து நாட்டுக் கம்பை வாங்கி பயன்பெருவோம்.